’ஆனந்தி, நிக்கி கல்ராணி கூட நான் ஏன் அதிகமா நடிக்கிறேன்னா...!?’ - ஜி.வி.பிரகாஷ்


2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். முதல்படத்திலேயே உருகுதே மருகுதே என்கிற ஒரே பாடலின் மூலம் கவர்ந்தவர் இப்போது பிசியான ஹீரோ. டார்லிங், பென்சில், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்து புரூஸ்லீ ரிலீசுக்குக் காத்திருக்கிறார் ஜிவிபி.  மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மறுபுறம் இசையமைப்பாளராகவும் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் அடங்காதே. திருச்சியில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிக்கு இடையே அவரிடம் பேசினோம்.

இசையமைப்பாளர், நடிகர். இதுல எது உங்களுக்கு பிடிச்சிருக்கு?

ரெண்டுமே தான். இசையில எனக்கு பயிற்சியும் அனுபவமும் நிறையவே இருக்கு. அதனால இசையமைப்பாளராக இப்போதைக்கு ரொம்ப மெனக்கடத் தேவையில்லை. ஆனால் நடிப்பு அப்படியில்லை. இதில் நிறைய விஷயங்கள் இருக்கு. நடிகராக இருக்கறது சவால் தான். புதுசு புதுசா நம்மை அப்டேட் பண்ணிக்க வேண்டி இருக்கு. ஒவ்வொரு நாளும் எதையாவது கத்துக்கணும். அந்த வகையில நடிப்பு எனக்கு இப்போ நல்ல அனுபவம்.

ஆரம்பத்துல எனக்கு நடிப்பு வரும்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. ஒரு கட்டத்துல நடிக்கணும்னு தோணுச்சு. நடிக்கணும்னு முடிவெடுத்ததுக்கு அப்புறம், ஆடுகளத்துல நடிச்ச நரேன் கிட்ட, 2 மாசம் பயிற்சி எடுத்துகிட்டேன். இயக்குனர் வெற்றிமாறன் தான் இதற்கு ஏற்பாடு பண்ணினார். அது பெருசா கை கொடுத்துச்சு. இதுமட்டுமல்லாம இப்போ ஒவ்வொரு படத்துல வேலை பார்க்கும் போதும், நடிக்க கத்துகிட்டே இருக்கேன்.

இசையமைப்பாளர், நடிகர் ரெண்டையும் பேலன்ஸ் பண்ண முடியுதா?

ம்ம்ம்... முடியுதுனு தான் நினைக்கறேன். இசையமைப்பாளராக நான் ஸ்பாட்ல இருக்க வேண்டிய அவசியமில்லை. படத்துக்கு என்ன தேவையோ, அந்த மியூஸிக் போட்டு கொடுத்துட்டு, ஒகே வாங்கிடலாம். எனக்கு மியூஸிக் டீம் பெரிய பலம். அதனால அது பிரச்னையே இல்லை. ஆனால் நடிப்பு அப்படியில்லை. கொஞ்ச கஷ்டம் தான். இருந்தாலும் பேலன்ஸ் பண்ணீட்டு வர்றேன்.

இசையமைப்பாளரா 50 படத்தை கடந்துட்டீங்க... இப்ப நடிக்கவும் ஆரம்பிச்சுட்டீங்க. இசையில முன்ன மாதிரி ஹிட்டை எதிர்பார்க்கலாமா?

நிச்சயமா. நான் நடிச்சுட்டு இருக்கும் போது தான் 'தெறி' படத்துக்கு இசை அமைச்சேன். அது ஹிட் தானே. அதேபோல, காக்கா முட்டை, ஈட்டி உள்ளிட்ட படங்களுக்கும் நடிச்சுகிட்டே தான் இசை அமைச்சேன். இது இப்படியே தொடரும். நிச்சயம் நல்ல ஹிட் கொடுப்பேன். அதுல சந்தேகமே வேண்டாம்.

நீங்க ஒரே மாதிரியான படங்கள்ல தொடர்ந்து நடிக்கறதா விமர்சனம் இருக்கே? கதைத்தேர்வுல இதையெல்லாம் கவனத்துல எடுத்துப்பீங்களா?

நான் நடிச்ச டார்லிங், பென்சில், திரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்கள் ஹிட். இதுல நான் ஒரே மாதிரியான கேரக்டர்ல நடிக்கலை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்கள்ல தான் நடிச்சிருக்கேன். இப்போ நான் நடிக்கும் அடங்காதே படம், மிகச் சிறந்த திரில்லர் படம். இந்த படத்தோட இயக்குநர் சண்முகம், அடுத்த ராம்கோபால் வர்மா அளவுக்கு பேசப்படுவார். முதன் முதலாக சீரியஸா ஒரு படம் பண்றேன். இது ஒரு 'கில்ட்டி ரா பிலிம்'. இதுக்காக வாரணாசி, திருச்சி உள்ளிட்ட முக்கிய இடங்கள்ல சூட்டிங் எடுத்திருக்கோம். இந்தப்படத்துல சரத்குமார் சார், தம்பிராமையா இவர்கள் கூட நடிக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு,.

 

அதென்ன உங்க படங்கள்ல ஆனந்தி, நிக்கிகல்ராணியே திரும்ப திரும்ப கதாநாயகியா நடிக்கறாங்க?

அதுக்கு நான் எதுவும் காரணம் இல்லை பாஸ். ஒரு படம் ஹிட் ஆனா, அந்த நடிகையையே இயக்குநர்கள் செலக்ட் பண்றது தான் காரணம். நான் யாரையும் செலக்ட் பண்றதுமில்லை. ரெக்மெண்ட் பண்றதுமில்லை.

மனைவி சைந்தவி எப்படி இருக்காங்க?. உங்க மியூஸிக் தவிர மத்த மியூஸிக் டைரக்டர்கள்கிட்ட பாடக்கூடாதுனு சொல்லீட்டீங்களா?

அப்படியெல்லாம் இல்லை. என்னோட இசையில் அவர் அதிகமாகப் பாடியிருக்காங்க. அந்தப் பாடல்கள் ஹிட் அடிக்கறதால இப்படி ஒரு பார்வை வந்திருக்கலாம். ஆனா இதுல உண்மையில்லை.   தெகிடியில் கூட பாடியிருக்காங்க. அந்த பாட்டு ஹிட்டும் ஆச்சு.

புது டைரக்டர்கள் கூடவே படம் பண்றீங்களே... பெரிய டைரக்டர்கள்கூட படம் பண்ற திட்டமிருக்கா...?

நிச்சயமா. பெரிய டைரக்டர்கள் படத்துல நடிக்கணும்னு விருப்பம் இருக்கு. அதற்கான வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் நடிப்பேன். இப்போதைக்கு  கைவசம் இருக்குற படங்கள்ல நடிக்கிறேன். நிச்சயம் நல்ல தமிழ்ப்படங்கள் கொடுப்பேன்.
 

சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!