Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“சேவை செய்வதே செல்ஃபி எடுக்கத்தானா?” - ஆர்.ஜே பாலாஜி வேணுகோபால் ஆதங்கம்!

'பொய் சொல்லப் போறோம்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் ஹலோ எஃப்.எம் பாலாஜி. அதற்குப் பிறகு 'நண்பன்', 'நாய்கள் ஜாக்கிரதை' என வெரைட்டி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பாலாஜி ஆர்.ஜே பணியையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

ஆர்.ஜே.பாலாஜி

''ஆர்.ஜே வில் இருந்து நடிகராக எப்படி புரோமோட் ஆனீங்க?''

''அது புரமோஷனானு சொல்லத் தெரியலை. ரேடியோ மிர்ச்சி சிவா தான் 'டேய் நீ எங்கிட்ட எல்லாம் இப்படி நல்லாப் பேசுறியே.. ரேடியோவில் பேசினா இன்னும் சிறப்பா இருக்கும்' என உற்சாகப்படுத்தி ஆடிஷனுக்கு அனுப்பி வைத்தார். அப்படி கிடைத்ததுதான்  எஃப்.எம் ஆர்.ஜே ஆகும் வாய்ப்பு. முதலில் ரேடியோ மிர்ச்சியில் இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு ஹலோ எஃப்.எம். இதற்கிடையில் டி.வி யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலைப் பார்த்தேன். பெரும்பாலான எஃப். எம் களில் ஜாலியான புரோகிராம்களையே அடிக்கடி செய்து வருகிறார்கள்.

அதிலிருந்து மாறுதல் காண்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல, கண்டிப்பாக சமூக அக்கறை கொண்ட விஷயங்களைக் கையில் எடுக்க வேண்டும் என்கிற முடிவில் தான் ஒவ்வொரு நாளும்  நாட்டில் நடக்கும் ஹாட்டான விஷயங்களை கையில் எடுத்துப் பேச ஆரம்பித்தேன்.  இப்போது என்னுடைய புரோகிராமிற்கு பல ஃபாலோயர்கள் இருக்காங்க. இன்னொரு விஷயம் சொல்லியே ஆகணும். பிக் எஃப்.எம் பாலாஜியையும், என்னையும் பல பேர் குழப்பிக்கிறாங்க..நானும் ‘ஆமா, பாலாஜிதான் பேசுறேன்’னு சொன்ன உடனே கடகடனு பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்குப் பிறகுப் பார்த்தா அவங்க பேச நினைத்தது பிக் எஃப்.எம் பாலாஜிகிட்ட. இப்படி அடிக்கடி நடந்திருக்கு. அதனால இப்போ போனை எடுத்தா எந்த பாலாஜி வேணும்னு கேட்கப் பழகிட்டேன்'' என்றபடி சிரிக்கிறார். 

ஆர்.ஜே.பாலாஜி மனைவியுடன்

''உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்க...''

''என் மனைவி பெயர் சந்தியா. 2015 ம் ஆண்டு சென்னை வெள்ளத்தப்போதான் எங்க திருமணமும் நடந்தது. நண்பர்கள் மூலமாக அறிமுகமானவங்க. நிச்சயிக்கப்பட்ட திருமணம். ரொம்ப அமைதியானவங்க. நல்லா சமைப்பாங்க. அவங்க ரெசிப்பிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். விளம்பர கம்பெனியில நல்ல போஸ்டிங்கில் இருக்காங்க. கூடவே, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அவங்க வேலைக்குப் போற நேரமும், நான் வேலைக்குப் போற நேரமும் வேறுபடும் அதனால சாயந்திரத்துல பக்கத்தில் இருக்கிற கோயிலுக்குப் போறது. ஒன்னா சாப்பிடுறதுனு எங்களுக்கு கிடைக்கிற நேரத்தைப் பயன்படுத்திட்டு இருக்கோம். எனக்கும் அவங்களுக்கும் ஆன்மீகத்துல ஈடுபாடு அதிகம். என் மனைவிக்கு கர்நாடக சங்கீதம் நல்லாத் தெரியும். நமக்கு அது சுத்தமா வராது. மேடைகளிலோ, டி.வி யிலயோ யாராவது பாடிட்டு இருந்தாங்கனா, அவங்க பாடுற சங்கதில ஆரம்பிச்சு அந்த பாட்டைப் பத்தி என்கிட்ட ரொம்ப நேரம் பேசுவாங்க. அடுத்து, அவங்களுக்கு நாய்க்குட்டிகள் மீது அவ்வளவு பிரியம். டூவிலர்ல போகும் போது நாய்க்குட்டி எதும் குறுக்கே வந்துட்டா, வண்டியை நிறுத்திட்டு, அந்த நாய்க்குட்டியை தூக்கிக் கொஞ்சியப் பிறகுதான் கிளம்புவாங்க. எனக்கு நாய்க்குட்டினா பயம். ஆனா இப்ப எனக்கும் நாய்க்குட்டிகள் மீது அக்கறையும், பாசமும் வந்திருக்கு''. 

ஆர்.ஜே.பாலாஜி விஜயுடன்

''சமூகத்தின் மீதான அக்கறை ரேடியோவுக்கு வந்த பிறகுதான் வந்ததா?''

2015-ம் ஆண்டு டிசம்பர் மாத சென்னைப் பெருவெள்ளத்தின் போது, இப்படி ஒரு மனித நேயமுள்ள மக்களைப் பார்க்கவே முடியாது என எல்லாரும் பேசிக் கொள்ளும் அளவு, ஓடி ஓடிப் பலரும் உதவி செய்தார்கள். இதில் நன்கு கூர்ந்து கவனிச்சா, உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவே பல பேர் உதவி செய்தாங்க. அதை மறக்காம செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செஞ்சாங்க. எல்லாருமே அப்படித்தான் செய்தாங்கனு நான் சொல்ல வரலை. செல்ஃபி எடுத்துப் பதிவு பண்ணியவர்களைக் காட்டிலும், சத்தமே இல்லாம பல பேருக்கு உதவி செய்தவங்க அதிகம். இன்றைக்குப் பல பேருடைய மனநிலை இப்படி மாறிட்டே வருது. தன்னோட சந்தோஷத்துக்காக, தன்னை சுயமா சந்தோஷப்படுத்துவதற்காக, மத்தவங்க பாராட்டுறதுக்காக உதவி செய்பவர்கள்தான் இப்போ அதிகமாக இருக்காங்கனு நினைக்கிறேன். வள்ளலார் சொன்னது போல ' வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்பது போல முன்னுக்கு வந்து உதவி செய்யணும். அதுதான் உண்மையான சமூக அக்கறையா இருக்கும்'னு நான் நினைக்கிறேன்''. 

ஆர்.ஜே.பாலாஜி

”சமூக அக்கறைனா எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?”

''அசோகர் சொன்னது மாதிரி நம்ம வாழ்க்கையில ஒரு மரத்தையாவது நடணும். அது வர்தா மாதிரி ஒரு புயலில் விழுந்தாலும் பரவாயில்லை. அதுவரைக்குமாவது ஏதோ ஒரு வகையில பயன்பட்டுச்சுல்ல. அடுத்து, விமர்சனத்துக்கும் வெறுப்பு மனப்பான்மைக்கும் வித்தியாசம் தெரியாம சில பேர் ஒருவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது மாறணும். ஒருவர் சொன்ன கருத்தை எதிர்க்கிறோம் என்றால் கண்டிப்பா அந்த கருத்துக்குத்தான் மறுப்பு தெரிவிக்கணுமே தவிர, அந்த ஆளுமை (மனிதர்)க்கு மறுப்பு தெரிவிக்கிறது மாறணும். சுய விளம்பரத்துக்காக மனிதாபிமானியாக வாழ நினைக்காதீங்க''.

- வே. கிருஷ்ணவேணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement