'என் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கே!'' - கொந்தளிக்கிறார் ராகுல் தாத்தா

''சினிமாவுக்கு வந்து அம்பத்தி அஞ்சு வருஷம் ஆச்சு, 'அடிமைப்பெண்'தான் என்னோட முதல் படம்.  'இதயக்கனி', 'உழைக்கும் கரங்கள்', 'ரிக்‌ஷாக்காரன்'னு ஏகப்பட்ட படங்கள் நடிச்சுட்டேன். 55 வருஷம் கஷ்டப்பட்டதுக்கு 'கத்தி' படத்துலதான் பலன் கிடைச்சது'' எழுபத்தி ஆறு வயசு ஆனாலும் எனர்ஜி குறையாமல் பேசுகிறார் உதயபானு. 'நானும் ரெளடிதான்' படத்தின் ராகுல் தாத்தா.

ராகுல் தாத்தா

''யார் நீங்க?எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க?''

''சொந்த ஊரு நாகப்பட்டினம். நிறைய நாடகங்கள்ல நடிச்சுருக்கேன், சென்னையில் பாண்டி பஜார்ல ஓட்டல்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ எம்.ஜி.ஆர் அவர்களோட ஆபீஸ்ல ஆபீஸ் பாய் வேலை கிடைச்சு அவரோட இருந்தேன். ஊருக்குதான் உதயபானு. அவருக்கு நான் பாலன். அவர்தான் 'அடிமைப்பெண்' படத்துல நடிக்க வெச்சார், படத்தோட டைரக்டர்கள்கிட்ட பாலனுக்கு கூடுதலா ரெண்டு சீன் வைங்கனு சொல்வார். அவர் தீவிர அரசியல்ல இறங்கவும் தொடர்பு விட்டுப்போச்சு. நானும் அதுக்கு பிறகு மணிவண்ணன், கங்கைஅமரன், சுந்தர்.சி படம்னு கணக்கு வழக்கு இல்லாம நடிச்சுட்டேன். ஆனா என்னை வெளியில் எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்த்த படங்கள்தான் 'கத்தி', 'புறம்போக்கு'  'நானும் ரெளடிதான்'.''

''எப்படிக் கிடைச்சது ராகுல் தாத்தா கேரக்டர்?''

'' 'மாரி' படத்துல ஒரு கேரக்டருக்காகத்தான் என்னைக் கூப்பிட்டு இருந்தாங்க. அப்போதான் விக்னேஷ் சிவன் சார் என்னைப் பார்த்துட்டு தனுஷ் சார்கிட்ட அந்த கேரக்டருக்கு வேற யாரையாவது நடிக்க வெச்சுக்கோங்கன்னு சொல்லி என்னை 'நானும் ரெளடிதான்' பண்ணக் கூட்டிப்போயிட்டார்.''

''எம்.ஜி.ஆர்.கூட இருந்தவர், அ.தி.மு.க. கட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அண்ணாவோட இழப்பும், வாத்தியாரோட இழப்பும் என்னை எந்த அளவுக்கு பாதிச்சதோ அதே அளவுக்கு அம்மாவோட இழப்பும் ரொம்ப பாதிச்சது.''

''இப்போ கட்சியில் சசிகலா-ஓ.பி.எஸ். பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''என்னத்த சொல்ல...சசிகலா ரெட்டை இலை சின்னத்தை இரண்டு விரல் காட்டி போஸ் கொடுக்கிறதைப் பார்க்கிறப்போ எல்லாம் மனசு கெடந்து அடிச்சுக்கிட்டு இருக்கு. நான் பார்த்தவரைக்கும் சசிகலாவுக்கெல்லாம் எங்கேயும் ஆதரவு இருக்கிற மாதிரி தெரியலை. பன்னீர்செல்வம் முதலமைச்சாரா ஆகிறதுதான் நல்லதுனு சொல்வேன்.''

''விஜய் சேதுபதிகூட ரெண்டு படம் நடிச்சுருக்கீங்க. என்ன சொல்வார்?''

''ஷூட்டிங் அப்போ ரொம்ப ஜாலியா பேசுவார், செலவுக்கு எதுனா வேணும்னா சொல்லுங்கனு சொல்வார், வேணாம்னு சொன்னா விட மாட்டார். ஒரு சைக்கிள் மட்டும் வாங்கிக் கொடுங்க தம்பின்னு சொன்னேன், வாங்கிக் கொடுத்தார்.''

''குடும்பம் பற்றி...?''

'' ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகள்கூட சந்தோஷமா இருக்கேன்.''

''அடுத்து என்னென்ன படம் பண்றீங்க?''

''சந்தானம் சார்கூட 'ஓடி ஓடி உழைக்கணும்', விக்னேஷ் சிவன் சார் எடுக்கிற அடுத்த படத்துல நடிக்கிறேன்.''

வாழ்த்துகள்!

-ந.புஹாரி ராஜா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!