‛என் படத்துக்கு பெரிய ஸ்டார் தேவையில்லை... கைதான் ஹீரோ’ - பீச்சாங்கை இயக்குநர் அசோக் | Debutant director Ashok says Peechankai movie based on alien hand syndrome

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (16/02/2017)

கடைசி தொடர்பு:10:39 (16/02/2017)

‛என் படத்துக்கு பெரிய ஸ்டார் தேவையில்லை... கைதான் ஹீரோ’ - பீச்சாங்கை இயக்குநர் அசோக்

‘பீச்சாங்கை'னு ஒரு டைட்டிலா? 'தலைப்பே விநோதமா இருக்கே' என அதன் இயக்குநர் அசோக்கை அழைத்துப் பேசினோம். 'கைதான் பிரதர் படத்தோட ஹீரோ' என இன்னொரு அதிர்ச்சி கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக்.

Director Ashok

"அடிப்படைல நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர், திடீர்னு சினிமா ஆர்வம் அதிகம் ஆயிடுச்சு. ஒரு வருஷ கோர்ஸா ஃபிலிம் மேக்கிங் படிச்சேன். நாளைய இயக்குநர் 4-வது சீஸன்ல ஃபைனல்ஸ் வரை போனேன். இதுவரை பத்து குறும்படங்கள் எடுத்திருக்கேன். சினிமாவில் முதல் படம் டைரக்‌ஷன் பண்றதுக்கு 5 வருஷம் ஆயிடுச்சு. யார்கிட்டயும் உதவி இயக்குநரா இல்ல. ஆனா, குறும்பட அனுபவங்கள் ரொம்பவே இருக்கு. 

பீச்சாங்கை

'பீச்சாங்கை' படத்தைத் தயாரிப்பாளர்களுக்குக் காட்டுறதுக்காக முதல்ல, ஒரு பைலட் ஃபிலிமா எடுத்திருந்தோம். படத்தைப் பார்த்துட்டு சில தயாரிப்பாளர்கள் 'ஓகே... பண்ணலாம்'னு சொன்னாங்க. நான், 'அந்த பைலட் ஃபிலிம் ஆட்களையே சினிமாவுக்கும் பயன்படுத்தப் போறேன்'னு சொன்னதும், 'வேற பெரிய ஹீரோக்களை வெச்சுப் பண்ணலாமே'னு சொன்னாங்க, 'இல்ல; இதுக்கு புதுமுகங்கள்தான் சரி'னு சொன்னதும் விலகிட்டாங்க. அதுக்குப் பிறகு இந்தப் படத்தோட ஹீரோ கார்த்திக்கும், பி.ஜி.முத்தையாவும் 'நாங்களே தயாரிக்கிறோம்'னு சொன்னாங்க. படம் செம ஃப்ரெஷ்ஷா வந்திருக்கு!"

"பீச்சாங்கை - என்ன மாதிரியான படம்?"

“ ‘கஜினி'ல ஷார்ட் டைம் மெமரி லாஸ், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்'ல டெம்ப்ரவரி மெமரி லாஸ்னு தமிழ் சினிமாவுல வியாதிகளை அடிப்படையா வெச்சு நிறைய படங்கள் வந்திருக்கு. இந்த மாதிரி சுவாரஸ்யமான ஒரு விஷயம் கிடைச்சா நல்லாயிருக்குமேனு தேடிக்கிட்டிருக்கும்போது கிடைச்சதுதான் 'ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்'. இந்தக் குறைபாடு பெரும்பாலும் இடது கைப் பழக்கம் உள்ளவங்களுக்கு வரும். இந்தப் படத்தின் ஹீரோ இடது கைப் பழக்கம் உள்ள பிக் பாக்கெட் திருடன். AHS பாதிப்பு உள்ளவங்களுக்கு ஒரு பிரச்னை வரும். அவங்க என்ன செய்யணும்னு நினைக்கறாங்களோ, அவங்க கை, அதுக்கு எதிர்மாறா ஒரு விஷயத்தைச் செய்யும். அதை அவங்களால தடுக்க முடியாது. ஹீரோவுக்கு ஒரு விபத்தில் இடது கையில் அடிபட்டு, AHS வந்துடுது. அதுக்குப் பிறகு என்ன நடக்குதுங்கறதுதான் கதை. இந்தியாவில் AHS பிரச்னையை அடிப்படையா வெச்சு வரப் போகும் முதல் படம் இதுதான்."

"புதுமுகங்களை வெச்சு எடுக்கறேன்னு சொல்றதுதான் இப்போ ட்ரெண்ட்டா?"

Anjali Rao

"ட்ரெண்ட்னு எதுவும் இல்லை. முன்னாடியே சொன்னது மாதிரி, படத்தில் கைதான் ஹீரோ. பெரிய ஸ்டாரை வெச்சுத்தான் இந்தப் படத்தை எடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. புதுமுகம்தான் இந்த ஸ்க்ரிப்டுக்குத் தேவையா இருந்தாங்க. படத்தின் ஹீரோ ஆர்.எஸ்.கார்த்தி 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சின்ன ரோல் பண்ணியிருக்கார். ஹீரோயின் அஞ்சலி ராவ், அதே படத்தில் சிம்புவுக்குத் தங்கையா நடிச்சிருப்பாங்க. 'சேதுபதி'யில சின்னக் கதாபாத்திரத்தில் நடிச்ச விவேக் பிரசன்னா, இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் பண்றார். இப்படி அதிகம் வெளியில் தெரியாத ஆட்கள்தான் இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க. இவங்ககூட எம்.எஸ்.பாஸ்கர் சார் ஒரு ரோல் பண்ணியிருக்கார். புதுமுகங்களை வெச்சுப் பண்றப்போ அது படத்துக்கு ஃப்ரெஷ்ஷான ஃபீல் கொடுக்கும். படத்தில் மெசேஜ் சொல்றேன்னு எதுவும் பண்ணல. ஒரு ஜாலியான என்டர்டெய்னரா இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கற படமா இருக்கும்."

- பா.ஜான்ஸன்


டிரெண்டிங் @ விகடன்