'சின்ன பட்ஜெட் சினிமாக்களுக்கு உதவுகிறோம்!' - 'மதுபானக்கடை' கமலக்கண்ணனின் புது முயற்சி

சினிமா எடுப்பதை விட அதை ரிலீஸ் செய்வது பெரும்பாடாக இருக்கிற சூழல் இது. இந்த நேரத்தில் மிகத் தரமான சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க,  தன் `மான்டாஜ் மீடியா’ மூலம் களம் இறங்கியிருக்கிறார் `மதுபானக் கடை’ படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன்.

கமலக்கண்ணன்:

சினிமா

"இன்றைய தேதியில் ரிலீஸ் ஆகாத படங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம். பல நல்ல படங்கள் ரிலீஸ் ஆகாம இருக்கு. அதிலும் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை கவலை அளிக்கும்படியா இருக்கு. நான் `இன்டிபெண்டன்ட்’டா  இயக்கின 'மதுபானக் கடை' சில ஆதரவுகள் இருந்ததால் என்னால தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடிஞ்சது. சமீபத்தில் ரிலீஸ் ஆன ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. ஆனா, இது மாதிரியே இன்னும் நிறைய நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகாம இருக்கு. ஒரு படம் எடுத்து முடிச்சதுக்குப் பிறகு `மார்கெட்டிங்’, ‛டிஸ்ட்ரிப்யூட்’ பண்றதே தனி பிராசஸ். `க்ரியேட்டர்ஸ்’ நிறைய பேருக்கு அது தெரியறதில்ல. எங்களுக்கு அந்த அனுபவம் இருக்கறதால `சப்போர்ட்’ பண்ணலாம்னு இறங்கியிருக்கோம்.

நிறைய படங்கள் பார்த்தேன். அதில் சில படங்கள் ரொம்ப நல்லா இருந்தது. 'காதல் கண்கட்டுதே' முழுக்க முழுக்க யூத், லவ், ரொமாண்டிக் மாதிரியான விஷயங்கள் இருக்கும்படியான படம். அதுக்கான சில `மார்கெட்டிங்’ முறைகள் இருக்கு. அதை முழுக்க ஆன்லைன்லதான் `மார்கெட்டிங்’ பண்ணோம். உதாரணமா, இந்தப் படத்துக்கு ஆடியோ `லான்ச்’ பண்ணனும்னா எட்டுல இருந்து 10 லட்ச ரூபாய் செலவாகும். அதையே `ஃபேஸ்புக் லைவ்’ மூலமா செய்து, ஒவ்வொரு பாட்டையும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் மூலமா `ட்வீட்’ பண்ண வெச்சு, அந்த பிரபலங்கள ஃபாலோ பண்ற ஆட்களுக்கு `ரீச்’ ஆக வெச்சோம். பட்ஜெட் குறைவாகவும், அதே சமயத்தில் ஒரு `ஆடியோ லான்ச்’ கொடுக்கும் எஃபக்ட்டையும் கொடுக்கும்படியான விஷயங்கள்தான் செஞ்சோம். நல்ல ரீச்சும் கிடைச்சிருக்கு. 

இதேபோல இன்னும் ரெண்டு படங்களுக்கான திட்டங்களையும் உருவாக்கியிருக்கோம். ஒவ்வொரு படத்தின் தேவையும் வேற வேற மாதிரி இருக்கும். அடுத்து பண்ணப்போற ஒன்பது குழி சம்பத் படத்துக்கான ஆடியன்ஸே வேற. அது முழுக்க முழுக்க நகரம் மற்றும் கிராமத்து ஆடியன்ஸை டார்கெட் பண்ணியிருக்கும். இன்னொரு படம் 'தெளிவுபாதையின் நீச தூரம்'. அது ரொம்ப ராவானா அரசியல் படம். அது ஃபிலிம் ஃபெஸ்டிவல்ஸ்-க்கு அனுப்பும்படியான படமா இருக்கும். இப்படி ஒவ்வொரு படமும் சேர வேண்டிய இடத்தை அடிப்படையா வெச்சு அதுக்கான மார்கெட்டிங்கை பண்றோம்."

இயக்குநர் சிவராஜ்:

" 'காதல் கண்கட்டுதே' படம் எடுக்கும் போது ரிலீஸ் பத்தின எந்த டென்ஷனும் இல்லாம திருப்தியா எடுத்து முடிப்போம்னு எடுத்துட்டோம். இன்டிபெண்டட்’ படம் அதுக்கான மார்கெட்டிங்னு போகும்போது, எல்லாருமே ஸ்டார்களே இல்லைங்கறத மைனஸ்னு சொன்னாங்க. ஆனா, புதுமுகங்கள நடிச்சிருக்கறதுதான் ப்ளஸ்னு எனக்குத் தோணுச்சு. சில பேர் `யாராவது லீடிங் காமெடியனை வெச்சு காமெடி ட்ராக் சேருங்க’னு சொன்னாங்க. `இல்லைனா பிஸ்னஸ் ஆகாது’னு கூட சொன்னாங்க. அப்போதான் எனக்கு கமலக்கண்ணன் அண்ணா பண்ணின விஷயம் ஞாபகம் வந்தது. அவரும் முழுக்க புதுமுகங்களை நடிக்க வெச்சுதான் `மதுபானக் கடை’ படத்தை எடுத்திருப்பார். எனக்கு காலேஜ் சீனியர் அவர். அவரை சந்திச்சு, மார்கெட்டிங்குக்கு என்ன பண்ணலாம்னு கேட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பண்ணிக் கொடுத்தார். இன்னைக்கு படம் ரிலீஸாகி தியேட்டருக்கு வந்திருச்சு, இனி படத்தைப் பார்த்திட்டு ரசிகர்கள் தான் ரிசல்ட் சொல்லணும்!"

பா.ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!