’கைல உலக சினிமா... விகடன்ல 60 மார்க்..!’ - பரபர விக்ரமன் #VikatanExclusive

குடும்ப சென்டிமென்ட் கதைகள், காட்சிகளால் ரசிகர்ளின் மனதைக் கட்டிப்போட்டவர் இயக்குநர் விக்ரமன். தற்போதைய இயக்குநர்கள் சங்கத் தலைவர். தான் கடந்து வந்த கதையைச் சொல்கிறார். 

விக்ரமன்

''உங்களுடைய எல்லாப் படங்களும் சென்டிமென்ட், காமெடியை மையமாக வைத்து வந்தவை. உங்கள் உதவி இயக்குநர்கள் எப்படி?"

"மணிவண்ணன், பார்த்திபன் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து, இயக்குநர் ஆனேன். என்னுடைய படங்களில் அவர்களுடைய சாயல் இருக்காது. அவர்கள் இருவருமே இசைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தர மாட்டார்கள். ஆனால், நான் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அவர்கள் இருவரும் அதிக குடும்பப் படங்கள் எடுத்தது இல்லை. நான் எடுத்திருக்கிறேன். அதுபோல, ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு தனித்துவம் வேண்டும். முக்கியமாக கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி போன்றவர்கள் எல்லாம் என் பாணியில் இருந்து விலகி, அவர்களுடைய தனித்துவத்தைக் காட்டியதால்தான், இன்று புகழின் உச்சியில் நிற்கிறார்கள்."

''எவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவும், உங்கள் படத்துல மட்டும் பூ மாதிரி அவ்வளவு சாதுவாக நடிக்கிறாங்களே, எப்படி?"

"சினிமாவுல, எப்போதுமே ஒரே மாதிரியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களை எதிர்மறையாக நடிக்க வைத்தால், அது புதுமையாக இருக்கும். அந்த முயற்சிக்குப் பலனும் கிடைக்கும். உதாரணமாக, சாஃப்ட் ஹீரோவாக இருந்த பரத், என்னுடைய 'சென்னை காதல்' ஆக்ஷன் படத்தில் நடித்தார். அதேமாதிரி ஆக்ஷன் ஹீரோ சூர்யாவை வைத்து, 'உன்னை நினைத்து' என்ற படம் கொடுத்தேன். இப்படி என் முயற்சிகளில் வெற்றி தோல்வி இருக்கலாம். ஆனால், முயற்சிகளை எப்போதுமே நான் வெற்றியாகத்தான் பார்க்கிறேன்!''

''இசைக்கு முக்கியத்துவம் தரும் இயக்குநர் நீங்கள். உங்கள் படங்களின் இசை ரகசியம்?"

"அனிருத், ஹாரிஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா... நல்ல இசையை யார் கொடுத்தாலும், முதல் ரசிகனாக ரசிப்பேன். பாத்ரூம் பாடகன் நான். தொடர்ந்து பாடிப் பார்க்கும்போதே, அந்தப் பாடல் ஹிட் ஆகுமா, ஆகாதா... என்பது எனக்குத் தெரிந்துவிடும். இந்த இசை ஆர்வம்தான் என் படங்களிலும் பிரதிபலித்தது. வேறெந்த ரகசியமும் இல்லை.''

விக்ரமன்

''பல நூறு படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கியுள்ளன. அந்தப் படங்களை வெளியிட ஒரு இயக்குநர் சங்கத் தலைவராக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?''

''இதுபோன்ற முயற்சிகளை நான் எடுப்பது சாத்தியமில்லை. தயாரிப்பாளர் சங்கம்தான் எடுக்க வேண்டும். அதை அவர்கள் செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சங்கம்  எங்களிடம் ஆலோசனை கேட்டால், அதை நாங்கள் வழங்கத் தயார். குறிப்பிட்ட கால இடைவேளையில் சிறு பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும் என நாங்கள் சொன்னோம். ஆனால், அவர்கள் அதை ஏற்றதாகத் தெரியவில்லை. சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்தாலே, முடங்கிப்போன படங்களையும் ரிலீஸ் பண்ண வாய்ப்பு கிடைக்கும். இந்தப் புரிதல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வேண்டும்."

''இயக்குநர் சங்கத் தலைவராக நீங்கள் சந்திக்கக்கூடிய சில நெருக்கடியான பிரச்னைகள்?''

''நிறைய சிக்கல்கள் இருக்கு. இதற்கு முன்  தயாரிப்பாளர்கள் விரும்பக்கூடிய ஒரு இயக்குநராக இருந்தேன். இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆனபிறகு, தயாரிப்பாளர்களுக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. முக்கியமா, ஒரு உதவி இயக்குநர் சம்பளம் வரவில்லை என்று சொன்னால், அதைக் குறிப்பிட்ட தயாரிப்பாளரிடமிருந்து வாங்கித் தரவேண்டும் என்பதுதான் என்னுடைய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அதனாலேயே குறிப்பிட்ட தயாரிப்பாளருக்கு நான் வேண்டாதவனாக ஆகிறேன். நான், இங்கே வாய்ப்பை முக்கியமாக நினைக்கவில்லை. மனசாட்சிப்படி எனக்கான வேலையைச் சரியாகச் செய்கிறேனா என்றுதான் பார்க்கிறேன். அனைத்து தரப்பினரிடமும் நேர்மையாக இருக்கிறேன்.  இப்படியே கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்." 

''அடுத்து?''

''நான்கு கதைகள் தயாராக இருக்கிறது. முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து ஒரு கதை. உலக சினிமா அளவில் சொல்லப்படாத ஒரு கதை, நாவல்களில்கூட சொல்ல மறந்த கதை, வித்தியாசமான ஒரு கதை. எதை முதலில் தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை. ஏனெனில், தமிழ்சினிமாவில் எல்லாக் காலத்திலும் இரட்டை சவாரி செய்யவேண்டி இருக்கிறது. வியாபார ரீதியாகவும் வெற்றிபெறணும், கதை ரீதியாகவும் வரவேற்பைப் பெறணும். இரண்டையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். கூடிய விரைவில், விக்ரமனின் தரப்பில் இருந்து தரமான படம் ஒன்று வரும். தவிர, விகடன் இதழில் என் திரைப்படத்திற்கு 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று!'' 

- ரா.அருள் வளன் அரசு,
படங்கள் : பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!