வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (14/03/2017)

கடைசி தொடர்பு:14:01 (14/03/2017)

"சினிமாவுக்காக நான் இழந்தது பல!" இயக்குநர் சுசீந்திரன் #VikatanExclusive

 

இயக்குநர் சுசீந்திரன்

தமிழ் சினிமாவின் வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் முன்னணி வரிசையில் இருப்பவர் இயக்குநர் சுசீந்திரன். 'அறம் செய்து பழகு’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர், தன் சினிமா பயணம் குறித்தும், சினிமா அனுபவத்தில் கற்றதும் பெற்றதும் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

"சினிமாவில் உங்களுடைய இலக்கு?"

"இயக்குநர் ஆக வேண்டும் என்பது மட்டும்தான், எனது இலக்காக இருந்தது. இது எனக்கு மட்டும் இல்ல, சினிமாவில் உதவி இயக்குநராக உள்ள எல்லோருடைய இலக்கும், நாம் முதல் படம் பண்ண வேண்டும் என்பது மட்டும் தான். இந்த கனவுகளோடு, விகடனில் அட்டைப் படத்தில் வர வேண்டும், சன் டி.வியில் பேட்டி கொடுக்க வேண்டும், சத்யம் தியேட்டரில் ஆடியோ லான்ச் பண்ண வேண்டும். அந்த மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் அப்பா -அம்மாவைக் கட்டிப்பிடிக்க வேண்டும், தம்பி, தங்கச்சிக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற கனவுகளும் கிட்டத்தட்ட அனைவருக்கும் 10,15 வருட இலக்காகவே இருக்கும். அந்த முதல் இலக்கு நிறைவேறும்போது, சிறந்த இயக்குநர் ஆக வேண்டும், தேசிய விருது, ஆஸ்கர் என்று என இலக்குகள் மேலும் விரிவடையும். இலக்குகளைப் பொறுத்தவரையில், நாம் அடையும் வெற்றி - தோல்விகள் தான் நம்முடைய அடுத்த இலக்கை நிர்ணயிக்கும். இலக்குகளுக்கு எப்போதுமே, வரையறை இல்லை."

"இயக்குநர் டூ தயாரிப்பாளர் அவதாரம்?"

ஒரு சின்னச் சிரிப்போடு பேச தொடங்குகிறார்... "தமிழ் சினிமாவில் தற்போதையை சூழலில், 90 சதவீத ஹீரோக்களும், இயக்குநர்களும் தயாரிப்பாளராகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல கதைக்குத் தயாரிப்பாளர் கிடைக்காத போது, அந்தப் படத்தை நாமே தயாரிக்கும், ஆரோக்கியமான சுழல் தற்போது உருவாகி வருகிறது. என்னைப் பொறுத்தவரை யார் எந்த வேலையை செய்தாலும், முழு ஈடுபாட்டோடு செய்தால், அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதைத்தான் செய்கிறேன். எனக்கு நிச்சயம் நடிக்கிற ஐடியா கிடையாது. எப்படியும் நடிக்கிற ஐடியா பற்றி கேட்பிங்க. அதான் நானே சொல்லிட்டேன்." 

இயக்குநர் சுசீந்திரன்

"பெரும்பாலான உதவி இயக்குநர்கள் உங்கள் படத்திலேயே பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்களே?"

"கமர்ஷியல் மற்றும் கருத்துச் சொல்லக்கூடியப் படங்கள் என, என்னுடைய படங்களை இரண்டு விதமா பிரிக்கலாம். என்னுடைய ஒவ்வொரு படத்தையும் சீக்கிரமே எடுத்து முடித்துத் திரைக்கு கொண்டு வருவதோடு, அதை ஹிட் படமாகவும் தந்துவிடுவேன். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்ப வரக்கூடிய எல்லா உதவி இயக்குநர்களுமே, நாளைக்கே இயக்குநாராக வரணும்னு ஆசைப்படுறாங்க. என்கிட்ட ஒர்க் பண்ணினால், ஒரு வருசத்துல 2 படங்கள் ஒர்க் பண்ணிடலாம்னு நினைச்சுகிட்டு என்கிட்ட சேரணும்னு நினைக்கிறாங்க. ஆனால், நான் ஒவ்வொரு படத்துலேயும், என் உதவி இயக்குநர்களை மாற்றிக் கொண்டே இருப்பேன். அதேபோல், என் ஒவ்வொரு படத்துலேயும் 5 புதுமுக இயக்குர்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருப்பேன். இதுவரைக்கும் என்னிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள், 50 பேர் வெளியில இருக்காங்க. அவுங்க 50 பேரும் நான் எப்ப கூப்பிட்டாலும், என்னிடம் மீண்டும் வந்து உதவி இயக்குநரா சேரத் தயாராகவே இருக்காங்க."

"உங்களுடைய படங்கள் அனைத்தையும் பார்க்கும்போது, நம்ம வீட்டுல நடப்பது மாதிரியே இருக்கே என்ற எண்ணத்தைக் கொடுக்குது அது எப்படி?"

"எல்லாருமே ஆகாயத்துல கதையைத் தேடிகிட்டு இருக்காங்க. நம்ம காலுக்கு கீழேயே கதையிருக்கு. இதை, நான் விகடன் அவார்ட் ஃபங்ஷன் அப்பவே சொன்னேன். நம்மள சுத்தி நடக்குகூடிய விஷயங்களை போக்கஸ் பண்ணினாலே போதும். அதுதான் கதையின் வெற்றி. எந்த ஒரு கதையையும், நமக்கான பிரச்னையானு பார்க்கணும். பெரும்பாலும் 10-ல் 7 பேருக்கு உள்ள பிரச்னையானு பார்க்கணும். முக்கியமாக, எனக்கு தெரிஞ்ச விஷயத்தை, நான் கதையா தேர்வு செய்யுறேன். என் வாழ்க்கையைச் சுற்றி நடக்கக்கூடியப் பிரச்னையை நான் படமாக்குகிறேன். சாதாரண மனிதர்களுடைய கதையைப் படமாக்கும்போது, அது வெகுஜன மக்களை அதிகமாக கவர்ந்துவிடுகிறது. இதுதான் காரணமாக இருக்க முடியும்."

"வெண்ணிலா கபடி குழு படத்தில் இருந்து, அறம் செய்து பழகு வரை இயக்குநர் சுசீந்திரன் எப்படி?"

சிரித்துக்கொண்டே... "சுசீந்திரனைப் பொறுத்த வரைக்கும் அவன், இரண்டு விதமான இயல்புகளைக் கொண்டவன். அவனுடைய உண்மையான முகம் 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் வரும் மாரி தான். இன்னொரு கேரக்டர் 'நான் மகான் அல்ல' படத்துல பார்த்த ஜீவா கேரக்டர்தான். இதுதான் 'அறம் செய்து பழகு' படம் வரை தொடர்கிறது. இந்த இரண்டு இயல்புகளும்தான் என்னிடமிருந்து அதிகமாக எட்டிப்பார்க்கும். என்னுடைய எல்லா படத்துலேயும், இந்த இரண்டு கேரக்டரில் ஒரு கேரக்டராவது என்னையும் அறியாமல் கதைக்குள் வந்துவிடும். இது என் இயல்பு."

"சினிமாவை நீங்கள் எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கிங்க?"

"சினிமாவுல நான் கத்துக்கட்ட விஷயம், எப்போதுமே எல்லோருக்கும் உண்மையா இருக்கணும். செய்யக்கூடிய தொழில்ல, நேர்மையா இருக்கணும். முக்கியமா, நான் 'கற்றுகொண்டது கை மண் அளவு. கள்ளாதது உலக அளவு' அப்படினுதான் சொல்வேன். சினிமாவுல டெக்னிக்கலாக எனக்கு எதுவும் பார்க்கத் தெரியாது. நான் எழுதுவதில் இருக்கும் எமோஷன், நான் எடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அதே எமோஷனல் வருகிறதா என்றுதான் எனக்குப் பார்க்கத் தெரியும். அது வரவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் குலோசப் வையுங்கள் என்றுதான் எனக்கு சொல்லத் தெரியும். இதை டெக்னிக்கலா நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். அதையும் தாண்டி என் படங்கள் ஜெயித்ததற்கு முக்கிய காரணமே, நான் எடுக்கும் ஒவ்வொரு காட்சியிலுமே உள்ள எமோஷனல் தான். அது காட்சிக்குக் காட்சி இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்வேன். அவ்வளவு தான்."

"சினிமாவுக்காக நீங்கள் இழந்தது என்ன? சினிமாவுக்கு வந்த பிறகு நீங்கள் இழந்தது என்ன?"

"சினிமாவுக்காக நான், என்னுடையக் கல்லூரி வாழ்க்கையை முழுமையாகவே இழந்துவிட்டேன். +2 முடிச்ச உடனே, என்னைக் கல்லூரியில் சேர்க்க வீட்டில் வற்புறுத்தினார்கள். ஆனால், நான் சினிமா ஆர்வத்தில் என் படிப்பை உதறித் தள்ளிவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டேன். அதனால், இளமைக்கால வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோசத்தைத் தரக்கூடிய என்னுடைய கல்லூரிக் காலங்களைத் தெரிந்தே தொலைத்துவிட்டேன். அதேபோல், சினிமாவுக்கு வந்த பிறகு, 11 ஆண்டுகால என்னுடைய உதவி இயக்குநர் பயணம், ஒரு துறவு வாழ்க்கைப் போலவே இருந்தது. ஊருக்குச் சென்றால், பலரும் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அதனால், ஊருக்குக் கூடப் போகமுடியாமல், சென்னையிலேயே நான் பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்தேன். அதனால், என்னுடைய இளமைக்கால வாழ்க்கையை நான் அனுபவிக்காமலேயே தொலைத்துவிட்டேன். சினிமாவுக்காக நான் தொலைத்தது என்றால், என்னுடைய இளமைக்கால வாழ்க்கை மட்டும்தான்."

இயக்குநர் சுசீந்திரன்

''உங்கள் தயாரிப்பில், உங்களுடைய உதவி இயக்குநர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு தருவிங்களா?''

'' 'நல்லுசாமி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை என்னுடைய தம்பிதான் பார்த்துக்கொள்கிறார். முதல் படமே 'ஆதலால் காதல் செய்வீர்' நானே இயக்கினேன். அடுத்த படம் 'வில் அம்பு' எனது நீண்ட கால நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கினார். இனிமேல், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் கதை நன்றாக இருந்தால், வெளியில் இருந்து வரக்கூடிய உதவி இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் பொறுப்பை முழுக்க முழுக்க என் தம்பிதான் பார்த்துக்கொள்கிறார்."

"ஒரு சினிமா ரசிகனுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?"

"ஒவ்வொரு படத்துலேயும், ஒவ்வொரு விதமான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். சிலப் படங்களில் என்டர்டெயின்மென்ட் கிடைக்கும். சில படங்களில் ஒரு மெசேஜ் கிடைக்கும். சில படங்களைப் பார்க்கும்போது, தன்னம்பிக்கை கிடைக்கும். ஒவ்வொரு படத்துல இருந்தும் உங்களுக்குப் புதுசா எது கிடைக்கிறதோ, அதைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க. அப்பதான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆரோக்கியமான விஷயங்களை எதிர்பார்க்க முடியும். பல இயக்குநர்கள் தொடர்ந்து நல்ல சினிமா தருவார்கள். இதற்கு ஒரு ரசிகனா, நீங்கள் இதைக் கட்டாயம் செய்தே ஆகவேண்டும்."

- ரா.அருள் வளன் அரசு,
படங்கள்: தி.குமரகுருபரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க