'கமலோட அண்ணன்ங்கிறதால, வேலை வாங்காம விட்டுடாதீங்க!' சந்திரஹாசனின் கடைசி பட நினைவுகள் #VikatanExclusive

மல்ஹாசனின் அண்ணனும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் சில தினங்களுக்கு முன்பு மறைந்தார். கமல்ஹாசனின் சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் தலைகாட்டியிருந்தாலும், முக்கியக் கேரக்டர் ஒன்றில் அவர் நடித்த படம் 'அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க' என்ற காமெடிப் படம். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இயக்குநர் ஸ்டீபன் ரங்கராஜிடம் பேசினேன்.

''சில குறும்படங்கள் இயக்கியிருக்கேன். இது என் முதல் படம். வயதானவர்களுக்கு வர்ற காதல்தான் படத்தோட மையம். நான் சொல்ல வந்த கருத்து ஆடியன்ஸுக்குத் தப்பா புரிஞ்சுடக்கூடாது. அதனால, இந்தப் படத்துக்கு மரியாதையான ஒரு மனிதரை நடிக்க வெச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பாலுமகேந்திரா சார், பாரதிராஜா சார், மகேந்திரன் சார்... இவங்கெல்லாம் நடிக்கமாட்டாங்க. நடிச்சா, அந்தப் படத்துல ஏதோ ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும். அதுமாதிரி. தவிர, சாருஹாசன் சாரைத் தெரிஞ்ச அளவுக்கு, சந்திரஹாசன் சாரைப் பலருக்குத் தெரியாது. அதனால, இந்தப் படத்துல சந்திரஹாசன் சாரை நடிக்க வைக்கலாம்னு அவரை அணுகினேன். கதையே கேட்காம, 'எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. தொல்லை பண்ணாதீங்க'னு சொல்லிட்டார். ஐந்து நிமிடம் டைம் கொடுங்கனு சொல்லி, வலுக்கட்டாயமா கதை சொன்னேன். கதையைக் கேட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம், 'கண்டிப்பா நடிக்கிறேன்'னு சொன்னார்'' நடிக்க வைத்துவிட்ட உற்சாகமும், சந்திரஹாசன் மறைந்துவிட்ட கவலையும் கலந்து பேசுகிறார் ஸ்டீபன்.

சந்திரஹாசன் - ஸ்டீபன் ரங்கராஜ்

''படத்துல ராமசாமிங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கார். முதியோர் இல்லத்துல இருக்கிற அவருக்கு ஒரு காதல் வருது. அந்தக் காதலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் வருது. அனைத்தையும் இழந்து நிற்கிற வயசுல, அவருக்குக் கிடைக்கிற அந்தக் காதல்... என்ன ஆகுது. இதான் கதை. சந்திரஹாசன் சாருக்குக் கிடைக்கிற அந்தக் காதலி கேரக்டர்ல நடிகர் விக்ராந்த்தோட அம்மா ஷீலா நடிச்சிருக்காங்க. முழுக்க காமெடியா கதை சொல்லியிருக்கோம். அதேசமயம், முக்கியமான ஒரு கருத்து படத்துல அழுத்தமா இருக்கும். சந்திரஹாசன் சார் நடிச்சிருக்கிறதாலதான், இது மரியாதைக்குரிய படமா உருவாகியிருக்கு!.

சந்திரஹாசன் சார் உண்மையிலேயே ஒரு ஃபெர்பெக்ட் மனிதர். நடிக்க ஓகே சொன்னதும், தயாரிப்பாளர்கிட்ட 'எனக்குக் கேரவன் வேண்டாம். என் உதவியாளருக்கு பேட்டா வேணாம். சாப்பாடு மட்டும் போடுங்க'னு சொன்னார். தவிர, 7 மணிக்கு ஷூட்டிங்னா 6.30 மணிக்கு ஸ்பாட்ல இருப்பார். அவர் நடிக்காத காட்சிகளையும் ஆர்வமா வந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பார். ஒரு பெரிய நடிகரோட அண்ணன் அவர். அவரை நிற்கவைக்க எனக்குக் கஷ்டமா இருக்கும். 'எனக்குப் பிடிச்ச விஷயம்ப்பா இது. நீ ஏன் என்னை வேடிக்கை பார்க்குற... படத்தை எடுக்குற வேலையை மட்டும் கவனி'னு செல்லமா அதட்டுவார். என் உதவி இயக்குநர்கிட்ட  'கமலோட அண்ணன்ங்கிறதால, வேலை வாங்காம விட்டுடாதீங்க. நீங்க எதிர்பார்க்குறது நடக்குறவரை என்கிட்ட வேலை வாங்கிக்கிட்டே இருக்கணும்'னு சொல்லியிருக்கார். ஷூட்டிங் நடக்கும்போது, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆபீஸ்ல இருந்து பலபேர் பார்க்க வருவாங்க. அந்தச் சமயத்துல நான் அவரைக் கடந்துபோனா, 'ஸ்டீபன் ஷாட் இருக்கா, வரட்டுமா?'னு ஆர்வமா எந்திரிப்பார்.

சந்திரஹாசன்

படத்தோட க்ளைமாக்ஸ்ல அவருக்கு எட்டு பக்க வசனம் இருக்கு. டப்பிங் பண்ணும்போது, அனுஹாசன் மேடமும் அவரோட வந்தாங்க. படம் பார்த்துட்டு, ' 'பராசக்தி' சிவாஜி மாதிரி பேசவெச்சிருக்கியே'னு சிரிச்சார். 30 நாள் அவரோட இருந்தேன். வாழ்க்கையில மறந்துடவேகூடாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துட்டுப் போயிட்டார்.  இடையில அவருக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியலை. பிறகு ஒரே ஒருநாள் ஷூட்டிங் மிச்சம் இருந்தது. அவரோட பையனைத் துணைக்குக் கூட்டிக்கிட்டு வந்து ஷூட்டிங்ல கலந்துகிட்டார்.

சந்திரஹாசன் சார் எப்பவுமே க்ளீன் ஷேவ் முகத்தோட இருப்பார். என் படத்துக்காக தாடி வெச்சார். 'என்ன திடீர்னு தாடி வளர்க்குறீங்க?'னு கமல் சார் கேட்டிருக்கார். 'என் ஃபிரெண்டோட படத்துல நடிக்கிறேன்'னு சொல்லியிருக்கார். 'நான் ஷூட்டிங்ல இருக்கும்போது நீங்க ஆபீஸ்ல இருப்பீங்க. இப்போ நான் ஆபீஸ்ல இருக்கேன், நீங்க ஷூட்டிங்ல இருக்கீங்க. காலத்தோட கோலத்தைப் பார்த்தீங்களா?'னு கமல் சார் கமென்ட் பண்ணியிருக்கார்.

சந்திரஹாசன்

'பசங்களுக்காகவே வாழ்ந்து வாழ்ந்து நொந்து போயிட்டோம். இனிமே எங்களுக்காக கொஞ்சம் வாழணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு?', 'பையன் வீட்டுல அஞ்சு நாளும், பொண்ணு வீட்டுல அஞ்சு நாளும் சாப்பிட்டுக்க நாங்க என்ன பிச்சைக்காரங்களா?' - படத்துல இதுமாதிரியான வசனங்களையெல்லாம் சந்திரஹாசன் சார் பேசும்போது, அவ்ளோ ரசனையா இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமா பண்ணவர், இப்போ உயிரோட இல்லை. இந்தப் படம் அவருக்கான மரியாதையா இருக்கும். நாங்க அவருக்குக் கொடுக்குற சமர்ப்பணமா இருக்கும்!'' என்று முடித்தார் ஸ்டீபன் ரங்கராஜ்.

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!