Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆம்... சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியுடன் நடிக்கிறேன்!” - ஃபகத் பாசில்

சென்ற வாரம் அறிமுக இயக்குநர் மகேஷ் இயக்கத்தில் வெளியான டேக் ஆஃப் படத்திற்கு பயங்கர வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் நடித்திருந்த ஃபகத் பாசிலின் கதாபாத்திரமும் பாராட்டப்பட்டு வருகிறது. அதைப் பற்றியும், தன் சினிமா பயணம் குறித்தும் ஃபகத் பாசில் மலையாள சேனலுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

Fahad Fazil

'டேக் ஆஃப்' படத்தில் கடைசி ஸ்டேஜ் வரும் போது சேர்ந்த ஆள் நான். கதை விவாதத்திலோ, எழுதும் போதோ நான் இல்லை. நானும் மகேஷும் வேற ஒரு கதைக்கான பேச்சுவார்த்தையில் இருக்கும் போது, "குஞ்சாக்கோ - பார்வதி  நடிக்கற சின்னப்படம் ஒன்னு எடுக்கப் போறேன், கதைய கேளுங்களேன்"னு சொன்னார். அப்போ தான் அந்த 19 நர்ஸ்களை மீட்டு வந்த சம்பவத்தை பற்றிய படம்னு தெரியும். அதுக்குப் பிறகு ஆறு மாதம் கழித்து மறுபடி வந்து முழுக் கதையும் சொன்னார். "அந்த இந்தியன் அம்பாஸிடர் ரோல் நீங்க பண்ண முடியுமா?"னு கேட்டார். அம்பாஸிடர்னா இன்னும் கொஞ்சம் வயசு அதிகம் உள்ளவங்களா இருந்தா தானே சரியா இருக்கும்னு தயங்கினேன். 'நிஜத்தில் அந்த சம்பவத்தை ஹேண்டில் பண்ணவருக்கு கூட கம்மி வயசு தான் நீங்க பண்ணா சரியா இருக்கும், தாடி மட்டும் வளருங்க'னு சொன்னார். நானும் சம்மதிச்சிட்டேன். 

படம் நடிக்கும் முன்னால அந்த சம்பவம் பற்றி முழுக்க தெரிஞ்சுகிட்டீங்களா?

ஆமா. 19 பெண்கள், அந்த நாட்டு மொழி கூட சரியா தெரியாம, ஒரு போர்ப் பகுதியில் மாட்டிக்கிறது ரொம்ப பயங்கரமான விஷயம். அதைப் பற்றிய சில ரியல் ஃபுட்டேஜுகளையும் பார்த்தேன். ரொம்ப கஷ்டமா இருந்தது. இது மக்களால் ரிலேட் பண்ணிக்க முடியும்னு தோணுச்சு. ஏன்னா வலி எல்லாருக்கும் புரியும். 

குஞ்சாக்கோ போபன், பார்வதி உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

Take Off

சாக்கோ பற்றி சினிமாவுக்கு வெளிய தான் நிறைய பேசறதுக்கு இருக்கு. ரொம்ப நெருங்கிய நண்பர். ட்ராஃபிக், ஹரிகிருஷ்ணன் மாதிரியான அவருடைய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அருமையா நடிப்பார். 'டேக் ஆஃப்'ல கூட எல்லாருக்கும் நம்பிக்கை கொடுக்கும் ரோல் அவருடையது தான். பார்வதியை  எந்தப் படத்தில் பார்த்தாலும் அதுக்குன்னு ஒரு சிக்னேச்சரோடு கொடுத்திருவாங்க. திறமையான நடிகை.

நிறைய கேப் விட்டு நடிக்கற மாதிரி தெரியுதே, செலக்டிவான படங்கள் பண்றதாலா?

அடிப்படையில் நான் பயங்கர சோம்பேறி. கல்யாணத்துக்குப் பிறகு ஒரு ப்ரேக் எனக்குத் தேவையாவும் இருந்தது. நிறைய ட்ராவல் பண்ணேன், பார்க்காத படங்கள் எல்லாம் பார்த்தேன். அதனால கூட இந்த கேப் விழுந்திருக்கலாம். செலக்டிவ்னு இல்ல, நடிக்கற ரோல்கள் எல்லாம் எனக்கு சீக்கிரம் போர் அடிச்சிடும். அதனாலயே ஒரே ரோல மறுபடி ரிப்பீட் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன். 

'கையெத்தும் தூரத்து' படம் வந்தப்போ இனி ஃபகத் சினிமாவுக்கு பொருத்தமான ஆள் இல்லைனு நினைச்சவங்க பல பேர். அந்த இடத்தில் இருந்து நல்ல பெர்ஃபாமர்னு ஒரு இடத்திற்கு வந்தது எப்படி நடந்தது?

நான் எப்போதும் என் வாழ்க்கைய கேள்வி கேட்டது இல்ல. 'கையெத்தும் தூரத்து' படத்துக்குப் பிறகு அமெரிக்கா போயிட்டேன். அந்த சமயத்தில் என்னுடைய வயது பதினெட்டு, பத்தொன்பது தான். அந்த வயசில், அந்த புரிதலில், 'மகேஷின்டே பிரதிகாரம்' நடிச்சிருந்தாக் கூட அது மோசமாதான் வந்திருக்கும். அதுக்குப் பிறகு நிறைய டைம் இருந்தது, நிறைய அனுபவங்கள் கிடைச்சது. எப்போதும் ஒரு விஷயம் மாறாம இருக்காதில்ல, அதே போல என் நடிப்பும் மாறுச்சு. 

ஃபகத் பாசில்

ஹீரோன்னா இந்த உடம்பு, இந்த ஹேர்ஸ்டைல், இப்படித்தான் இருக்கணும்ங்கறத உடைச்சவர் நீங்க. அதை எப்படி பார்க்கறீங்க?

நான் ஒரே ஒருத்தர்கிட்ட என்ன முழுசா ஒப்படைச்சிடுவேன். அது என்னுடைய இயக்குநர். என்னால முடியாத காரியத்தை, முடியாதுன்னு நானே சொல்லிடுவேன். என்னை வெச்சு என்ன மாதிரியான வேலை வாங்கணும்னு அவருக்கும் தெரியும். மற்றபடி தோற்றத்தையும் மீறி நடிப்பு தான் நிக்கும்.

ஒரு எடிட்டர் இயக்கும் படம், சரியா வரும்னு நம்பிக்கை இருந்ததா?

மகேஷ் மேல எனக்கு எந்த வித சந்தேகமும் இல்ல. பல வருஷமா அவரை எனக்குத் தெரியும். அவர் திறமையைப் பற்றியும் தெரியும். ரெண்டாவது விஷயம், "நாம எவ்வளவு கஷ்டப்பட்டு ஷூட் பண்ணின சீனா இருந்தாலும், எடிட்டிங் டேபிள்ல அது வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சா, அதைக் க்ட பண்ணிடணும்"னு அப்பா அடிக்கடி சொல்வார். அப்படிப்பட்ட எடிட்டரே இயக்குநரா வரும் போது ஸ்க்ரிப்ட் கூட வாசிக்காம போயிடலாம்.

ஒரு படத்தில் நடிக்கலாம்னு எப்படி முடிவு செய்வீங்க?

ஒரு கதை கேட்கும் போது, நாம எங்கயோ பார்த்ததோ, கேட்டதோ, வாசித்ததோ மனசுக்குள் வரும். 'டேக் ஆஃப்' கதை கேட்கும் போது, ஈராக் பார்டர்ல இருந்து வெள்ளை உடை அணிந்த சில நர்ஸுகள் ஓடி வர்ற விஷுவல் தோணியது. அது தான் படத்துக்கான மையம்னு மகேஷ் சொன்னார். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இந்த முறை எனக்கு ரொம்ப சுலபமா இருக்கு. ஏன்னா, நாம நடிக்கறது லென்சுக்காக இல்ல, நாம அந்த இடத்தில் இருந்தா என்னா பிஹேவ் பண்ணுவோமோ அதை பண்ணணும்னு  இப்போ எல்லா நடிகர்களுக்கும் தெரியும். அதை தான் செய்திட்டிருக்காங்க. அதில் நம்ம ஸ்டைல் வித்தியாசமா இருக்க ஸ்பெஷலா ஏதாவது பண்ண வேண்டி இருக்கு. 

மகேஷின்டே பிரதிகாரம் படத்துக்காக சிறந்த நடிகர் விருது கிடைக்கலைனு வருத்தம் இருக்கா?

ஒரு ஷாட் நடிச்சு முடிச்சதும் இயக்குநரைப் பார்ப்பேன். அவர் என்னைப் பார்த்து சிரிச்சா, அது தான் என்னோட சந்தோஷம். விருது வேணாம்னு இல்ல, தந்தா வாங்கிகத்தான் போறேன். ஆனா, ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தில் விநாயகனை நடிக்க வெச்சிருந்தா, வேற டோனில் இருந்திருக்கும், அருமையான சினிமாவா வந்திருக்கும். ஆனா, பத்து ஃபகத் பாசில் நடிச்சிருந்தாலும் கம்மட்டிப்பாடத்தில் விநாயகன் செஞ்ச ரோலை சிறப்பா செய்திருக்க முடியாது. அந்த விருதுக்கு விநாயகன் தான் தகுதி உள்ளவர், அதனால எந்த வருத்தமும் இல்ல.

உங்க சமகால நடிகர்களின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கறீங்க?

எல்லாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு. ஒரு நடிகருக்கு அவருக்கான ஸ்டைலை உருவாக்கறதும், அதனை ஆடியன்ஸ் மனதில் பதிய வைப்பதும் தான் பெரிய காரியம். அப்படியான திறமை உள்ள நடிகர்களா இருக்கறாங்க எல்லாரும்.

உங்க அப்பா ஒரு இயக்குநர், அந்த சினிமா பின்னணி உங்களுக்கு உதவியிருக்கா?

இன்னிக்கு வரை சினிமாவில் அப்பாவுடைய பேர பயன்படுத்தியது இல்ல, எப்பவும் பண்ணப் போறதும் இல்ல. யாரா இருந்தாலும் அவங்களுடைய வேலைக்காக தான் மதிக்கப்படுவாங்க.

மலையாள சினிமாத் துறை எப்படி இருக்கு?

எவ்வளவோ முன்னேறி போயிட்டிருக்கோம். இன்னும் சில வருஷத்தில் வேற ஒரு லெவலில் இருப்போம்னு நம்பறேன். ரொம்ப சின்ன காலகட்டத்துக்குள் உலக ரசிகர்கள் எல்லோரிடமும் போய் சேர்வோம்னு உறுதியா சொல்லுவேன். 

அடுத்ததா என்ன படங்கள் நடிச்சிட்டிருக்கீங்க?  

தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்', விஜய்சேதுபதி நடிக்கும் 'அநீதிக் கதைகள்' படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இப்போ மலையாளத்தில் ரோல் மாடல்ஸ், தொன்டிமொதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும் படங்கள் நடிச்சு முடிச்சிட்டேன்.

ஃபகத் நடிகரா மட்டும் இருப்பாரா? இல்ல இயக்குநர் ஆகும் ஆசை இருக்கா?

இயக்குநர் ஆசை எல்லாம் இல்ல. தயாரிப்பு வேலைகளில் ஆர்வம் இருக்கு. பார்க்கலாம்!

ஃபகத் பாசில் பேட்டி

மொழிபெயர்ப்பு:  பா.ஜான்ஸன்

நன்றி: Manorama News

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்