வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (05/04/2017)

கடைசி தொடர்பு:15:56 (05/04/2017)

'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எப்படி வென்றோம் தெரியுமா!?’ - உற்சாக ஆர்யா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான 'நம்ம அணி' பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிக்கான காரணம் குறித்து நடிகர் ஆர்யாவிடம் பேசினோம்.

"தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற எண்ணம் துளியும் இல்லை. ஆனால், நாங்கள் எடுக்கும் படங்கள் அல்லது நடிக்கும் படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து கொண்டே இருந்தன. தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினால், அவர்கள் எங்களை கிள்ளுக்கீரைப் போல நடத்தினர். எங்களை நடத்திய விதம் அவ்வளவு மோசமக இருந்தது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எங்களை அவர்களாகத்தான் குதிக்க வைத்தனர். அந்த தூண்டுதல்தான், எங்களை வெறித்தனமாக வேலை செய்ய வைத்தது. இது சக தயாரிப்பாளர்களிடம், எங்கள் மீது நம்பிக்கையை விதைத்தது. சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும்பாலும், எங்களைத்தான் ஆதரித்தார்கள். பல ஆண்டுகளாகத் தயாரிப்பாளராக இருக்கும் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சிலர் கூட, எங்களின் புதிய அணியை ஆதரிக்க முன்வந்தனர். பழம்பெரும் தயாரிப்பார்கள் முதல் சின்ன பட்ஜெடில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நற்பெயர் வாங்கினோம்.

எங்கள் நோக்கம் பொதுவானது. துளியும் சுயநலம் இல்லை. நாங்கள் இந்த பதவிக்கு வந்தால், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ஆரோக்கியமாக மாறும் என்று அனைவரும் நம்பினார்கள். அந்த நம்பிக்கைதான் நாங்கள் கண்ட வெற்றி. இந்த வெற்றிக்காக உழைத்த கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், மிஷ்கின், சுந்தர்.சி, ஆர்.கே.சுரேஷ் அனைவருக்கும் நன்றி. யாரும் யாருக்கும் காசு கொடுக்கவில்லை. நேர்மையாக வேலைப்பார்த்தார்கள். மற்ற தயாரிப்பாளர்களை அழைத்து நடக்கும் விஷயங்களை, நாங்கள் செய்யப் போகிற விஷயங்களைத் தெளிவாகப் பேசினோம். எங்கள் வார்த்தை மற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. சொன்னது போல் எங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். 

நடிகர் ஆர்யா

நடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்குவதால்தான் தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அது, அப்படி இல்லை. ஒரு கடைக்குப் போகிறோம். குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்குகின்ற அளவுக்கு நம்மிடம் காசு இருந்தால் அந்தப் பொருளை வாங்குவோம். இல்லையெனில் நம் கையில் எந்த அளவுக்குக் காசு இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற்போல பொருளை வாங்கப் பார்ப்போம். ஒருவேளை அந்த பொருள், நமக்கு ரொம்பப் பிடித்திருந்தால், அதிக விலை கொடுத்து வாங்குவோம். இதையும் அதுமாதிரிதான் பார்க்கிறேன். பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல், கதையையும், நடிகர்களையும் தயாரிப்பாளர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். நடிகர்கள் மீது குற்றம் சுமத்துவதில், துளியும் நியாயமில்லை. 

இனி வரும் நாட்களில், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் எப்படி வருகிறது என்பதைக் கண்டறிந்து, அதனைக் களைய முற்படுவோம். படம் வெளியிடும் முறையைச் சீரமைக்க உள்ளோம். அதே நேரத்தில், தயாரிப்பில் தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்து, அனைவருக்கும் லாபம் வரும்படி பல புதிய திட்டங்களை கொண்டுவர உள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு புதுப்படம் திரைக்கு வந்தால், அதைத் தியேட்டரிலேயே திருட்டுத் தனமாக பதிவு செய்வதும், அதை அடுத்த நிமிடமே இணையதளத்தில் வெளியிடுவதும், கேபிள் டி.வியில் ஒளிபரப்புவதும், சி.டி போட்டு விற்பனை செய்வது போன்ற செயல்கள் இனி தமிழ்நாட்டில் நடக்காது. இனி ஒருபோதும், அதுபோன்ற செயல்களை, நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடுத்த நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும். மொத்தத்தில் தமிழ் சினிமா இனி ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பதானகவும் இருக்கும்" என்றார்.

- ரா.அருள் வளன் அரசு

நீங்க எப்படி பீல் பண்றீங்க