"விஜய் அண்ணாகிட்ட எப்படி அந்த டயலாக் சொல்றதுனு தயங்குனேன்!" 'கில்லி' தங்கச்சி ஜெனிஃபர் | I was nervous to speak that dialogue in front of Vijay, says Jennifer

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (17/04/2017)

கடைசி தொடர்பு:11:46 (20/04/2017)

"விஜய் அண்ணாகிட்ட எப்படி அந்த டயலாக் சொல்றதுனு தயங்குனேன்!" 'கில்லி' தங்கச்சி ஜெனிஃபர்

"விஜய் அண்ணாவோடு நடிக்கணும் என்றதுமே செம ஹாப்பியாயிட்டேன். ஆனால் இப்படி ஒரு சிக்கல் வரும்னு நான் நினைக்கல" என்று பீடிகையோடு ஆரம்பத்தார் ஜெனிஃபர். கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர். 

 

 

 'கில்லி' படத்தில் விஜய் டான்ஸ், ஆக்‌ஷன், பிரகாஷ் ராஜின் செல்லம், சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகியவற்றோடு பேசப்பட்டது விஜய் - ஜெனிஃபர் நடித்த அண்ணன், தங்கை காட்சிகள். அப்பாவிடம் ஒருவரையொருவர் போட்டுக்கொடுக்கும் காட்சிகள் நமது வீட்டில் நடப்பதுபோல இயல்பாக அமைந்திருக்கும். அதுவும் இறுதிக்காட்சியில் அண்ணனை கபடி விளையாட அனுமதிக்குமாறு அப்பாவிடம் கெஞ்சும் காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார் ஜெனிஃபர். 

 

கில்லி

"விஜய் அண்ணாவோடு அதற்கு முன் நேருக்கு நேர் படத்திலேயே நடிச்சிருந்தேன். அதனால், கில்லி படத்தில் நடிக்க பயங்கர எதிர்பார்ப்போடு இருந்தேன். அதேபோல செம ஜாலியாகவே ஷூட்டிங் நாட்கள்  இருந்துச்சு. நடிக்கும்போது பல விஷயங்கள் விஜய் அண்ணா சொல்லிக்கொடுத்தாங்க. ரயிலில் போகும்போது மயக்க மருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து ஏமாத்தினதாக அப்பாகிட்ட சொல்ற சீன் இருக்குல. அதை மட்டும் என்னால மறக்கவே முடியாது. அந்த சீன் விஜய் அண்ணா கையில் வைச்சிட்டு பேசற பிஸ்கெட் பாக்கெட், குச்சி எல்லாத்தையும் என்கிட்டேதான் வீசுவாங்க. அதைச் சரியா கேட்ச் பிடிக்கறதிலே என் கவனம் முழுக்க இருக்கும். அந்த சீன்ல, 'பதிலைச் சொல்றா' என்கிற டயலாக் வரும். அதைச் சொல்லசொன்னதுமே நான் பயங்கரமா ஷாக் ஆயிட்டேன். ஏன்னா... அவர் சீனியர் ஆர்ட்டிஸ்ட். இப்படிச் சொன்னா என்ன சொல்வாறோன்னு பயமா இருந்துச்சு. அதனாலேயே தயங்கி, தயங்கி நின்னுட்டு இருந்தேன். 

 

 

விஜய் அண்ணாதான், அந்த சீன்ல, இந்த டயலாக்கைச் சொன்னால் நல்லா இருக்கும்னு தைரியம் சொன்னாங்க. அப்பறம்தான் நான் அந்த டயலாக்கைச் சொன்னேன். சூட்டிங்கில் எப்ப ஃப்ரீ டைம் கிடைச்சாலும் 'பதிலைச் சொல்றா' டயலாக்கைச் சொல்லச் சொல்வார். பிரகாஷ் ராஜ் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தாலே செம ரகளையாக இருக்கும். திரையில பார்க்கிறமாதிரியே அவ்வளவு உற்சாகமாக இருப்பார். வழக்கமாக, அதிகம் பேசாம இருக்கும் விஜய் அண்ணாவே கலகலப்பாக இருப்பார்.

எந்த ஊரில் இருந்தாலும் கிறிஸ்துமஸ்க்கு வீட்டுக்கு வந்துடுவேன். ஆனா, அந்த வருஷம் கில்லி படத்து ஷூட்டிங் இருந்ததால அங்கேயே கிறிஸ்துமஸ் கொண்டாடினோம்.  எல்லோருக்கும் பிரியாணி ஆர்டர் பண்ணியிருந்தாங்க. யூனிட்டில் இருந்த எல்லோருடனும் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினதை மறக்கவே முடியாது. அந்தப் படம் முடிந்தாலும் கிறிஸ்துமஸ் வாழ்த்து விஜய் அண்ணாகிட்டேருந்து கரெக்டா வந்துடும். 

Jenifferகில்லி படத்தோட சக்ஸஸ் மீட்டிங்கில், என்னை தனியா அழைச்சி, 'நடிக்கும்போதுகூட தெரியல, படத்தில பார்க்கும்போது சூப்பரா நடிச்சிருக்க, அதுவும் க்ளைமாக்ஸ்ல அண்ணனுக்காக அழற சீன்ல அருமையாக நடிச்சிருக்க'னு பாராட்டினார் விஜய் அண்ணா. இப்பவும் யாராவது அண்ணன், தங்கச்சி படம் பற்றிச் சொன்னால், நிச்சயம் கில்லி படத்தைப் பற்றி சொல்லாம இருக்க மாட்டாங்க. அதனாலதான் இத்தனை வருஷங்களானாலும் ரசிகர்கள் அதைக் கொண்டாடுறாங்க. 

 

ஜெனிஃபர்


இப்ப, ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்.  சின்ன வயசுலேர்ந்து நடிச்சிட்டு வருவதால், பலரோடும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. ‘நேருக்கு நேர்’ படத்தில் முதலில் அஜித் சார்தான் நடிச்சார். அதனால் அவரோடு ஒரு வாரம் நடிச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ் விஜய் சார்க்கு ஜோடியாக நடிப்பியான்னு கேட்பாங்க, எனக்கு எப்பவும் அவர் அண்ணங்கிற ஃபீல்தான் இருக்குனு சொல்வேன். 


- வி.எஸ்.சரவணன்


டிரெண்டிங் @ விகடன்