வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (20/04/2017)

கடைசி தொடர்பு:14:37 (20/04/2017)

100 கலைஞர்கள்... 100 சவரன் தங்கம்... எஸ்.பி.ஜனநாதனை நெகிழச்செய்த விஜய் சேதுபதி!

" 'கீசக வதம்' என்ற சலனப் படம் தான் தென் இந்தியாவிலேயே முதன்முதலாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் நடராஜ முதலியார். இதற்கு முன், 1913-ம் ஆண்டு 'அரிச்சந்திரா' என்ற சலனப் படம் வெளிவந்தது. அதை இயக்கியவர் தாதா சாகிப் பால்கே. அவர் பெயரில்தான் சினிமாவின் உயரிய விருதான 'பால்கே' விருதைக் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஆனால், யாரும் நடராஜ முதலியாரை கணக்கில் கூட எடுத்துக்கொண்டது கிடையாது. யாரும் இவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. இவரைத் 'தென் இந்திய பால்கே’-னு கூட அழைக்கலாம். அதனால், நாங்கள் இவரை மையமாக வைத்து இந்த விழாவை எடுக்கிறோம். 'கீசக வதம்' 1917-ல் வெளியானது என சிலர் சொல்கிறார்கள், சிலர் 1918-ல் வெளியானது என்கிறார்கள். நாங்கள் 1917-ம் ஆண்டை மையமாக வைத்துக் கொண்டாடுகிறோம். இந்த விழாவைக் கொண்டாட முதற்காரணம் விஜய் சேதுபதிதான்" என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 

விஜய் சேதுபதி

இவர் அமைப்பான 'உலகாயுதா ஃபவுண்டேஷன்' தமிழ்த் தேசிய சலனப்பட நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக திரைப்படத்துறையிலுள்ள ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று மூத்த கலைஞர்களைத் தேர்வு செய்து, மொத்தம் நூறு பேருக்கு தலா ஒரு சவரன் தங்கம் என நூறு சவரன் தங்கப்பதக்கம் பரிசளித்து மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்த நூறு சவரன் தங்கத்துக்குமான செலவுத்தொகையை ஏற்றிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

"நாங்க இந்த விழாவைக் கொண்டாட சில ஆண்டுகளாகவே திட்டமிட்டோம். ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்தபோது 100-வது ஆண்டு இந்தியா சினிமாவை விழாவாக எடுத்து கொண்டாடினாங்க. அப்பவே இந்த விழாவில் நம் முக்கிய நோக்கம் தமிழ் சினிமாவுக்கு ஆவணக் காப்பகம் அமைக்கறதாத்தான் இருக்கணும்னு சொன்னேன்" என்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.

"அன்றைய தமிழ் சினிமா முதல் இப்போது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த இயக்குநர் பாலுமகேந்திரா படம் வரை பல படங்களை நாம் தொலைத்துவிட்டோம். இதைத்தான் நாம் முதலில் ஆவணமாக பத்திரப்படுத்தவேண்டும். அதுதான் சினிமா 100-வது ஆண்டுக்கு நாம் செய்யும் சேவையாக இருக்கும்னு சொன்னேன். வழக்கம்போல் வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமே நடந்து முடிந்துவிட்டது. சரி, நம்ம இந்த முயற்சியில் இறங்கலாம் என இறங்கினோம். சினிமாவுக்காக யார் எல்லாம் தியாகம் செய்து உழைத்தார்களோ... அவர்களையே சினிமா ஆட்களுக்குத் தெரியாது. சரி, நாம் இந்த ஆய்வைத் தொடங்கலாம் என அந்த வேலையில் இறங்கினோம். 

முதலில் சினிமா  நெகட்டிவ் ரோலில்தான் எடுக்கப்பட்டிருக்கு. அப்புறம்தான் டிஜிட்டலுக்கு மாறியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழில் கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகிறது என வைத்துகொண்டால், ஒரு படத்தின் நெகட்டிவ் ரோலும் சராசரியாக 2 லட்சம் அடிக்கு வரும். அதை எடிட் செய்து குறைத்து 15,000 அடிக்கு கொண்டு வருவாங்க. இந்த 15,000 அடியை சராசரியாக 300 பிரின்ட் போட்டு உலகம் முழுக்க அனுப்புவார்கள். இதை வருடக் கணக்கில் வைத்துக்கொண்டு கணக்கிட்டால் ஒரு ஆண்டுக்கு 9 கோடி அளவுக்கு நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் ரோலில் படம் தயாரித்து இருக்கிறார்கள்.

தமிழ் வந்த 'தனி ஒருவன்' படம்தான் தமிழ் சினிமாவில் கடைசியாக நெகட்டிவ் ரோலில் எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை நெகட்டிவில் ஒளிப்பதிவு செய்தவர் கேமராமேன் ராம்ஜி. அதன்பின் எல்லா படங்களுமே இப்போது டிஜிட்டலில்தான் எடுக்கிறாங்க. இந்த நெகட்டிவ் ரோல் அழிந்த நேரத்தில் பெரிய கூட்டமே சினிமாவை விட்டுக் காணாமல் போய் இருக்கிறாங்க. 10,000 பேருக்கு மேல் வேலையை இழந்துவிட்டார்கள். அவங்க எல்லாரும் சினிமாவில் பெரிய பெரிய ஜாம்பவான்களாக இருந்தவர்கள். அவர்களை சினிமாகாரர்களுக்கே தெரியாது. அதுதான் யதார்த்த உண்மை.  அவர்களைத் தேடிப்பிடித்து மரியாதை செய்யணும்னு நினைத்தோம்.

அதுதான் இப்ப நூறு கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு ஆளுக்கு ஒரு சவரன் என நூறு பேருக்கு நூறு சவரன் தங்கம் தருகிறோம். இதைத் தர முன்வந்தது நடிகர் விஜய் சேதுபதி. அது மட்டும் இல்லாமல், 'பிலிம் காட்டியவர்கள்' என்ற புத்தகத்தின் இரண்டாவது பகுதியை வெளியிடுகிறோம். இந்தப் புத்தகம் சினிமா துறையில் முதல் முயற்சியில் இறங்கியவர்களைப் பற்றியது. முதல் முறையா சினிமா ஸ்கோப்பில் படம் எடுத்தவர்; முதல்முறையா கலர்பிலிம் எடுத்தவர் என மொத்தத் தொகுப்புதான் இது. என் உதவி இயக்குநர் யோகானந்த் எழுதி இருக்கிறார். அந்த ஆளுமைகளின் படங்களை வரைந்தவர் ஓவியர் மகேஷ்."

"'உலகாயுதா' அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்?"

"புத்தம், சமணம், மீமாம்சம், சைவ சித்தாந்தம், வேதாந்தம் போன்ற பல தத்துவங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த 'உலகாயுதம்'. உலகாயுதம் என்றால் பொருள் முதல் வாதம். கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் பொருள்முதல் வாதிகள். அதாவது வரலாற்று, இயக்கவியல், பொருள் முதல்வாதிகள். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நான் உலகாயுதாவை தொடங்கினேன். சினிமா துறைக்கு வந்தபின் இந்த அமைப்பை பயன்படுத்தணும்னு நினைத்தேன். அப்படித்தான் 1932-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன்முதலாகப் பேசும்படமான 'காளிதாஸ்' வெளியானது. அது 75-வது ஆண்டு நிறைவுபெறும் வேளையில், 75 சினிமா கலைஞர்களைத் தேர்ந்தெருத்து 75 சவரன் தங்கம் வழங்கினோம். இதை நான் யார்கிட்டயும் சொன்னது கிடையாது. அப்ப நான் இயக்கிய 'பேராண்மை' படத்துக்கு 'ஜிவி பிலிம்ஸ்' தயாரிப்பதாக இருந்தார்கள். அவர்களிடம் நான் இந்த விஷத்தைச் சொன்னதும் அவர்கள்தான் தானாக முன் வந்து 75 கலைஞர்களுக்கும் தங்கம் வழங்கினார்கள். நான் வழங்கும் அளவுக்கு என்கிட்ட என்னைக்குமே பணம் இருந்தது கிடையாது."

"இனி வருடா வருடம் இதுபோல கொண்டாடுவீர்களா?"

"முடிந்த வரை கொண்டாடுவோம். ஆனால், எங்களுக்கு உள்ள முக்கியமான வேலை சினிமாவை ஆவணப்படுத்துவதுதான். சினிமாவுக்கான ஆவணம் என்பது சினிமாவுக்கான ஆவணமாக மட்டும் இருப்பதில்லை. அது தமிழர்களின் வரலாறாகவும் இருக்கிறது. 1916-ல் மவுண்ட் ரோட்டில் படம் பிடித்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது மவுண்ட் ரோடு எப்படி இருந்தது எனப் பார்க்கலாம். காவலர்கள் என்ன உடை உடுத்தினார்கள் என்பதை அறிய முடியும்... இப்படிப் பல நன்மைகள் இருக்கிறது. ஒரு ஆவணத்துக்குள் நிறைய ஆவணம் இருப்பதுதான் சினிமா. இது சினிமாக்காரனுக்கானது மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது."

விஜய் சேதுபதி

"விஜய் சேதுபதி எப்படி 100 சவரன் தர முன் வந்தார்?"

"இந்த நிகழ்வு முக்கியமா நடப்பதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான். 100 சவரன் ஒருவர் தர முன் வருகிறார் என்றால், அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்க வேண்டும். அவர் என் படத்தில் நடித்து இருக்கிறார். அடிக்கடி பேசிட்டு இருப்போம். நான் யதார்த்தமா இந்தக் கருத்தை அவர்கிட்ட சொல்லும்போது, 'நான் தரேன் சார் 100 சவரன் தங்கம். நீங்க வேலையை ஆரம்பிங்க'னு சொன்னதால் தான் இப்ப இந்த விழாவே நடக்குது. அவர் சொன்னது மிகப் பெரிய பதிவாக நான் பார்க்கிறேன். அதனால்தான் நீங்களும், நானும் இந்த விஷயம் குறித்து பேசிட்டு இருக்கிறோம். அவர் இதுக்கும் மேல. வரும் நூறு பேருமே வயதானவர்களாக இருப்பார்கள். அவங்க வருவதற்குச் சிரமம் இருக்கக்கூடாது என்பதால், வந்துபோகும் செலவயையும் விஜய் சேதுபதி ஏற்று இருக்கிறார். விஜய் சேதுபதி நல்ல நடிகர், நல்ல கலைஞனைத் தாண்டி நல்ல மனிதர்."

விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து பேசினோம், " 'உலகாயுதா' மூலம், நூறு சவரன் தங்கப்பதக்கம் கொடுத்து சினிமா கலைஞர்களை மரியாதை செய்யணும்னு சார் என்கிட்ட சொன்னதும். 'நான் தரேன் சார்'னு சொன்னேன். முதல்ல அவர் வேண்டாம்னு மறுத்தார். 'எனக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்க சார்'னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டார். ஒருத்தர் காசு கொடுப்பதால் பெரிய ஆளு கிடையாது. அத்தனை கலைஞர்களுக்கும் மரியாதை செய்யணும்னு  நினைத்த அவர்தான் பெரிய மனசுக்காரர். இந்த சினிமா நூறாவது ஆண்டில் நானும் இருக்கேன் என்பதே எனக்கு பெருமைதான். எனக்கு இந்த மரியாதை, இந்த வாழ்க்கை, இந்த அடையாளம் கொடுத்தது எல்லாமே சினிமாதான். சினிமா என்பது வெறும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமே கிடையாது. சினிமாவுக்கு பின்னாடி எவ்வளவோ கலைஞர்களின் உழைப்பு இருக்கு. அவர்களுக்கு எல்லாம் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாக இந்த விழாவைப் பார்க்கிறோம். அவ்வளவுதான்." என்கிறார் அடக்கமாக.

- நா.சிபிச்சக்கரவர்த்தி
 


டிரெண்டிங் @ விகடன்