Published:Updated:

`` `போதுண்டா சாமி'ங்கிற அளவுக்கு ரெண்டு வார்த்தைகளை இந்த வருஷம் கேட்டுட்டேன்!" 'பிக் பாஸ்' காயத்ரி ரகுராம் #2017ViralCelebs #ThrowBack2017

கு.ஆனந்தராஜ்
`` `போதுண்டா சாமி'ங்கிற அளவுக்கு ரெண்டு வார்த்தைகளை இந்த வருஷம் கேட்டுட்டேன்!" 'பிக் பாஸ்' காயத்ரி ரகுராம் #2017ViralCelebs #ThrowBack2017
`` `போதுண்டா சாமி'ங்கிற அளவுக்கு ரெண்டு வார்த்தைகளை இந்த வருஷம் கேட்டுட்டேன்!" 'பிக் பாஸ்' காயத்ரி ரகுராம் #2017ViralCelebs #ThrowBack2017

2017-ம் ஆண்டின் பரபர பிரபலங்களில் ஒருவர், 'பிக் பாஸ்' காயத்ரி ரகுராம். இந்த ஆண்டு தனக்கு எப்படியிருந்தது என பதிலளிக்கிறார். 

"2017-ம் ஆண்டில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம் அளித்த விஷயம் எது?" 

"எனக்கு நாய்க்குட்டினா ரொம்பப் பிடிக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து நாய்களை வளர்க்கிறேன். இந்த வருஷம் ஆகஸ்ட் மாசம் புதுசா ஒரு நாய்க்குட்டி வீட்டுக்கு வந்துச்சு. அவள் பெயர், 'இவா (eywa)'. வீட்டிலிருக்கும் சமயங்களில் அவளோடுதான் என் நேரத்தைக் கழிப்பேன். அவள் வருகை என்னை ரொம்பவே சந்தோஷப்படுத்தியிருக்கு." 

"2017-ல் மிகவும் வேதனை அளித்த விஷயம்..." 

"உண்மை என்ன எனத் தெரியாமல், டிவியில் காட்டப்பட்ட 'பிக் பாஸ்' வெர்சனை மட்டுமே நம்பின ரசிகர்களின் உணர்வுகளும், அதை வெளிப்படுத்தின விதமும். மேலோட்டமான கண்ணோட்டத்தில், ஒருவர் சொன்னதை அப்படியே நம்பி, தவறா ஒப்பீடு செய்தாங்க. என் தரப்பு நியாயத்தை புரியவைக்க எவ்வளவோ முயற்சித்தும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது வேதனையைக் கொடுத்துச்சு." 

"2017-ல் நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை?"

" 'பிக் பாஸ்' மற்றும் 'காயத்ரி'. இந்த ரெண்டு வார்த்தைகளும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியும், அதற்குப் பிறகும் 'போதும்டா சாமி' என்கிற அளவுக்கு நிறையவே கேட்டுட்டேன்.'' 

"2017-ம் ஆண்டில் உங்களுக்குப் பிடித்த ஒருவருவரும், எரிச்சலூட்டிய ஒருவரும்..." 

"என் நண்பர்கள் பலருமே எனக்கு ரொம்பப் பிடிச்சவங்களா இருந்தாங்க. குறிப்பா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களான நமீதா மற்றும் ரைசா. காரணம், அந்த வீட்டில் நடந்த விஷயங்களின் உண்மை எல்லா போட்டியாளர்களுக்குமே தெரியும். ஆனா, இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. 'தான் மட்டும்தான் மனிதர்' என்கிற கண்ணோட்டத்தில் சில போட்டியாளர்களை கடுமையா காயப்படுத்தின நபர்கள் எல்லோருமே எரிச்சலூட்டினாங்க." 

"இந்த வருடம் உங்களை பற்றிய கிண்டலில் நீங்களே ரசித்தது எது?" 

" 'அம்மா தாயே' உள்ளிட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நான் பேசின பேச்சுகளை டப்ஸ்மாஷ் பண்ணியிருந்தாங்க. எக்கச்சக்க ட்ரோல், மீம்ஸ்னு வெச்சு செஞ்சுட்டாங்க. 'நான்கூட லட்சக்கணக்கான பேரை சிரிக்க வெச்சிருக்கேனா?'னு நினைச்சு மனம்விட்டு சிரிச்சேன்." 

"இந்த வருடம் பிடித்த படம்... " 

"நிறையப் படங்கள் பிடிச்சுது. அதில், 'கோகோ (CoCo)' கார்ட்டூன் மூவி என் மனசை ரொம்பவே பாதிச்சுது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், அன்பை ஆழமாகச் சொன்ன அந்தப் படத்தை எல்லாக் குழந்தைகளும் பார்க்கணும். அந்தப் படத்தை இன்னும் பலமுறை பார்க்கும் ஆசை வந்துருச்சு.'' 

"2017 பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்..." 

"ஏற்ற இறக்கங்கள்!" 

"2018-ம் ஆண்டுக்கு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளும் ஸ்லோகம்/மந்திரம் என்ன?" 

"2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் 'காயத்ரி மந்திரம்' மாதிரி என் பெயரை பேசி, திட்டித் தீர்த்திருக்காங்க. நான் எந்த மந்திரத்தையும் பயன்படுத்தலை. 'ஒரு வாழ்க்கை. அழகாக அதை அனுபவிக்கணும்' என்கிற மந்திரத்தை அடுத்த வருஷத்தில் அடிக்கடி உச்சரிக்கப்போறேன்." 

"இந்த வருடத்தில் ரொம்பவே கலங்கின தருணம்..." 

"திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிச்சு உயிரிழந்ததும், 'நீட் தேர்வு' அனிதாவின் மரணமும் எனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துச்சு. சோஷியல் மீடியா தாக்கம் இந்த வருஷம் அதிகமா இருந்துச்சு. அதில், நானும் ஒரு பலியாடு. அதனால் நானும் என் குடும்பத்தாரும் நிறையவே கலங்கினோம். என்னைப் பற்றி சோஷியல் மீடியாவில் மீம்ஸ், ட்ரோல் போட்டவங்க, 'நான்தான் போட்டேன்'னு வெளிப்படையா சொல்லிக்கவும் இல்லை. சொல்லப்போறதும் இல்லை. இப்படி மறைஞ்சிருந்து ஒருத்தரை காயப்படுத்துறவங்களால், தான் காயப்படுத்தும் நபரின் மனவேதனையை உணரமுடியாது. அந்த வேதனை, அவங்களுக்கோ, அவங்க குடும்பத்தாருக்கோ நிகழும்போது உணர்வாங்க.'' 

"2017-ம் ஆண்டில் 'இந்த விஷயத்தை சிறப்பா செய்தோம்' எனப் பெருமைப்படும் விஷயம் எது?" 

"ரொம்ப காலமா நான்வெஜ் சாப்பிடக்கூடாதுனு நினைச்சுட்டிருந்தேன். ஆனா, ஃபாலோ பண்ண முடியாமல் இருந்துச்சு. இந்த வருஷம் ஆரம்பத்தில், ஒருநாள் எனக்குப் பிடிச்ச கடவுள் கிருஷ்ணரை நினைச்சுட்டிருந்தேன். அப்போ காலிங் பெல் அடிச்சது. பார்த்தால், 'இஸ்கான்' கோயிலிலிருந்து வந்திருந்த சிலர் கிருஷ்ணர் படத்தைக் கொடுத்தாங்க. அப்பவே தீர்க்கமா முடிவெடுத்து, நான்வெஜ் சாப்பிடறதை நிறுத்திட்டேன்." 

"2018-ம் ஆண்டில் எதிர்பார்க்கும் விஷயங்கள்..." 

"என் படம் 'யாதுமாகி நின்றாய்' ரிலீஸ் ஆகப்போகுது. அந்தப் படம் ஹிட் ஆகணும்னு. நான் உள்பட யாரும் அடுத்தவங்களை காயப்படுத்தாமல் இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.'' 

"2018-ல் 'பிக் பாஸ்' சீசன் 2 எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?" 

"எங்களை மாதிரியில்லாமல், அடுத்த சீசன் போட்டியாளர்கள் ரொம்பவே பயிற்சி எடுத்துட்டு வருவாங்க. அதனால், முதல் சீசன் மாதிரி சுவாரஸ்யமா இருக்காதுனு நினைக்கிறேன்."