Published:Updated:

"ஸ்ரீதேவிக்குக் கொடுத்த மரியாதையை ஆராயி, மதுவுக்கும் கொடுத்துதான் ஆகணும்!" - நடிகர் பிரசன்னா

சுஜிதா சென்
"ஸ்ரீதேவிக்குக் கொடுத்த மரியாதையை ஆராயி, மதுவுக்கும் கொடுத்துதான் ஆகணும்!" - நடிகர் பிரசன்னா
"ஸ்ரீதேவிக்குக் கொடுத்த மரியாதையை ஆராயி, மதுவுக்கும் கொடுத்துதான் ஆகணும்!" - நடிகர் பிரசன்னா

"விழுப்புரத்தில் ஆராயி  என்பவர் தாக்கப்பட்டு மற்றும் அவரது எட்டு வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா, அல்லது வேறு காரணமா? கேரளாவில் மது என்ற இளைஞரைக் கொன்ற கும்பலைக் கைது செய்ததைப்போல இதிலும் நடவடிக்கை எடுக்கப்படுமா? மதுக்களும், ஆராயிகளும், பிள்ளைக் கொலைகளும், வன்புணர்வுகளும் நாள்தோறும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர் செய்யாத நாம், சிரியாவின் படுகொலைகளை எண்ணி உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது?" என்று ஆராயியின் மகன் கொலை செய்யப்பட்டதைப் பற்றியும், கேரள பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மது அடித்துக்கொல்லப்பட்டதைப் பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நடிகர் பிரசன்னாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். 

"தினம் தினம் இப்படியான பிரச்னைகள் இந்தியாவில் நடந்தேறுகின்றன. ஆனால், அவற்றுக்குக் கருத்து சொல்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடிகிறது? குறைந்தபட்சம் என்னுடைய ஆதங்கத்தை எனது ட்விட்டர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்" என்று நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், நடிகர் பிரசன்னா. 

"ஸ்ரீதேவி மரணத்தால் ஆராயியின் மகன் கொலை, மகள் பாலியல் வன்புணர்ச்சி பற்றியும், அதன் பின்னணி காரணங்கள் பற்றியும் அதிகம் பேசப்படவில்லை என்று நினைக்கிறீர்களா?"

"திரையுலகில் முடிசூடா மகாராணியான ஸ்ரீதேவி அவர்களுக்கான மரியாதையை நாம கொடுத்துதான் ஆகணும். அவங்களைப் பத்தி பேசக்கூடாதுனு நான் ஒருபோதும் சொல்லலை. அதேசமயம், ஆராயி போன்ற சாமானிய மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கான பின்னணிக் காரணத்தையும் இந்த உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியத்துல இருக்கோம். விழுப்புரத்துல இப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் பத்தி நியூஸ்ல சரிவர சொல்லாமல் இருக்கிறது மிகப்பெரிய தவறு. ஸ்ரீதேவியின் மரணத்தை ஒருவகையில இயற்கை மரணம்னு சொல்லலாம். அவர் குளியலறையில் மயங்கி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்குதுனு சொல்றாங்க. ஆனா, ஆராயி கொடூரமாகத் தாக்கப்பட்டதும், மகன் கொல்லப்பட்டதும், மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும் அப்படியில்லை. 

நம்ம நாட்டிலேயே மக்களைப் பாகுபாடோட பார்க்கும்போது, சிரியாவுல நடக்குற பிரச்னைகளுக்கு நாம வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? 1000 பேருக்கு நடந்தால், அது பெரிய விஷயம். அதுவே ஒரு தனி நபருக்கு நடந்தால், சாதாரண விஷயமா? உயிரிழப்பு எங்க நடந்தாலும், அது ஒன்றுதான்."

"சாதிக்கு எதிராகத் தொடர்ந்து நடக்கிற அநீதிகளைக் கவனிக்கிறீங்களா?" 

"அதனாலதானே இந்தக் கோபம். உயிரிழப்புக்கு எதுக்குங்க சாதி, மதம், இனம்னு எல்லாத்தையும் இழுக்கணும்? ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு சொல்றது முற்றிலும் தவறு. வலி, கொடுமை, அநீதி, துயரம் இந்த உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் பொதுவானவையே. எனக்கு இந்த மாதிரி சாதியம் பேசுறதுல உடன்பாடு இல்லை. ஒரு குடும்பம் மனிதத்தன்மை இல்லாமல் நடத்தப்பட்டதையும், அவர்களுக்கு ஏற்பட்ட  களங்கத்தையும்தான் நான் முக்கியமா பார்க்கிறேன். சிலபேர் இதை சாதிப் பிரச்னைனு சொல்றாங்க, சிலபேர் நிலத் தகராறுனு சொல்றாங்க. ஆராயியின் குடும்பத்திற்கு நடந்த கொடூரத்திற்கான காரணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெளிவுப்படுத்தியே ஆகணும். உரியவங்களுக்குத் தக்க தண்டனையும் கொடுத்தாகணும். 

ஆராயி மகன் மரணம் இயற்கையா இருந்தால், யாருமே இதைப் பத்தி பெருசா பேசியிருக்க மாட்டாங்க. ஆனா, அடித்துக் கொல்லப்பட்டு, கொடுமையான முறையில கொலை செய்யப்பட்டிருக்காங்க. இது பத்தி இந்த உலகத்துக்குச் சொல்லக்கூடிய கடமை மீடியாவுக்கு இருக்கு. அதை நாம தவறவிட்டுட்டோமானுதான் கேள்வி கேட்கிறேன்."

"ஸ்ரீதேவி மரணம்...?" 

"எனக்கு ஸ்ரீதேவி மேடத்தை ரொம்பப் பிடிக்கும். பல படங்களால் ரசிக்கும்படியாக நடித்து, எல்லார் மனசுலேயும் இடம்பிடித்து சாதனை படைத்தவர். மக்களால் ரசிக்கப்பட்டு, பெரிதும் விரும்பப்பட்டுக் கொண்டாடப்பட்டவர். அவர்களுடைய இறப்பைக் கண்டிப்பா நியூஸ்ல சொல்லியே ஆகணும். அவங்களுக்கான இரங்கலை நானும் இங்கு பதிவு செய்ய விரும்புறேன். 

'மூன்றாம் பிறை', 'மூன்று முடிச்சு', 'வறுமையின் நிறம் சிவப்பு' மாதிரியான படங்கள்ல, அவர் நடித்த கதாபாத்திரங்களை வேறு யாராலும் ஈடுசெய்யவே முடியாது. அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்த ரசிகன்னு சொல்லிக்கிறதுல நான் ரொம்பப் பெருமைப்படுறேன். அவங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது நம்ம மரபுகள்ல ஒண்ணு. அதனால, ஸ்ரீதேவி மேடம் மேல எனக்கு வருத்தமோ, மரியாதைக் குறைவோ ஏற்படலை. ஆனா, நியூஸ் முழுக்க ஸ்ரீதேவி மேடம் பத்தி மட்டும்தான் பேசப்பட்டிருக்கு. நாளைக்கு ஆராயி விஷயம் இந்த உலகத்துக்குத் தெரியாமலே போயிடுமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கு. ஏதோ, ஒருசில செய்திகளில் ஆராயி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரைக் கைது பண்ணியாச்சுனு சொல்றாங்க. இன்னும் உண்மை நிலவரம் என்னனு சரியா தெரியலை."

"இப்படிக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராகவும் தொடர்ந்து நடக்கிற வன்முறைகள் குறித்த உங்கள் கருத்து என்ன?"  

"இந்தியா பாதுகாப்பான நாடுனு நாம நெனச்சுட்டு இருக்கோம். ஆனா, இப்போ குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போது மனசு தாங்கலை. எப்படி நம்ம குழந்தைகளைப் பத்திரமா வளர்த்தெடுக்கப் போறோம்னு நெனச்சாலே பயமா இருக்கு. 

தப்பித்தவறி சிரியா புகைப்படங்கள் எதுவும் என் கண்ணுல பட்டுடக் கூடாதுனு தவிர்த்துட்டு இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி முகநூல்ல ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதுல மார்க் கம்மியா வாங்குனதுக்காக அப்பா தன்னோட பையனை பயங்கரமா அடித்துத் துன்புறுத்துறார். இன்னும் கொஞ்சநேரம் ஆகியிருந்தா, அந்தப் பையன் செத்துருப்பான். அதையெல்லாம் பார்க்கும்போது நம்ம வீட்டிலேயே நமக்குப் பாதுகாப்பு இல்லை. மனிதத்தன்மையோட நாம நடந்துக்கிறது இல்லை. அப்படி இருக்கும்போது வெளி உலகத்துல எப்படி பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்? எந்த மாதிரியான சமுதாயத்தை நம்ம குழந்தைகளுக்குக் கொடுக்கப் போறோம்னு நெனச்சா வருத்தமா இருக்கு" என்று ஆதங்கத்துடன் முடித்தார் பிரசன்னா.