Published:Updated:

"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை!" - ராஷி கண்ணா

அலாவுதின் ஹுசைன்

`இமைக்கா நொடிகள்' படம் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் பேசியிருக்கிறார், நடிகை ராஷி கண்ணா

"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை!" - ராஷி கண்ணா
"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை!" - ராஷி கண்ணா

தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய `மெட்ராஸ் கஃபே' படத்தில் ஹிரோயினாக அறிமுகமாகி பின் ஆந்திரா, கேரளா என மையம் கொண்ட ராஷி கண்ணா புயல் சென்னையை வந்தடைந்திருக்கிறது. அவரிடம் பேசினோம்.

``சினிமா என்ட்ரி?"

``பிறந்து வளர்ந்தது, டெல்லி. பி.ஏ ஆங்கிலம் படிச்சுட்டு, பாம்பேல மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ கிடைச்சதுதான், `மெட்ராஸ் கஃபே' வாய்ப்பு. பிறகு தெலுங்கு, மலையாளம்னு பிஸி ஆயிட்டேன். தமிழ்ல சித்தார்த் நடிக்கும் `சைத்தான் கி பச்சா', ஜெயம் ரவியுடன் `அடங்க மறு', அதர்வாவுடன் `இமைக்கா நொடிகள்', விஷால் நடிக்கும் புதிய படம்னு வரிசையா தமிழ்ப் படங்கள் இருக்கு. ஒருவழியா தமிழ்சினிமாவுக்கு வந்தது மகிழ்ச்சி!" 

``ரொம்ப லேட்டா தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கீங்களே?"

``நான் சீக்கிரமா வரணும்னு நினைச்சுதான் 2016-லேயே இங்கே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டைம் ஆயிடுச்சு. அதுவும் ஒருவகையில  நல்லதுதான். அந்த இடைவெளியில வேறு வேறு மொழிகள்ல நடிச்சேன். என்னை ஒரு நடிகையா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. இனிமே, இன்னும் நல்லா தெரியும்."

``தெலுங்குப் படங்கள்ல உங்களை எல்லா விதமான கேரக்டர்கள்லேயும் பார்த்தாச்சு. இப்போ என்ன கேரக்டர் பண்றீங்க?" 

`` `இமைக்கா நொடிகள்' படத்துல என் கேரக்டர் பெயர், கிருத்திகா. காலேஜ் படிக்கிற டிரெடிஷனல் பெண்ணா நடிச்சிருக்கேன். நான் நிஜ வாழ்க்கையில எப்படி இருக்கேனோ, அப்படியே இந்தக் கதாபாத்திரம் அமைஞ்சிருக்கு. தைரியமான, மெச்சூரிட்டி பொண்னா நடிச்சிருக்கேன். `சைத்தான் கி பச்சா' படத்துல கமர்ஷியல் ஹீரோயின். ஜாலியா சுத்துற பப்லி பொண்ணு. `அடங்க மறு' படத்துல ஜெயம் ரவி மாதிரியே என் கேரக்டரையும் டிசைன் பண்ணியிருக்காங்க. எல்லோருக்கும் உதவுற பொண்ணா இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்."    

``நயன்தாரா, விஜய் சேதுபதினு பெரிய நட்சத்திரங்களோட முதல் தமிழ்ப் படம் அமைஞ்சிருக்கு. எப்படி இருந்தது இந்த அனுபவம்?" 

`` `இமைக்கா நொடிகள்' படத்துல நான்தான் கடைசியா கமிட் ஆனேன். முதல் படத்துலேயே நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப்... இப்படி அட்டகாசமான கலைஞர்கள் இருக்கும்போது, அந்த வாய்ப்பை மறுக்க முடியுமா... உடனே ஓகே சொல்லிட்டேன். தவிர, நான் நினைச்சமாதிரி என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்தப் படம் என் மனசுக்கு நெருக்கமான படம். இயக்குநர் அஜய் ஞானமுத்துவோட திரைக்கதையில எல்லோருக்கும் முக்கியமான பங்கு இருக்கு. அதை நாங்கெல்லாம் சரியா செஞ்சிருக்கோம்னு நம்புறேன். 

நயன்தாரா மேடம் லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு வளர்ந்திருக்காங்க. சந்தோஷமான விஷயம் இது. அவங்க படத்துல நாம ஒரு சின்ன கேரக்டர் பண்ணாலே, நமக்கு அது பெரிய ரீச் தரும். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்னு அனுபவ நடிகர்கள் கூட்டணியோட என் முதல் தமிழ்ப் படம் அமைஞ்சிருக்கிறது, சந்தோஷமா இருக்கு." 

``இத்தனை தமிழ்ப் படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கீங்க... தமிழ் கத்துக்கிட்டாச்சா?" 

``எனக்குத் தமிழ் ரொம்பப் புதுசுதான். இப்போதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நிறைய தமிழ் பாடல்கள் கேட்குறேன். பேச முயற்சி பண்றேன். இதுவரை, அடிக்கடி பயன்படுத்துற `எப்படி இருக்கீங்க', `சாப்டீங்களா'னு சில வார்த்தைகளைக் கத்துக்கிட்டேன். என் உச்சரிப்பு நல்லா இருக்குனு இயக்குநர்கள் சொன்னாங்க. கூடிய சீக்கிரம் எனக்கு நானே டப்பிங் பேசுவேன். ஏன்னா, மொழியைப் புரிஞ்சு கத்துக்கிட்டாதான், அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கமுடியும்னு நம்புறேன்."

``தெலுங்கு சினிமாவுல குறுகிய காலத்துலேயே டாப் ஹீரோயின்ஸ் லிஸ்ட்ல வந்துட்டீங்க. தமிழ் சினிமாவுலேயும் அப்படி ஓர்  இடத்தைப் பிடிக்கணும்னு ஐடியா இருக்கா?" 

``எனக்கு முதல் இடம், இரண்டாம் இடம்... இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. தமிழ் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன், நாலு படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். கடினமா உழைச்சாலே போதும், நல்ல நடிகைனு பெயர் வாங்கலாம். என் கதாபாத்திரங்கள் படத்துல ஏதாச்சும் பண்ணணும், வந்து சும்மா நின்னுட்டுப் போறது எனக்குப் பிடிக்காது. நான் நடிச்ச கேரக்டர் மக்கள் மனசுல நின்னாப் போதும். 

`இமைக்கா நொடிகள்' படத்துல எனக்கும் நயன்தாராவுக்குமான காட்சி எதுவும் இல்லை. இதுவரை அவங்களை நான் சந்திச்சதும் இல்லை. ஆனா, அவங்களைப் பத்தி மத்தவங்க சொல்லக் கேட்டிருக்கேன். நயன்தாரா வளர்ச்சியைப் பார்த்து, ஒரு பெண்ணா ரொம்பவும் பெருமைப்படுறேன். ஆணுக்குச் சரிசமமான இடம் பெண்ணுக்கும் வேணும்னு நினைக்கிறவ நான். நயன்தாரா செஞ்ச விஷயம் சாதாரணமானது இல்லை. இந்த இடத்தைப் பிடிக்க அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க. ஒரு நடிகரை அல்லது நடிகையை மக்கள் எல்லோருக்கும் பிடிச்சுப் போறது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. தவிர, அதுதான் கலைஞர்களுக்கு அழகு"

``தமிழ்ல பெண்களை மையப்படுத்திய சினிமாக்கள் நிறைய வருது. உங்களுக்கு அந்தமாதிரி படங்கள்ல நடிக்க ஆசை இருக்கா?" 

``எனக்கு எல்லாவிதமான படங்கள்லேயும் நடிக்கணும். என் முதல் தெலுங்குப் படத்துல எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிற ரோல் கிடைச்சது. அதுக்குப் பிறகு கிடைச்ச எல்லாம் கமர்ஷியல் கேரக்டர்கள்தாம். கடைசியா வந்த `தொலி பிரேமா' படம் எனக்கு நடிக்கவும் தெரியும்னு காட்டியிருக்கு. நடிப்புக்கு ஸ்கோப் இருக்கிற நல்ல படங்கள் எல்லாத்திலும் நடிக்கணும்னு ஆசைப்படுறேன். `நடிகையர் திலகம்' படத்துல கீர்த்தி சுரேஷ் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. எனக்கு அந்தமாதிரி கேரக்டர்களும் பண்ணணும்னு ஆசை."     

``பொதுவாக ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, பாலிவுட்னு போவாங்க. உங்க லிஸ்ட் அப்படியே தலைகீழா இருக்கே?" 

``பாலிவுட்டுக்குப் போறது ஒண்ணும் முக்தி நிலை இல்லையே!. எனக்கு எதிர்பாராத விதமாதான் சினிமா வாய்ப்பு வந்தது. முதல் இந்திப் படத்தைத் தொடர்ந்து எனக்கு நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்தன. தெலுங்குல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது. எந்த மொழியா இருந்தாலும், நடிக்கிற படங்கள் நல்ல சினிமாவா இருந்தாப் போதும்!" 

``கிசுகிசுக்களை எப்படி எடுத்துக்குறீங்க? உங்களைப் பத்தியும் ஒரு கிசுகிசு வந்ததே?" 

``கிசுகிசுக்கள் எப்படி உருவாகுதுனு எனக்குத் தெரியலை. நான் நடிக்கிறேன், ஷூட்டிங் முடிஞ்சதும் குடும்பத்தோட நேரத்தைச் செலவழிக்கிறேன். என்னை ஒரு கிரிக்கெட் வீரரோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருந்தாங்க. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. இதை நான் அப்பவே தெளிவுபடுத்திட்டேன். இப்படி வர்ற கிசுகிசுகளுக்கெல்லாம் சிரிச்சுட்டுப் போறதைத் தவிர, வேற வழியில்லை."

``ட்விட்டர் மூலமா நிறைய கருத்துகளை ஷேர் பண்ணியிருக்கிறீங்களே...?" 

``இன்னைக்கு சமூக வலைதளங்கள்தாம் பெரிய மக்கள் தொடர்பு ஊடகமா இருக்கு. என்னை ஒரு நடிகையா ஃபாலோ பண்றவங்க, நான் சொல்ற விஷயங்களையும் ஃபாலோ பண்ண வாய்ப்பு இருக்கு. கடந்த வருடம்தான் நான் ட்விட்டர்ல சேர்ந்தேன். என் மூலமா ஏதோ ஒரு விழிப்பு உணர்வு கிடைச்சா சரினு என் கருத்துகளை ஷேர் பண்ணிக்கிறேன். அது யாருடைய வாழ்க்கையிலாவது சின்ன மாற்றத்தைக் கொடுத்தா சந்தோஷம்தான்." 

``சினிமா நடிகைகள் மீதான பொதுப்பார்வையை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க?" 

``ஏன் இப்படி ஒரு கண்ணோட்டத்தோட இருக்காங்கனு தெரியலை. என் வாழ்க்கையையே எடுத்துக்கோங்க... நான் நடிகை ஆவேன்னு எதிர்பார்க்கலை. சின்ன வயசுல இருந்தே ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். திடீர்னு கிடைச்சதுதான், சினிமா வாய்ப்பு. நான் நடிச்சே ஆகணும்ங்கிற ஆர்வமும், கட்டாயமும் எனக்கு இருந்ததில்லை. தவிர, சினிமாவுல மட்டுமல்ல... எல்லாத் துறைகளிலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாதான் பார்க்குறாங்க. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லைதான். சினிமாவுல மட்டும்தான் இதெல்லாம் இருக்குனு சொல்லி, மத்தவங்கெல்லாம் தப்பிக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை, நடிப்பு எனக்கான வேலை. அந்த வேலை கிடைக்கும்போது செய்வேன்.!" என்கிறார், ராஷி கண்ணா.