Published:Updated:

"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்!" கலங்கும் ஷர்மிலி

கு.ஆனந்தராஜ்

``சில ஆண்டுகளுக்கு முன்னாடி, சில நிகழ்வுகளால் நிறையவே வேதனைப்பட்டேன். அதிலிருந்து பாடம் கற்று, புத்துணர்வு பெற்றிருக்கேன்."

"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்!" கலங்கும் ஷர்மிலி
"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்!" கலங்கும் ஷர்மிலி

``சில வருட இடைவெளிக்குப் பிறகு, ஆக்டிவா நடிக்க முடிவெடுத்திருக்கேன். சில ஆண்டுகளுக்கு முன்னாடி, சில நிகழ்வுகளால் நிறையவே வேதனைப்பட்டேன். அதிலிருந்து பாடம் கற்று, புத்துணர்வு பெற்றிருக்கேன்" எனப் புன்னகையும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார், ஷர்மிலி. காமெடி நடிகையாகவும் டான்ஸராகவும் புகழ்பெற்றவர்.

``என் அப்பா, சினிமாவில் குரூப் டான்ஸர். அக்கா ஜரீனாவும் குரூப் டான்ஸரா இருந்து, நடிகையாகி, இப்போ டான்ஸ் மாஸ்டரா இருக்காங்க. எனக்கும் டான்ஸ் மற்றும் சினிமா ஃபீல்டு ரொம்பப் பிடிக்கும். 13 வயசுல சினிமா குரூப் டான்ஸரா அடியெடுத்து வெச்சேன். மூணு வருஷத்துல எக்கச்சக்க படங்களில் டான்ஸ் ஆடினேன். `தளபதி' படத்தில், `ராக்கம்மா கையைத் தட்டு' பாட்டில், ரஜினி சார் பக்கத்துல நின்னு டான்ஸ் ஆடியிருப்பேன். அப்புறம், அப்போதைய முன்னணி டான்ஸ் மாஸ்டர்களுடன் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினேன். ஒருகட்டத்துல நடிப்பு மட்டுமே பிரதானமாகிடுச்சு. `சேரன் பாண்டியன்', `எங்க வீட்டு வேலன்', `பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' எனப் பல படங்களில் காமெடி ரோலில் நடிச்சேன்.

கவுண்டமணி சாருக்கு ஜோடியா 27 படங்களில் நடிச்சிருக்கேன். செந்தில், வடிவேலு, விவேக் எனப் பல முன்னணி காமெடி ஹீரோக்களுடனும் நடிச்சிருக்கேன். `ஜோர்' படத்தில், வடிவேலு சாருடன் நடிச்சது நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு. `காவலன்' படத்திலும் சின்ன கேரக்டர் பண்ணினேன். நடிப்பைத் தாண்டி, சினிமா பிரபலங்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த நட்பும் எனக்குக் கிடையாது. அதனால், இப்போ சினிமா வாய்ப்புக்காக எனக்கு ஹெல்ப் பண்ணவும் யாருமில்லை. என் பெரிய மைனஸ், உடல் எடைதான். சரியான உணவு, உடற்பயிற்சியைக் கடைப்பிடிச்சும் உடல் எடை குறையலை. தைராய்டு பிரச்னைதான் காரணம். அதனால, ரொம்ப வருஷமா சிரமப்படுறேன். எப்பவுமே டான்ஸர் அடையாளத்தை நான் இழக்க விரும்பலை. இப்பவும் வீட்டுலேயே டான்ஸ் ஆடி சந்தோஷப்படுறேன்" என்கிற ஷர்மிலி, தற்போது அதிக ஆர்வத்துடன் நடிக்கத் தயாராகியிருக்கிறார்.

``தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன டான்ஸர், காமெடி நடிகைனு என் மேலே முத்திரை குத்திட்டாங்க. ஆனால், மலையாளத்தில் கிளாமர் ரோல்ல அதிகம் நடிச்சாலும், அங்க பல நல்ல கேரக்டர் ரோல்களிலும் நடிச்சிருக்கேன். 16 வயசுல நடிகையாகிட்டேன். அது தெரியாமல், `80-ம் ஆண்டுகளிலிருந்து நடிக்கும் வயசானவங்க'னு சொல்றாங்க. எனக்கு 35 பிளஸ் வயசுதான். நான் ஒண்ணும் ஹீரோயின் வாய்ப்பு கேட்கலை. முன்ன மாதிரி டூ பீஸ் டிரஸ்ல டான்ஸ் ஆட முடியாதுதான். ஆனால், என் தோற்றத்துக்கு ஏற்ற மாதிரி அம்மா அல்லது வில்லி ரோல் கிடைச்சா சந்தோஷமா நடிப்பேன். சினிமா, சின்னத்திரை எதுவா இருந்தாலும் மகிழ்ச்சிதான். என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனசுல தொடர்ந்து இடம்பிடிக்க முடியும்; வாழ்க்கைக்குத் தேவைக்கான வருமானமும் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். கடைசியா நடிச்சு சில வருஷங்கள் ஆச்சு. அதனால் ரொம்ப வருத்தமா இருக்கு. இப்போ, பா.விஜய் சாரின் ஒரு படத்தில் நடிச்சிருக்கேன்'' என்றவர், பர்சனல் வாழ்க்கை குறித்தும் சில வார்த்தைகள் பேசினார்.

``ரொம்பவே எதிர்பார்ப்புடன் என் கல்யாணம் நடந்துச்சு. வெளிநாட்டில் சில வருஷம் வசிச்சேன். அப்போ, நல்ல கேரக்டர்கள் பல வந்தும், நடிக்க முடியலை. அப்புறம், என் கல்யாண வாழ்க்கை நெகட்டிவ் ஆகிடுச்சு. நான் முட்டாள்தனம் பண்ணிட்டதா நினைக்கிறேன். அந்தக் கவலையாலும், உடல் எடை பிரச்னையாலும் துவண்டுபோனப்போ, என் குடும்பத்தினர்தாம் பக்கபலமா இருந்தாங்க. இப்போ, ஈவன்ட் பிளானர் வொர்க் பண்ணிட்டிருக்கேன். அதில்தான் ஓரளவுக்கு வருமானம் கிடைக்குது." என்கிறார் ஷர்மிலி.