Published:Updated:

``மாப்ள... அந்தப் படம் நான் டைரக்ட் பண்ணது!’’ மணிவண்ணன் நினைவுகள்

கு.ஆனந்தராஜ்

``குடிக்கிற மாதிரியான கேரக்டரில் அதிகம் நடிச்சதால், நிஜத்துலயும் அப்படியானவர்னு பலரும் நினைக்கிறாங்க. அது உண்மையில்லை. அவர் சோஷியல் டிரிங்கர் மட்டும்தான்."

``மாப்ள... அந்தப் படம் நான் டைரக்ட் பண்ணது!’’ மணிவண்ணன் நினைவுகள்
``மாப்ள... அந்தப் படம் நான் டைரக்ட் பண்ணது!’’ மணிவண்ணன் நினைவுகள்

ம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், தமிழ் சினிமாவின் சுவாரஸ்ய படைப்பாளி... மணிவண்ணன். காமெடி, குணச்சித்திரம், வில்லன் எனப் பன்முக கதாபாத்திரங்களிலும் அசத்திய மணிவண்ணன் பிறந்த தினம் இன்று (31.07.2018). அமெரிக்காவில் வசிக்கும் மகள் ஜோதி, தந்தையின் நினைவுகளைப் பகிர்கிறார்.

``அப்பா இயக்கின ரெண்டாவது படம், `ஜோதி'. அந்தப் படம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், எனக்கும் ஜோதின்னு பெயர் வெச்சுட்டாரு. இயக்குநரா, நடிகரா 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியா இருந்தார். அவர் வீட்டுல இருக்கும் நேரம் குறைவு. `எங்களோடு அதிக நேரத்தைச் செலவழிங்கப்பா'னு நானும் தம்பி ரகுவண்ணனும் அடிக்கடி கேட்போம். `நான் நிறைய உழைச்சாதானே நீங்க கேட்கிறதை வாங்கித் தர முடியும்'னு சொல்வார். வேலை முடிஞ்சு மிட் நைட்ல வீட்டுக்கு டயர்டா வருவார். அப்பவும், `சாப்பிட்டீங்களா கண்ணுங்களா, இன்னைக்கு உங்களோடு சேர்ந்து அப்பாவால் சாப்பிட முடியலை'னு கொஞ்சுவார்.

என் ஸ்கூல் லைஃப்ல, அப்பா என் ஸ்கூலுக்கு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஃபேர்வல் பார்ட்டிக்கு மட்டும்தான் வந்தார். ஆனால், எங்களை சம்மர் வெக்கேஷன் கூட்டிட்டுப்போவார். அப்பாதான் கார் ஓட்டிட்டு வருவார். ஆனால், இடம் வந்ததும் தன்னைப் பார்க்க கூட்டம் கூடிடும்னு எங்களை இறக்கிவிட்டுட்டு, அவர் காரிலேயே வெயிட் பண்ணுவார். அப்போ, அவுட்டோர் ஷூட்டிங் அதிகம் நடக்கும் பொள்ளாச்சிக்கு எங்களை அடிக்கடி கூட்டிட்டுப்போவார்'' என நினைவலைகளைத் தொடர்கிறார் ஜோதி.

``அப்பா எனச் சொன்னதும் புத்தகங்கள்தாம் முதல்ல நினைவுக்கு வரும். அவர் நேரத்தை வேஸ்ட் பண்ணவே மாட்டார். வீட்டுல பெரும்பாலும் புத்தகங்கள் படிச்சுட்டிருப்பார். நிறைய புத்தகங்களை வாங்கிக் குவிச்சார். அவுட்டோர் ஷூட்டிங் போகும்போது, டிரஸ்ஸைவிட புத்தகங்களைத்தாம் அதிகம் எடுத்துட்டுப் போவார். தன் உயிர் பிரியும் நாளிலும் புத்தகம் வாசிச்சுட்டிருந்தார். பெரியார், தமிழீழம், அடக்குமுறைக்கு எதிரான கருத்துகள், மனித உரிமைகள் சார்ந்த புத்தகங்களைத்தான் அதிகம் படிச்சார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா இருப்பார். சமூகச் செயல்பாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார். ஒரு தமிழரா அவரின் செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை ஷூட்டிங்ல கால்ல அடிபட்டு ரொம்ப நாள் அவதிப்பட்டார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு சர்ஜரி முடிஞ்சு, நடிக்கிறதைக் குறைச்சுகிட்டார். அப்போது எங்களோடு அதிகமா நேரத்தைச் செலவிட்டார்.

அப்பா ஒரு சினிமா பிரபலம் என்றோ, எங்களுக்குத் தேவையானதை நிறைவா செய்தவர் என்றோ புகழ மாட்டேன். அவர் மிகச்சிறந்த மனிதநேயர். வீட்டிலு சரி, வெளியிலும் சரி, பிரபலம் என்கிற அடையாளத்துடன் நடந்துக்கிட்டதே இல்லை. சக மனிதர்களை மதிக்க தெரிஞ்சவர். `யாரா இருந்தாலும் சுயமரியாதையோடு வாழணும்'னு சொல்வார். `தப்பு பண்ணக் கூடாது. எதற்கும் பயப்படக் கூடாது, ஒருத்தர் செய்த தவறை மன்னிச்சுடணும்; மனசுல வெச்சு பழிவாங்கக் கூடாது' எனப் பல விஷயங்களை அவர்கிட்ட கத்துகிட்டேன்" என்கிறார் பரவசத்துடன்.

``அவர் உடல்நலத்தில் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையா' எனக் கேட்டால், சில நொடி அமைதிக்குப் பிறகு தொடர்கிறார் ஜோதி.

``இயக்குநரா வொர்க் பண்ணி, நிறைய ஸ்ட்ரெஸ், உடல்நிலை பாதிக்கப்பட்டார். `உள்ளத்தை அள்ளித்தா' போன்ற சில படங்களில் நடிக்க ஆரம்பிச்சார். அது பெரிய வரவேற்பைப் பெறவே, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். தன் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் உழைச்சார். குடிக்கிற மாதிரியான கேரக்டரில் அதிகம் நடிச்சதால், நிஜத்துலயும் அப்படியானவர்னு பலரும் நினைக்கிறாங்க. அது உண்மையில்லை. ஆனால், ஸ்மோக் பண்ணுவார். அதைத் தவிர்க்கச் சொன்னோம். ஒருகட்டத்துல அவர் உடல்நிலை அதிகம் பாதிச்சது. அப்போ, அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போச்சு. அதை நினைச்சு வருத்தப்பட்டே அப்பாவும் தன் உடல்நலத்தைச் சரியா பார்த்துக்கலை. 2013-ல் எதிர்பாராதவிதமா அப்பா இறந்துட்டார். அடுத்த ரெண்டு மாசத்திலேயே அம்மாவும் இறந்துட்டாங்க. நானும் தம்பியும் அதிலிருந்து மீளவே ரொம்ப நாளாச்சு. நான் அமெரிக்காவுக்கு நிரந்தரமா ஷிஃப்ட் ஆனேன்; தம்பி கோயம்புத்தூருக்கு ஷிஃப்ட் ஆகிட்டான்'' என்கிறார். 

``அவர் எங்களுக்குப் பல நல்லது கெட்டதுகளை சொன்னபோதும், ஒருபோதும் வலுக்கட்டாயமா திணிச்சதில்லை. `படிப்பு மட்டுமே வாழ்க்கையில்லை. எந்த விஷயம் பண்ணினாலும் நேசிச்சுப் பண்ணுங்க. அப்போதான் அந்தத் துறையில ரொம்ப நாள் டிராவல் பண்ணலாம்'னு சொல்வார். என் ஆசைப்படி, எம்.பி.ஏ முடிச்சேன். அப்பா, கடவுள் மறுப்பாளர். அவருக்கு அப்படியே எதிரான அம்மாவின் ஆசைக்காக, வீட்டுல பெரிய பூஜை அறை கட்டிக்கொடுத்தார். கலப்புத் திருமணத்துக்கு ஆதரவானவர். என் காதல் கல்யாணத்தைச் சிறப்பா நடத்திவெச்சார். கோயம்புத்தூர் குசும்பு அப்பாவுக்கு அதிகம் உண்டு. இயல்பாவே ஹியூமர் சென்ஸ் உள்ளவர். வீட்டுல நாங்க ஒண்ணா இருக்கும்போது, டிவியில் தமிழ்ப் படங்களை அதிகம் பார்ப்போம். அப்போ, அந்தக் காட்சிகள் பற்றியும் அதில் நடிச்ச நடிகர்கள் பற்றியும் நிறையச் சொல்வார். 

ஒருமுறை, எம் அப்பா டைரக்ட் பண்ணின படம்னு தெரியாமல், ஒரு படத்தைப் பற்றி என் கணவர் கலாய்ச்சுட்டார். `இது நான் டைரக்ட் பண்ணின படம் மாப்பிள்ளை'னு அப்பா சொன்னதும், `ஒரு லாஜிக் மிஸ்ஸாகுதே மாமா'னு என் கணவர் சமாளிக்க, `அப்போ எனக்கு அவ்ளோ அறிவு இல்லாம போச்சு'னு சொன்னார். அப்பா இயக்கி நடிச்ச `அமைதிப்படை' என் ஆல்டைம் ஃபேவரிட். அப்பாவுக்கும் சத்யராஜ் மாமாவுக்குமான நட்பு பலருக்கும் தெரியும். அவர் பையன் சிபியும் நானும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். அப்பா மறைவுக்குப் பிறகும், அவர் குடும்பம் எங்க மேலே அக்கறையுடன் இருக்காங்க. இந்தியா வரும்போதெல்லாம் அவர் வீட்டுக்குத் தவறாமல் போவேன். என் கல்யாண வாழ்க்கை நல்லா போகுது. இருவரும் அமெரிக்காவில் ஐடி வேலை செய்யறோம். அப்பா கற்றுக்கொடுத்த பல்வேறு விஷயங்கள் வெளிச்சமா இருந்து என் மற்றும் தம்பி குடும்பத்தை வழிநடத்திட்டு இருக்கு'' என நெகிழ்கிறார் ஜோதி.