Published:Updated:

"த்ரிஷா ரோலுக்கு சின்மயிதான் சரியான தேர்வுனு தோணுச்சு'' - `96' இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா

குணவதி

"படத்துடைய கதையை சொல்றப்போவே சின்மயி அழுதுட்டாங்க. சின்மயிதான் இந்த ஆல்பத்துடைய ஸ்வீட் ஹார்ட். அவங்களைத் தவிர வேற யார் பண்ணியிருந்தாலும் இந்த வரவேற்பு கிடைச்சிருக்குமான்னு தெரியலை."

"த்ரிஷா ரோலுக்கு சின்மயிதான் சரியான தேர்வுனு தோணுச்சு'' - `96' இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா
"த்ரிஷா ரோலுக்கு சின்மயிதான் சரியான தேர்வுனு தோணுச்சு'' - `96' இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா

வீட்டுக்குள் நுழைந்ததும், ஸ்மோக் ஃபவுன்டெயினுக்கு நடுவில் அமைதியாக அமர்ந்திருக்கிறார், புத்தர். அது, சுற்றிலும் புத்தர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகு வீடு. எவ்வித ஆரவாரமுமின்றி தன் பிரத்யேகப் புன்னகையோடு இன்னொரு புத்தரைப் போல் நம்மை வரவேற்றார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. முதல்முறையாக விஜய்சேதுபதி - த்ரிஷா இணையும் `96' படத்தின் இசையமைப்பாளர். `தாய்க்குடம் ப்ரிட்ஜ்' இசைக்குழுவின் வயலின் அரக்கராக அறியப்பட்ட கோவிந்த் மேனன், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவாகத் தன்னை அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளார்.

"நான் சார்ந்த சமூகத்தின் பெயர், அதாவது இந்தத் துணைப்பெயர் `மேனனை' விட்டுடணும்னு ரொம்ப நாள் ஆசை. வசந்தகுமாரி என் அம்மாவுடைய பெயர். அதுல இருக்கிற `வசந்தா’வை மட்டும் எடுத்துக்கிட்டேன்!” என்று சொல்லி கண்களைச் சிமிட்டி புன்னகைத்தார், கோவிந்த்.

பலரின் ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும், ஏன் பேட்டியைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுடைய ப்ளே லிஸ்டிலே இவர் தஞ்சம் புகுந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பலரின் இதயத்தை இலகுவாக்கும் `96’ படத்தின் இசையமைப்பாளர் 'கோவிந்த் வசந்தா' எனப் பதிவாகியிருப்பதால், இரட்டை சந்தோஷம் என்கிறார் இவர். `` `தாய்க்குடம் ப்ரிட்ஜ்' கோவிந்த் மேனன்தான், இந்த `96' கோவிந்த் வசந்தான்னு புரிஞ்சிக்கிறதுலேயே பலருக்கும் குழப்பம் இருந்தது. படத்துடைய ஆல்பமும், டீசரும் வெளியானப்போ, சின்மயி தன்னோட ட்விட்டர் பக்கத்துல அதை ஷேர் பண்ணாங்க. அப்போதான் எல்லோருக்கும், இது நான்தான்னு புரிஞ்சது.” என்று சொன்ன கோவிந்த், தனது ஆல்பத்தில் அமைந்தவை ‘வைரக் குரல்கள்’ என்று நெகிழ்கிறார்.

``வைரக் குரல்கள், வைரல் குரல்களான கதையைச் சொல்லுங்க?"

`` `96' படத்துல த்ரிஷாவுடைய ரோல், இசையுடன் தொடர்புரையது. அந்தக் கேரக்டருக்கும், இசைக்கும் வேவ் லெங்த் அதிகம். அந்தக் கதாபாத்திரத்துக்குப் பேசுறதும், பாடுறதும் ஒரே ஆள்தான்னு முடிவு பண்ணாங்க. இதுக்கு சின்மயிதான் சரியான தேர்வுனு எல்லோருக்குமே தோணுச்சு. படத்தின் கதையைச் சொல்றப்போவே அவங்க அழுதுட்டாங்க. சின்மயிதான் இந்த ஆல்பத்துடைய ஸ்வீட் ஹார்ட். அவங்களைத் தவிர வேற யார் பண்ணியிருந்தாலும் இந்த வரவேற்பு கிடைச்சிருக்குமானு தெரியலை. டீனேஜ் த்ரிஷா கேரக்டருக்காக டி.பி.கெளரியும், பத்ரா ரஜின் மாதிரியான வளரும் பாடகர்களும் பாடியிருக்காங்க. ஃபார்முலாவுக்குள்ள போகக் கூடாதுங்கிற கவனமும், குரல்களும்தான் `96’ஆல்பத்துடைய அடையாளம்."

`` `தாய்க்குடம் ப்ரிட்ஜ்’தான் உங்களுடைய அடையாளம். திரையிசையும் உங்க `பக்கெட் லிஸ்ட்’ல இருந்ததா?"

``கண்டிப்பா!. சினிமாவுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணணும்ங்கிறது எனக்கிருந்த கனவுகள்ல ஒன்னு. `தாய்க்குடம் ப்ரிட்ஜ்' நிகழ்ச்சிகள் பண்ணும்போதே, நான் சென்னையில இசையமைப்பாளர்களுக்கு அசோசியேட்டா இருந்திருக்கேன். ஆனாலும், எனக்கு இன்டிபென்டென்ட் மியூசிக்மேல இருக்கிற காதல்தான் அதிகம். இப்போவும்கூட அதுக்குதான் முன்னுரிமை." 

`` `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ டீமோடதான் தொடர்ந்து வொர்க் பண்றீங்க. இந்தக் கூட்டணி எப்படி உருவாச்சு?"

`` `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இசையமைப்பாளரோட உதவியாளரா வொர்க் பண்ணேன். படத்தோட இயக்குநர் பாலாஜி தரணிதரன் அண்ணா எனக்கு ரொம்ப குளோஸ். அவர் இயக்கிய, `ஒரு பக்கக் கதை’தான் என் முதல் படம். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. எங்களுக்குள்ள இருக்கிற இந்தக் கெமிஸ்ட்ரிதான் தொடர்ந்து இதே குழுவோட வேலை பார்க்கிற சூழலைக் கொடுக்குது. தவிர, இவங்ககூட வொர்க் பண்றது ரொம்ப ஈஸி. ஒரு இசையமைப்பாளரா, பிரேம்குமார் எனக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார். இந்த சுதந்திரம்தான் இந்த இணக்கத்துக்குக் காரணம்னு நினைக்கிறேன்.''

``இன்டிபென்டென்ட் இசைக்கும், திரையிசைக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன? பிளஸ் மைனஸ் என்னனு நினைக்கிறீங்க?"

``இன்டிபென்டன்ட் மியூசிக்கைப் பொறுத்தவரை பெயர்லேயே அதுக்கான எல்லா விளக்கமும் இருக்கு. இதுல எல்லா பரிசோதனைகளும் நடக்கும். இதுல இசைக்கலைஞன்தான் மாஸ்டர். அவனே வேலையாளும் கூட. யாரையும் அனுசரிச்சுப் போகணும்ங்கிற அவசியம், இன்டிபென்டென்ட் இசையில இல்லை. குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ள, இந்தப் பாட்டை ரெடி பண்ணணும்ங்கிற கட்டுப்பாடு இருக்காது. ஆனா, இந்தப் படத்துல எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைச்சது. ஒரு ஆல்பத்துல பண்ற சுதந்திரம், இந்தப் படத்துல இருந்தது. அதுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சிருக்கு. இன்னொரு விஷயமும் நான் கண்டிப்பா சொல்லணும். `இது ஒரு சினிமா பாட்டு'ங்கிறதுனாலதான் மக்கள்கிட்ட இவ்வளவு ரெஸ்பான்ஸும், ரீச்சும் கிடைச்சிருக்கு. தனி ஆல்பமா இதை வெளியிட்டிருந்தா, இந்தளவுவுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமானு தெரியலை. ஆனா, கன்ட்ரோல் இல்லாத சுதந்திர இசைனா, நிச்சயம் இன்டிபென்டென்ட் மியூசிக்தான்னு சொல்வேன். சுயமான, தடங்கலில்லாத இசையையும், சினிமா இசையையும் இணைக்கிற சின்ன முயற்சியை இந்தப் படத்துல பண்ணியிருக்கேன்."

`` `96' ஆல்பத்துல, வரிகளோட சேர்ந்து உங்க இசையும் நிறைய உணர்வுகளைப் பேசுது. இந்த மேஜிக் எப்படி சாத்தியமாச்சு?''

`` `அந்தாதி' பாட்டைப் பொறுத்தவரை, இன்டிபென்டென்ட் மியூசிக்ல பயன்படுத்துற ட்ரீட்மென்ட்டைத்தான் பயன்படுத்தினேன். மனிதர்களைவிட பெரிய விஷயங்களைப் பத்தி மியூசிக் பண்ணுங்கனு பிரேம் சொல்லியிருந்தார். என் மனசு முழுக்க, அவர் சொன்னது மட்டும்தான் ஓடிக்கிட்டே இருந்தது. மனிதர்களால், மனிதர்களைவிட உயர்ந்து நிற்கிற காதல், உணர்வு, இயற்கை... இதெல்லாம்தான் ஆல்பத்துடைய தனித்துவம். வேற எதுவுமில்லை. கோட்பாடு, கட்டுப்பாடு... ரெண்டுமே இல்லாம பண்ண ஒரு விஷயம்தான், இந்தப் பாடல்கள். காதல்ங்கிற மேஜிக்தான் இந்தப் ஆல்பத்துடைய பலம். அவ்வளவுதான்!."

``இந்த இசையமைப்பாளருக்கு வேறெந்த இசையமைப்பாளரைப் பிடிக்கும்?"

``ஹா... ஹா... இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கேரளாவுல பாபுராக், வித்யாசாகர், ரவீந்திரன்னு நிறைய பேர் என்னை இன்ஸ்பையர் பண்ணியிருக்காங்க. இப்போ சந்தோஷ் நாராயணன், விஷால் பரத்வாஜ் ரெண்டுபேரும் ஒரு புயல் மாதிரி வந்திருக்காங்க. சந்தோஷ் நாராயணனைப் பற்றி சுருக்கமா சொல்லணும்னா, அவர் ரஹ்மான் - ராஜா சாருடைய கலவை. அவருடைய மியூசிக்ல ஒரு வேவும் மேஜிக்கும் இருக்கும். இவங்களை ஓவர்டேக் செஞ்சு என்னை இன்ஸ்பையர் பண்ணது, எங்க அப்பா. அவர் நல்லா பாடுவார். அவர் மட்டுமல்ல, எங்க வீட்டுல எல்லோரும் நல்லா பாடுவாங்க. ஃபேமிலியை கவனிச்சுக்கணும்ங்கிறதால, அப்பா இசைத் துறையில வரமுடியல. ஸ்கூல் தாண்டி, காலேஜுக்குப் போனாலும், முழுமையா என்னால முடிக்க முடியலை. இசைதான் விருப்பமா இருந்தது. இப்போ வாழ்க்கையாவே ஆகிடுச்சு. ஃபேமிலியும் எனக்கு இதுல முழு சுதந்திரம் கொடுத்தாங்க. அப்பா இப்போ ரொம்ப ஹேப்பி!"

``எந்த ஃபார்முலாவுக்குள்ளேயும் மாட்டிக்காம இன்டிபென்டென்ட் மியூசிக் பண்ண வர்றவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?" 

``அறிவுரை கொடுக்குற அளவுக்கு நான் இன்னும் சாதிக்கலைனு நினைக்கிறேன். ஒரு நண்பனா ஏதாவது சொல்லணும்னா, டைம் டேபிள் மாதிரியான விஷயங்கள்ல மாட்டிக்காம, டிரெண்ட்டுக்குப் பின்னாடி போகாம... இசையமைக்க மட்டுமே முயற்சி பண்ணணும். இசையுடைய ஆன்மாவைப் புரிஞ்சுக்கிட்டு, அதைக் காதலிச்சு, மெலடி, ராப்னு இன்னும் எத்தனையோ வகை இசைகளைப் பரிசோதனை பண்ணிப் பார்க்கணும். அது நிச்சயம் ஒரு மாடலா இருக்கும்." என்று நம்பிக்கையோடு பேட்டியை முடித்துக்கொண்டார், கோவிந்த் வசந்தா.