Published:Updated:

"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்!" - வெற்றிமாறன்

உ. சுதர்சன் காந்தி.
ம.கா.செந்தில்குமார்

"இந்தப் படம் ஆரம்பிக்கிறதே கெட்ட வார்த்தையில இருந்துதான். அது, இந்த வாழ்வியல் வெளிப்பாடு. அதை நேரடி அர்த்தத்துல எடுத்துக்காம, அதுல இருக்கிற எமோஷனை எடுத்துக்கணும்!"

"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்!" - வெற்றிமாறன்
"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்!" - வெற்றிமாறன்

னுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா எனப் பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் உருவாகியிருக்கும் 'வடசென்னை' படம்குறித்து, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் சமுத்திரக்கனியும் பகிர்ந்துகொண்டனர்.  

"படத்துல நிறைய இயக்குநர்கள் சங்கமிச்சிருக்கீங்களே?!"

"நிறைய இயக்குநர்களோட வொர்க் பண்ணும்போது என் வேலை குறையும். இதுல அமீர் நடிச்சிருக்கார். அவருடைய ஸ்பெஷலே அவர் குரல்தான். சமூகத்திலேயும் அவருக்கான அடையாளம் இருக்கு. என் அசிஸ்டென்ட் வர்ஷா, நான் சொல்லச் சொல்ல வேகமா எழுதிடுவா. சிலநேரம், சொல்ற வேகத்துக்கு எழுதலைனா டென்ஷன் அகிடுவேன். அப்போ, 'நீ கொடும்மா நான் எழுதுறேன்'னு சொல்லி ஷார்ட் ஹேண்ட்ல எழுதிடுவார், சமுத்திரக்கனி. அதுமட்டுமில்லாமல், இவரே எல்லோருக்கும் டயலாக்கைப் பிரிச்சுக்கொடுத்து ரிகர்சல் பார்க்க ஆரம்பிச்சிடுவார். அமீர், யார் சரியா நடிக்கலைனு பார்த்துச் சரிபண்ணிக்கிட்டு இருப்பார். சுப்ரமணிய சிவா மொத்த யூனிட்டையும் ஆக்டிவா வெச்சிருப்பார். தனுஷும் இப்போ ஒரு டைரக்டர்ல... இப்படி எல்லோரும் ஒவ்வொரு வேலையை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க" என்று வெற்றிமாறன் சொல்லி முடித்தவுடன், "எல்லோரும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் மாதிரிதான் வேலைபார்ப்போம். இது நம்ம படம். நல்லா வரணும்னு ஆத்மார்த்தமா வேலைசெய்வாங்க. நேரம் காலம் பார்க்காம ஓடிக்கிட்டிருப்போம். வெற்றி சார் ஒருநாளைக்கு ஒரு மணிநேரம் தூங்குனாலே பெரிய விஷயம்" என்றார் சமுத்திரக்கனி. 

"நீங்க நினைக்கிற விஷயத்தை அப்படியே கொடுக்க முடியுதா? இல்லை, சென்சார் போர்டுக்காக அட்ஜஸ்ட் பண்ணவேண்டி இருக்கா?"  

"எப்போவும் எனக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்ததில்லை. ஏன்னா, எடுக்கும்போதே சென்சார் போர்டு இப்படிக் கேட்டா, என்ன பண்றதுனு யோசிச்சு, அதையும் சேர்த்துதான் எடுப்பேன். ஆனா, இந்தப் படத்தை வேறமாதிரி அணுகியிருக்காங்க. எனக்கு மிரட்சியா இருந்தது. ரெண்டு ஆப்ஷன் கொடுத்தாங்க. 'ஏ' சான்றிதழ்னா சில இடங்களை மியூட் பண்ணணும். 'யு/ஏ' சான்றிதழ் வேணும்னா, ஆக்‌ஷன் காட்சிகள், நெருக்கமான காட்சிகளைக் குறைக்கணும், சில வார்த்தைகளை எடுக்கணும்னு சொன்னாங்க. எனக்கு அதெல்லாம் இருந்தாதான் படம் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால, 'ஏ' எடுத்துக்கிட்டோம். சாட்டிலைட் ரைட்ஸ் போகும்போது, ரீ-சென்சார் பண்ணிக் கொடுத்திடுவோம்" என்றவரைத் தொடர்ந்த சமுத்திரக்கனி, "எப்போவும் நிறைய மியூட் செய்யப்பட்டுதான் படம் வரும். ஆனா, இந்தப் படம் ஆரம்பிக்கிறதே கெட்ட வார்த்தையில இருந்துதான். அது, இந்த வாழ்வியல் வெளிப்பாடு. அதை நேரடி அர்த்தத்துல எடுத்துக்காம, அதுல இருக்கிற எமோஷனை எடுத்துக்கணும்" என்றார்.  

"ராஜன் கேரக்டருக்கு அமீர்தான் சரியா இருப்பார்னு எப்போ முடிவெடுத்தீங்க?" 

"விஜய் சேதுபதிதான் பண்றதா இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமா பண்ண முடியலை. பிறகு, ரவிதேஜாகிட்ட பேசினோம், அங்கேயும் கால்ஷீட் பிரச்னை. என் ஃப்ரெண்டு அமீரை கேட்டுப்பார்க்கலாம்னு சொன்னார். கதையெல்லாம் சொல்ல வேணாம், வாங்க ஷூட்டிங் போவோம்னு வந்துட்டார், அமீர். ஆனாலும், கதையைச் சொன்னேன். 'வெற்றி, இந்தக் கதையை விட்டுடாத... என்னெல்லாம் எடுக்கணுமோ எல்லாமே எடுத்திடு!'னு சொன்னார்" என்றார் வெற்றிமாறன். "அவர் ஸ்பாட்டுக்கு வர்றார்னு தெரிஞ்சதும், நான் பத்தடி தள்ளிப் போயிட்டேன். ஆனா, அவர் வேற மாதிரி இருந்தார். 'நீ தேசிய விருது வாங்கிட்டனு என்னை ராக்கிங் பண்றியா?'னு கேட்டார். வெற்றி சார் ஒரு சீன் சொன்னா, அதுக்கு அத்தனை கேள்வி கேட்பார். அறையிற மாதிரி ஒரு சீன் இருக்கும். சொன்ன நேரத்துல அடிக்காம விட்டுட்டார்னா, சரி மறந்துட்டார்னு நினைப்போம். ஆனா, எதிர்பார்க்காத நேரத்துல ஒரு அடி விழும் பாருங்க... ஐயோ! தவிர, எடுத்து முடிச்சபிறகு, 'ஒன்மோர் போய்க்கலாம்'னு சொல்வாரு... நமக்கு என்னடான்னு இருக்கும்" என்ற சமுத்திரக்கனியை இடைமறித்த வெற்றிமாறன், "அதேபோல அவரை ஒருத்தர் அடிக்கிற மாதிரி சீன் இருந்தால், அடினு சொல்லி கேட்டு வாங்கிப்பார். அப்போதான், அந்த ஃபீல் கிடைக்கும்னு சொல்வார். 'வடசென்னை' கதைக்கு முன்னாடி என்ன நடந்ததுனு ஒரு படம் பண்ணப்போறோம். அதுல வேற லெவல்ல இருப்பார் அமீர்" என்றார்.  
 

"ஆன்ட்ரியா கேரக்டர் மட்டும் நீங்க மாத்தவே இல்லையாமே?!"

"இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சப்போவே, ஆன்ட்ரியாதான் நடிக்கணும்னு முடிவாகிடுச்சு. மத்த கேரக்டருக்குத்தான் பலபேர் மாறுனாங்க. ஆனா, 'சந்திரா' கேரக்டருக்கு ஆன்ட்ரியாவைத் தவிர யாரையும் யோசிக்க முடியலை. அவங்களுக்கு சென்னைத் தமிழ் வரவே இல்லை. ஒரு கட்டத்துல, 'நீங்க என்னை மாத்தணும்னு நினைச்சா, மாத்திடுங்க'னு சொன்னாங்க. 'நீங்கதான் சரியா இருப்பீங்க'னு சொன்னதுமே, ரொம்ப மெனக்கெட்டு மெட்ராஸ் பாஷை கத்துக்கிட்டாங்க. மீன் வெட்டுற இடத்துக்கெல்லாம் போய் அதைக் கத்துக்கிட்டு வந்தாங்க."  

"வடசென்னைப் பகுதியில் இருக்கும் நபர்களை அணுகுற விதமே வித்தியாசமா இருக்கும். இந்தப் படம் அந்தப் பார்வையைப் பிரதிபலிக்குமா, இல்லை மாற்றுமா?"

"எடிட்டர் கிஷோருடனான பயணம்?" 

"சந்தோஷ் நாராயணன் குறித்து..."

- இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறனும், சமுத்திரக்கனியும் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளனர். அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்!