Published:Updated:

``அந்த 5 படம்... மனசுக்கு நிறைவா இருக்கு!" - சந்தோஷ் நாராயணன்

உ. சுதர்சன் காந்தி.

`பரியேறும் பெருமாள்', `வடசென்னை', அடுத்த புரோஜக்ட்ஸ் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி

``அந்த 5 படம்... மனசுக்கு நிறைவா இருக்கு!" - சந்தோஷ் நாராயணன்
``அந்த 5 படம்... மனசுக்கு நிறைவா இருக்கு!" - சந்தோஷ் நாராயணன்

எந்த ஜானர் படமாக இருந்தாலும், எந்த மாதிரி பாடல்களாக இருந்தாலும் அதில் ஒரு புதுமையை விதைத்து அப்ளாஸ் அள்ளுவது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஸ்டைல். அதற்கு, `கருப்பி' என்ற ஒரு பாடல் சாட்சி. `பரியேறும் பெருமாள்', `வடசென்னை' என இவரின் லேட்டஸ்ட் இரண்டு ஆல்பங்களும் பெரிய ஹிட். அது குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 

`பரியேறும் பெருமாள்' ஸ்கிரிப்ட் கேட்கும்போதும், `கருப்பி' கம்போஸ் பண்ணும்போதும் எப்படி இருந்தது ?

``ரஞ்சித் போன் பண்ணி, `படம் தயாரிக்கப்போறேன்’னு சொன்னார். அப்புறம்தான் மாரியைச் சந்திச்சேன். பைக்ல வந்தார்; தனியாகத்தான் வந்தார். அப்போவே எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருந்தது. படத்தைப் பத்தி 5 நிமிஷம்தான் பேசினார். சுத்தி நடக்கிற அரசியல் பத்திதான் ரொம்ப நேரம் பேசினார். `ஷூட்டிங் முடிச்சுட்டு வாங்க, பண்ணிக்கலாம்’னு சொன்னேன். படத்தைப் பார்த்தவுடனே மாரியைக் கட்டிப்பிடிச்சுட்டேன். அந்தளவுக்கு ஸ்கிரிப்ட் எனக்கு பெர்சனலா ரொம்பப் பிடிச்சிருந்தது.  மேட் காபிங்கிற ஆர்டிஸ்ட் பண்ண ஒரு பாட்டை ரெஃபரென்ஸா கொடுத்து `கருப்பி' பாடல் பண்ணச் சொன்னாங்க. அதை வெச்சுதான் கம்போஸ் பண்ணோம். 5 நிமிஷத்துல ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. நல்லா ராப் பாடுறவங்களை வெச்சு இந்தப் பாட்டை கம்போஸ் பண்ணலாம்னு நினைச்சோம். விவேக் எழுதின வரிகளை பார்த்தவுடனே எனக்கு என்ன தோணுதோ அதைப் பண்றேன்னு சொல்லிப் பாடினதுதான் இது. அதை மாரிகிட்ட போட்டுக்காட்டி இப்படிதான் சிங்கர்ஸ் பாடப்போறாங்கன்னு சொன்னேன். சரினு ஒரு சில பேரை வெச்சு ட்ரை பண்ணோம். சரியா வரலை. மாரியும் நான் பண்ணது நல்லாயிருந்ததுனு சொல்லிட்டார். சரினு, மறுபடியும் நானே அந்தப் பாட்டை பாடி ரெக்கார்டு பண்ணோம். ஆனா, முதல் முறை மாதிரி வரலை. சரினு, முதல் தடவை பாடினதையே படத்துல வெச்சுட்டோம்.  இன்ஸ்டன்ட் எமோஷன்தான் அதன் வெற்றிக்குக் காரணம்."

உங்க 25 வது படம் `வடசென்னை'. அந்த அனுபவம் எப்படி இருந்தது ?

``வெற்றிமாறன் சார்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். இதுக்கு முன்னாடி மூணு படம்தான் பண்ணியிருக்கார்னு என்னால நம்ப முடியலை. ரொம்ப டெடிகேட்டிவான நபர். கொஞ்ச நேரம் கிடைச்சாலே பாலு மகேந்திரா சார் பத்திப் பேச ஆரம்பிச்சுடுவோம். வேல்ராஜ் சார் கேமரா வெற்றி சாருக்கு ரொம்பப் பிடிக்கும். மியூசிக் தாண்டி நிறைய விஷயங்கள் அவர்கிட்ட பேசிக் கத்துக்குவேன். அவர் சொல்ற மாதிரியான பாடல்கள் எனக்குப் புதுசா இருந்தது. எனக்கு இதுவரை ரொம்ப திருப்தியான ஆல்பம் `வடசென்னை' தான். இது ஆகும் ஆகாதுனு மட்டும்தான் சொல்வார். வேற எதுவும் சொல்லமாட்டார். வெற்றிமாறன் சார்கிட்ட பேசுறது ஒரு மெஷின்கிட்ட பேசுற மாதிரிதான் இருக்கும். எனக்கு நல்ல நண்பர் கிடைச்சிருக்கார்னுதான் சொல்லணும்.  இது எனக்கு 25வது படம்னு புரொடக்‌ஷன்ல சொல்லிதான் எனக்குத் தெரிஞ்சது. பத்துப்படம் வரைக்கும்தான் கணக்கு வெச்சிருந்தேன். அப்புறம் மறந்துட்டேன். குறிப்பா, ரஜினி சார் படம் பண்ணவுடனே இனிப் படமே பண்ணலைனாலும் பரவாயில்லைங்கிற அளவுக்கு ஜாலியா இருந்தேன்."

கார்த்திக் சுப்பராஜ் படங்கள்ல நீங்க எப்போவும் இருப்பீங்க. ஆனா, `பேட்ட' படத்துல  நீங்க இல்லையே?! 

`` `கபாலி' படத்துக்கே நான் மியூசிக் பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை. சூப்பர் ஸ்டார்னு ரஞ்சித் முதல்ல சொல்லும்போது, எனக்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண்னு காதுல விழுந்தது. அப்புறம்தான் ரஜினி சாரானு கேட்டுட்டு, `சூப்பர், இப்படிப் பண்ணுங்க. மியூசிக் இவரை வெச்சு பண்ணுங்க, அவரை ட்ரை பண்ணுங்க’னு நிறைய ஆப்ஷன் கொடுத்தேன். `நீயே பண்ணு மாமு பாத்துக்கலாம்’னு சொன்னார். அன்னைக்கு முழுக்க செம ஜாலி. வீடே கொண்டாட்டமா இருந்தது. `பேட்ட' படத்துல மியூசிக் பண்றதுக்கு அனிருத் ரொம்பத் தகுதியான ஆள். `பேட்ட' மியூசிக் யங்ஸ்டர்களை ஈர்க்கும் வகையில நிச்சயமா இருக்கும். அனி எனக்கு போன் பண்ணி, `இந்த மாதிரி கமிட்டாகியிருக்கேன். வாழ்த்துங்க’னு சொன்னார். அனிருத் போன் பண்ணிப் பேசணும்னு அவசியமே இல்லை. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்தக் காலகட்டத்தில் போட்டனு எதுவுமே  இல்லை. அவங்க அவங்க வேலையைச் சரியா செஞ்சுகிட்டு வர்றாங்க."
 

`Social Cause'காக ஆல்பம் பண்ற ஐடியா இருக்கா ? 

``சோஷியல் காஸ் அப்படிங்கிறது பார்த்துச் சிரிக்கிற விஷயமாகிடுச்சு. காரணம், நிறைய பேர் அதைப் பத்திப் பேசுறாங்க. சமூகத்துல நடக்கிற தவறுகள் இப்போ கவனிக்கப்படுது. `மனிதி’, `வாடி ராசாத்தி’, `சதையை மீறி’னு என்னால முடிஞ்சதை, வாய்ப்பு கிடைக்கும்போது பண்ணிட்டு இருக்கேன். வெற்றிமாறன், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், ராஜு முருகன், மாரி செல்வராஜ், விஜய் சேதுபதினு நண்பர்கள் நிறைய பேருக்கு தெளிவான பொலிட்டிக்கல் பார்வை இருக்கு. அதை நான் கத்துக்கிறேன். அது என்னை மோல்டு பண்ணுது."

உங்களுடைய அடுத்த படத்துக்கும் நான்தான் மியூசிக் பண்ணணும்னு எந்த இயக்குநரிடமாவது சொல்லியிருக்கீங்களா ? 

``அப்படி இதுவரை ரெண்டு பேர்கிட்ட சொல்லியிருக்கேன். கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ். `பரியேறும் பெருமாள்' படம் முடிஞ்சு ரிலீஸுக்கு முன்னாடியே அவர்கிட்ட துண்டு போட்டு வெச்சுட்டேன். அவர் ரொம்ப பயந்துட்டு இருந்தார். ஆனா, எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. அகிரா குரோசோவா மாதிரியான லெவலுக்குப் போயிடுவீங்க. அப்போ என்னை நீங்க விட்டிடக் கூடாதுனு சொன்னேன். ஆனா, அவர் இந்தப் படமே வருமானு தெரியலைனு சொன்னார். இன்னைக்குப் படம் வேற லெவல்ல ரீச் ஆகியிருக்கு."

விஜய் கூட `பைரவா' பண்ணிட்டீங்க. அஜித் கூட எப்போ படம் பண்ணுவீங்க ?

``வெயிட்டிங் தான். தல படம் வந்துடுச்சுனு உடனே ஓகே சொல்லிட்டு சரியாப் பண்ணலைனா தப்பாகிடும். ரொம்ப எதிர்பார்ப்பு இருக்கும். அதைத் திருப்திபடுத்தணும். அப்படி ஒரு வாய்ப்பு வந்ததுனா மியூசிக் பண்ண நான் ரெடி. `கபாலி’ பண்ணிட்டு இருந்த சமயம், ஏர்போர்ட்ல அவரை மீட் பண்ணினேன். நான் யாருனு தெரியாமலே என் கையைப் பிடிச்சுப் பேசிட்டு இருந்தார். `என்ன பண்றீங்க’னு கேட்டதுக்கு, `மியூசிக் பண்ணிட்டு இருக்கேன்’னு சொன்னேன். `நல்ல பண்ணுங்க. நிச்சயமா பெரிய இடத்துக்கு வருவீங்க'னு பேசிட்டு இருக்கும்போது, என் மனைவி மீனாட்சி வந்து, `இவர் பேர் சந்தோஷ்; இந்தப் படமெல்லாம் பண்ணியிருக்கார்’னு அவர்கிட்ட சொன்னவுடனே தனியா கூட்டிட்டுப் போய், `சாரிங்க. எனக்குத் தெரியலை'னு சொன்னார். அப்பறம் நாங்க படம் பத்திப் பேசிட்டு இருந்தபோது, ஒருத்தர் போட்டோ எடுத்தார். அவரைக் கூப்பிட்டு `என்ன படிச்சிருக்கீங்க'னு கேட்டுட்டு, `இவ்ளோ படிச்சிருக்கீங்க. இமிகிரேஷன்ல போட்டோ எடுக்கக் கூடாதுனு தெரியும்ல. நம்ம வெளியே போய் எடுத்துக்கலாம்’னு சொல்லி அனுப்பினார். அவர் டென்ஷன் ஆகிக்கூட பேசியிருக்கலாம். ஆனா, அவர் அப்படிப் பண்ணலை. அதனாலதான் அவரை எல்லோருக்கும் பிடிக்குது."
 

அடுத்து என்ன ப்ரொஜக்ட்ஸ் இருக்கு ?

``இந்த வருஷம் ரொம்பவே ஸ்பெஷல். `மெர்க்குரி', `காலா', `பரியேறும் பெருமாள்', `வடசென்னை', `ஜிப்ஸி'னு மனசுக்கு நிறைவா இந்த 5 படங்கள் பண்ணிட்டேன். கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது. அதனால எந்தப் படமும் கமிட்டாகாமல் இருக்கேன்." 
 

மத்த மொழி படங்களுக்கு இசையமைக்கிற எண்ணம் இருக்கா? 

``சில பாலிவுட் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தது. ஆனா, எனக்கு மொழிதான் பிரச்னை. மொழி தெரியாததுனால ஆழமா ஸ்கிரிப்ட்குள்ள இருந்து வொர்க் பண்ண முடியாது. அதனால அதைத் தவிர்க்கிறேன். அப்படி நான் பண்ணாம விட்ட சில படங்கள் நம்ம ஊர்லயும் பெரிசாப் பேசப்பட்டுச்சு. `இந்தப் படத்தையா வேணாம்னு சொன்ன’னு என் ஃப்ரண்ட்ஸ்லாம் கேட்பாங்க. பாடல் வரிகள், வசனங்கள் புரிஞ்சாதானே உணர்வு பூர்வமா இசையில் அந்த உணர்வைக் கடத்த முடியும். நான் சொல்றது சரிதானே...’’