Published:Updated:

``எனக்கு ரசிகர்கள் இல்லை... உருவாக்கணும்!" - விஷ்ணு விஷால்

உ. சுதர்சன் காந்தி.

`ராட்சசன்' பட வெற்றியால் உற்சாகமாக இருக்கிறார், நடிகர் விஷ்ணு விஷால். சினிமா பயணம், வெற்றி - தோல்விகள், தயாரிப்பாளர் அவதாரம் எனப் பலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

``எனக்கு ரசிகர்கள் இல்லை... உருவாக்கணும்!" - விஷ்ணு விஷால்
``எனக்கு ரசிகர்கள் இல்லை... உருவாக்கணும்!" - விஷ்ணு விஷால்

" 'ராட்சசன்' படம் பார்த்துட்டு ரஜினி சார் போன் பண்ணார். படம் சூப்பரா இருக்கு. நல்லாப் பண்ணியிருக்கீங்க. ஃபென்டாஸ்டிக், ஃபென்டாஸ்டிக், ஃபென்டாஸ்டிக்னு மூணு முறை சொன்னார். அந்த வில்லன் யாருனு கேட்டார். நான் சொன்னவுடன் அவரும் சூப்பரா பண்ணியிருக்கார். எல்லாத்தையும்விட, டைரக்டர் ராம்குமாருக்கும் உங்களுக்குமான காம்போ சூப்பர்னு பாராட்டினார். சில நாள்களுக்கு முன்னாடி ஸ்டாலின் சார் படம் பார்த்துட்டு, ``படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. அதான் பார்க்க வந்தேன். நான் எதிர்பார்த்ததைவிட படம் பயங்கரமா இருந்ததுனு டீமைப் பாராட்டினார்" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகர் விஷ்ணு விஷால். 

``தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் எப்படி உருவானார்?"  

``நல்ல படங்கள்ல நடிச்சேன்; அதுல சில படங்களுக்கு எனக்குப் பாதிச் சம்பளம்கூட கைக்கு வரலை. அதையெல்லாம் பொருட்படுத்தாமதான், ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க. `கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா... காணாமப் போயிடுவீங்க'னு சம்பளம் தராத ஒரு தயாரிப்பாளர் சொன்னார். யோசிச்சா, அவர் சொல்றது சரின்னுதான் தோணுச்சு. அதை மாத்தத்தான், `வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்துல நடிச்சேன். அதுக்கு வேற ஒருத்தர்தான் தயாரிப்பாளர், சில பிரச்னைகளால நானே தயாரிக்கவேண்டியதா போயிடுச்சு. `கதாநாயகன்' படத்துக்கும் அதே நிலைமைதான். இப்படி சினிமாவுல தொடர்ந்து எதையாவது கத்துக்கிட்டே இருக்கேன். சுருக்கமாச் சொல்லணும்னா, எனக்குத் தயாரிப்பாளர் ஆகணும்னு ஆசை கிடையாது, சூழ்நிலை ஆக்கிடுச்சு!" 

``ஜீவா, மாவீரன் கிட்டு, முண்டாசுப்பட்டி... இப்படிப் நல்ல கதைகள்ல நடிச்சிருக்கீங்க. ஆனா, அதுமாதிரி படங்களை நீங்க தயாரிக்காம, கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிச்சு, நடிக்க என்ன காரணம்?" 

``மற்ற தயாரிப்பாளர்களுக்கு கமர்ஷியல் படம் பண்ண எனக்குள்ள சின்ன பயம் இருக்கு. அதனாலதான் நானே பண்றேன். மத்தவங்களுக்கு ரிஸ்க் கொடுக்க விரும்பலை. என் முயற்சி வெற்றியோ, தோல்வியோ அதுக்கு நானே பொறுப்பேத்துக்க நினைக்கிறேன்."  

``வருடத்துக்கு ஒரு படம் பண்ணாப் போதும்னு சொல்றீங்க... வளர்ற ஹீரோவுக்கு அது சரியா இருக்குமா?" 

``நல்ல கேள்வி. ஆரம்பத்துல அப்படி நினைச்சேன். ஆனா, நாம ஒரு படம் பண்ணிட்டு அடுத்த படத்துல நடிக்கிறதுக்குள்ள, மக்கள் 150 படம் பார்த்து, என் முகத்தை மறந்துடுறாங்க. சினிமாவுல நாம தொடர்ந்து இருக்கணும்னா, படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும். வெற்றியோ தோல்வியோ ஓடிக்கிட்டே இருக்காங்க சிலர். மக்களும் அவங்களைப் பார்த்துக்கிட்டே இருக்காங்க. அதை நானும் ஃபாலோ பண்ணப்போறேன். வருடத்துக்கு 4 படம் பண்ணி, அதுல 3 நல்ல படமா கொடுத்தா மக்கள் என்னை ஞாபகம் வெச்சுப்பாங்க. அடுத்த ரெண்டு வருடத்துல என்னோட 10 படங்கள் ரிலீஸ் ஆகும் பாருங்க..." 

``பெரிய ஹீரோவாகவும் இல்லை; ஆவரேஜ் ஹீரோவாகவும் இல்லை... இந்த இடம் தானா அமைஞ்சதுதானா?" 

``எனக்குப் போட்டி நானேதான். சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் எனக்குப் பிறகு சினிமாவுக்கு வந்தவங்க. ஆனா, இப்போ வேற லெவல்ல இருக்காங்க. அவங்க வளர்ச்சி எனக்கு சந்தோஷம்தான். ஏன்னா, சிவகார்த்திகேயன் டிவி ஆர்ட்டிஸ்ட் டு சினிமா, விஜய் சேதுபதி ஜுனியர் ஆர்டிஸ்ட் டு ஹீரோனு 10 வருடம் கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. அவங்க கஷ்டத்துக்கு பலன் இப்போ கிடைச்சிருக்கு. என் கஷ்டத்துக்கான பலன் இனிமேதான் கிடைக்கும்."  

``சினிமாவில உங்களுக்கான இடம் இப்படித்தான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க போல?!" 

``உண்மையைச் சொல்லணும்னா, சினிமாவுல நான் இன்னும் சக்ஸஸ் ஆகலை. அதனாலதான், எங்கேயும் `என் ரசிகர்கள்'ங்கிற வார்த்தை நான் பயன்படுத்தியதே இல்லை. என் படங்களுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்களே தவிர, எனக்கு இல்லை. இந்தச் சூழல் மாறி, எனக்கு எப்போ ரசிகர்கள் உருவாகத் தொடங்குறாங்களோ, அப்போதான் எனக்குத் திருப்தியா இருக்கும். அது நடக்காமப் போகாது; கொஞ்சம் டைம் ஆகும் அவ்ளோதான்!" 

``கிரிக்கெட் கரியரை இழந்துட்டோமேனு என்னைக்காவது வருத்தப்பட்டிருக்கீங்களா?" 

``நிறையவே! ஆனா, கிரிக்கெட்தான் எனக்கு இந்த வாழ்க்கையும் கொடுத்திருக்கு. ஸ்போர்ட்ஸ்மேல எனக்கு இருக்கிற காதல்தான், `வெண்ணிலா கபடிக்குழு’ படம் பண்ண வெச்சது. சி.சி.எல் போட்டிகள் மூலமா சினிமாவுல நல்ல பெயர் கிடைச்சது. கிரிக்கெட்னாலதான், `ஜீவா' வாய்ப்பும் கிடைச்சது. மன வலிமையுடன் நான் இங்கே போராடவும், எனக்குள்ள இருக்கிற ஸ்போர்ட்ஸ்மேன்தான் காரணம்." 

``சினிமா, கிரிக்கெட் ரெண்டு துறையிலேயும் ஃபேன் பாய் மொமன்ட் எது?"

``சி.சி.எல் போட்டி நடக்கும்போது, சச்சினை மீட் பண்ணிப் பேசியது. அதேபோல, சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்னாடியே ரஜினி சாரை மீட் பண்ணிப் பேசியிருக்கேன்." 

``எந்த ஹீரோயின்கூட நடிக்கும்போது ஈஸியா இருக்கும்?" 

``ஶ்ரீதிவ்யாகூட மட்டும் ரெண்டு படம் பண்ணியிருக்கேன். நான் அதிகமா யார்கிட்டேயும் பேசமாட்டேன். அப்படி இருக்கிறது, ஆன் ஸ்கிரீன்ல கெமிஸ்ட்ரி மிஸ் ஆகுறமாதிரி எனக்கு ஃபீல் ஆச்சு. அதுக்குப் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோரிடமும் கலகலப்பாப் பேச ஆரம்பிச்சுட்டேன். கேத்ரீன் தெரஸா, அமலாபால் எனக்கு நல்ல நண்பர்கள்." 

``பையன் ஆர்யன் எப்படி இருக்கார்?"

``சூப்பரா இருக்கார். ஒன்றரை வயசுதான் ஆகுது. இப்போதான் `அப்பா'னு கூப்பிட ஆரம்பிச்சிருக்கான். டிவியில என்னைப் பார்த்தா குஷியாகிடுவான். குழந்தையோட மழலைக் குரல் அப்பாக்களுக்கு எப்போவும் சந்தோஷம்தானே?!" 

``அடுத்து என்னென்ன படங்கள் கைவசம் வெச்சிருக்கீங்க ?"

`` `சிலுக்குவார்பட்டி சிங்கம்', எழில் சார்கூட `ஜகஜால கில்லாடி', சீனு ராமசாமி சாரோட `இடம் பொருள் ஏவல்' இந்த மூணு படமும் ரிலீஸுக்கு ரெடி. `காடன்', வெங்கடேசன் டைரக்‌ஷன்ல ஒரு படம், தனுஷ் சார் புரொடக்‌ஷன்ல ஒரு படம் பண்ணப்போறேன். இதுதவிர, இன்னும் ரெண்டு படங்கள் பேச்சு வார்த்தையில இருக்கு."

மேலும் பல கேள்விகளுக்கு இந்த வார ஆனந்த விகடனில் சுவாரஸ்மாகப் பதிலளித்துள்ளார், நடிகர் விஷ்ணு விஷால்.