Published:Updated:

``இப்பவே சொல்றேன்... `எல்.கே.ஜி'-யின் `வம்பு’ போர்ஷனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!" - ப்ரியா ஆனந்த்

வே.கிருஷ்ணவேணி

`எல்.கே.ஜி' படத்தில் நடித்து முடித்த உற்சாகத்தில் இருக்கிறார், ப்ரியா ஆனந்த். படத்தில் நடித்த அனுபவத்தைக் கேட்டால் சிலாகித்துப் பேசுகிறார்.

``இப்பவே சொல்றேன்... `எல்.கே.ஜி'-யின் `வம்பு’ போர்ஷனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!" - ப்ரியா ஆனந்த்
``இப்பவே சொல்றேன்... `எல்.கே.ஜி'-யின் `வம்பு’ போர்ஷனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!" - ப்ரியா ஆனந்த்

``ஆறு மாதத்திற்கு ஒரு படம் வரணும். என்னை எப்போவும் ரசிகர்கள் பார்த்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற நடிகை கிடையாது நான். வருடத்துக்கு ஒரு படத்துல நடிச்சாலும், எதிர்காலத்தில் அதை நினைத்து திருப்தியா இருக்கணும்." எனப் பேசத்தொடங்குகிறார், ப்ரியா ஆனந்த்.

``ஆர்ஜே பாலாஜிகூட நடித்த அனுபவம்?''

``செம ஜாலியா இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதாவது பேசிக் கலாய்ச்சுக்கிட்டே இருப்பார். பொதுவெளியில, மேடையில எப்படிப் பேசுறாரோ, அதேபோலத்தான் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பேசுவார். சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடும். அவருக்கு நேரெதிரான ஆள், படத்தோட இயக்குநர். நான் பொதுவாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரமே வந்திடுவேன். வந்து, ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்கிற விஷயங்களைக் கவனிச்சுகிட்டே இருப்பேன். இயக்குநர் ஸ்பாட்டுக்கு வந்ததும், எல்லாம் ரெடியாகுறதுக்கு முன்னாடியே ஒவ்வொரு வேலையையும் கவனிக்க ஆரம்பிச்சிடுவார். நாங்கள் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து காமெடி பண்ணாலும், அதைக் கவனிக்கமாட்டார். ஏதாச்சும் ஜோக் அடிச்சா, ரொம்ப நேரம் கழிச்சு, `ம்... என்ன சொன்னீங்க'னு கேட்பார்னா, பார்த்துக்கோங்க! ஆனா, அப்படி ஒரு டெடிகேஷன்தான், `எல்.கே.ஜி' படத்தை நல்லவிதமா கொண்டுவந்திருக்குனு நினைக்கிறேன்." 

``பாலாஜியின் நீண்ட நாள் தோழியாமே நீங்கள்?''

``ஆமா. பாலாஜியை எனக்கு முன்னாடியே தெரியும். அப்பப்போ பேசிப்போம். ஹாய், பாய் சொல்லிப்போம். அப்படி ஒருநாள் `ஒரு படம் பண்ணப்போறேன். உங்களை ஹீரோயினா நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். உங்க விருப்பம் என்ன'னு கேட்டார். பாலாஜி `வாய்ஸ் ஆஃப் யூத்'னு எல்லோருக்கும் தெரியும். அவருக்கு நல்ல பெயர் இருக்கு. அதனால, கதையைக் கேட்டு ஓகே சொல்லிட்டேன். ஒரு ஹீரோயின் கேரக்டர் பாட்டு, ரொமான்ஸ், ஹீரோயிஸத்துக்கு அடங்கிப்போறது மாதிரிதான் பெரும்பாலான படங்கள்ல இருக்கும். அப்படி எதுவுமில்லாத படம் இது. இந்தக் காலத்துப் பெண்கள் வேலை செய்ற இடத்துல, பொதுவெளியில எப்படி இருப்பாங்களோ, அதேமாதிரிதான் என் கேரக்டரும் இருக்கும்."  

``இந்தப் படத்துல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு டீல் போட்டீங்களாமே... என்ன அது?" 

``என்னை மட்டுமல்ல, எல்லோரையும் அசால்டா கலாய்க்கிறது, பாலாஜியின் தனித்திறமை. என்னையும் அப்படித்தான் கலாய்ச்சுகிட்டே இருப்பார். சிலநேரம் கலாய்க்கிறாரா, பாராட்டுறாரானே தெரியாது. அதனால, `எல்.கே.ஜி' ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே `இனிமே என்னைக் கலாய்க்கக்கூடாது. எந்த மேடையேறினாலும் என்னைக் கிண்டல் பண்ணக்கூடாது. லைஃப் லாங் இப்படித்தான் இருக்கணும்'னு சொன்னேன். பாலாஜியும் அதுக்கு ஓகே சொல்லிட்டார். பாலாஜிகூட நடிக்க ரொம்பக் கஷ்டமா இருந்தது. நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார். ஸ்பாட்ல காமெடி கில்லாடி. இவர் செய்யற பல விஷயங்கள் வெளியே தெரியாது. இந்தத் திறமை கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிற வரம்." 

``பாலாஜிகூட ஒப்பிடும்போது, நடிப்புல நீங்க சீனியர். ஏதாவது டிப்ஸ் கொடுத்தீங்களா?!" 

``நீங்க வேற... நான் ஒவ்வொரு முறையும் பயந்துகிட்டேதான் நடிப்பேன். அவரைவிட பெட்டரா பண்ணணும்னு கவனமா இருப்பேன். நான் ஆக்டிங்ல சீனியரா இருந்தாலும், நான்தான் சொதப்பி அவர்கிட்ட திட்டு வாங்குவேன்."

``ஏன் இவ்வளவு வருட இடைவெளி?''

``எனக்கு நான் பண்ற வேலை பிடிக்கணும். மலையாளத்தில் நடிச்ச `காயங்குளம் கொச்சுண்ணி' படம் 100 கோடி வசூல் ஆகியிருக்கு. அந்தப் படத்துக்கு மட்டுமே எட்டு மாசம் கால்ஷீட் கொடுத்தேன். நான் பண்ற படங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களாக இருக்கணும். முடிஞ்ச அளவுக்கு அப்படித் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன். மூன்று மாதத்துக்கு ஒரு படம் பண்ணிட்டு இருந்தாதான் ரசிகர்கள் நம்மளை ஞாபகம் வெச்சுப்பாங்கனு இல்லை. நல்ல படங்கள்ல நடிச்சா போதும்."

``ஜாலியான ஹீரோக்கள்கூடவே நடிக்கிறீங்களே...?"

``அந்த விஷயத்துல நான் லக்கிதான். ஜெய், சிவா, சிவகார்த்திகேயன், அதர்வா... நான் நடிச்ச பெரும்பாலான ஹீரோக்கள் செம ஹியூமரான ஆள்கள். இப்போ பாலாஜி. இவங்ககூட நடிக்கிறப்போ, எக்ஸ்ட்ரா எனர்ஜி. ஷூட்டிங் ஸ்பாட்டும் செம ஜாலியா இருக்கும்."

`` `எல்.கே.ஜி' அரசியல் கதை. நீங்கதான் பாலாஜிக்கு அரசியல் ஐடியாக்கள் கொடுக்கிற பொண்ணா?!"

``எல்லோருக்கும் இந்தப் பேட்டி மூலமா ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திடுறேன். இந்தப் படத்தில் நான் பேசியிருக்கிற வசனங்களுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. எனக்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாது. ஆனா, ஒரு ஒரு வசனம் பேசும்போதும் பயமா இருந்துச்சு.  `அடப்பாவிகளா... அரசியல் தெரியாத என்னை ஹீரோவுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கிற மாதிரி கதையைக் கொண்டுபோயிருக்கீங்களே'னு நினைச்சுக்கிட்டேன். அதனால, படத்துல ஹீரோயின் நான்தான். ஆனா, பேசியிருக்கிற வசனம் என் கருத்து கிடையாது. அவ்வளவு டெரர் வசனங்கள் படத்துல இருக்கு. அதையெல்லாம் பேசி நடிக்கும்போது, `ஏண்டா எனக்குத் தமிழ் தெரிஞ்சது!'னு ஃபீல் பண்ணேன். ஆனா, `எல்.கே.ஜி' இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக முக்கியமான படம். நெகட்டிவ் விஷயங்களை காமெடியா சொல்லி, எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டுபோற முயற்சியா இது இருக்கும். அரசியலில் எப்படியெல்லாம் நம்மளை இம்ப்ரஸ் பண்ணிக் கெடுத்து வெச்சிருக்காங்கனு காமெடியா சொல்லியிருக்கோம்."