Published:Updated:

சிங்கிள் மதர் டு சிம்புவின் பெர்சனல் மேக் அப் ஆர்டிஸ்ட்! - நவீனாவின் நம்பிக்கை கதை

சு.சூர்யா கோமதி

``சிம்பு, `இது உனக்குக் கொடுத்த வாய்ப்பு இல்ல. உன் திறமைக்குக் கொடுக்கிற வாய்ப்பு. இதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல'னு ரொம்ப சாதாரணமா சொன்னார். செம இம்ப்ரஸ் ஆகிட்டேன்.''

சிங்கிள் மதர் டு சிம்புவின் பெர்சனல் மேக் அப் ஆர்டிஸ்ட்! - நவீனாவின் நம்பிக்கை கதை
சிங்கிள் மதர் டு சிம்புவின் பெர்சனல் மேக் அப் ஆர்டிஸ்ட்! - நவீனாவின் நம்பிக்கை கதை

``ஒரு மேக்கப் ஆர்டிஸ்டாக நான் என் வேலையை ரொம்ப நேசிக்கிறேன். அந்தக் காதல்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கித் தருது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா சிவாஜி. நடிகர் சிம்புவிற்கு பர்சனல் மேக்கப் ஆர்டிஸ்டான இவர் தன்னுடைய துறை சார்ந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்.

"எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி படிச்சது எல்லாம் சென்னையில். அப்பா பிசினஸ் மேன். வெல் செட்டில்டு ஃபேமிலி. 19 வயசுல கல்யாணம். பிறந்த வீட்டிலேயும் புகுந்த வீட்டிலேயும் பொருளாதார கஷ்டம்ங்கிற பேச்சுக்கே இடம் இல்லாம இருந்தது. அதனால் எனக்குனு ஒரு தனித்துவம் தேவைப்படாமலேயே இருந்தது. ஹோம் மேக்கராக சந்தோஷமா இருந்தேன். சில வருஷங்கள்ல கணவரோட கருத்து வேறுபாடு ஏற்பட, அவரை பிரிஞ்சு 5 வயசு குழந்தையோட சிங்கிள் மதரா சமுதாயத்தை எதிர்கொள்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டேன்.

நிஜமா... அப்போதான் வாழ்க்கைனா என்னனு புரிஞ்சது. அப்பா அம்மா பக்கபலமா இருந்தாங்க. ஆனா அவங்ககிட்ட பொருளாதார உதவியைக் கேட்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்தேன். என் பொண்ணுக்கு நான் ரோல் மாடலா இருக்கணும்னு நினைச்சேன். நினைச்சது மாதிரி இல்லை வாழ்க்கை. கணவரை பிரிஞ்ச ஸ்ட்ரெஸ், சமுதாயத்தை ஒற்றை ஆளா எதிர்கொள்ற ஸ்ட்ரெஸ்ஸை அனுபவிச்சேன். அதுல இருந்து வெளிய வர பாக்ஸிங், பவர் லிஃப்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். நான் கத்துக்கிட்டதை மக்களுக்குக் கற்றுத்தர விரும்பினேன். `வேக்ஸ்'ங்கிற பேர்ல ஃபிட்னஸ் சென்டரை சென்னை பெசன்ட் நகர்ல ஓபன் பண்ணினேன். கொஞ்சம் கொஞ்சமா பிக் கப் ஆன பிசினஸ் ஒருகட்டத்துல சினிமா செலிபிரெட்டிகளோட வரவைத் தந்துச்சு. என்னோட ஃபிட்னஸ் சென்டரை செலிப்ரிட்டிகள் தேடி வர ஆரம்பிச்சாங்க. அதுல கிடைச்ச லாபத்தை வைச்சு அண்ணாநகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்கள்ல ஃபிட்னஸ் சென்டருக்கான கிளையைப் பரப்ப ஆரம்பிச்சேன். பல போராட்டத்தைப் பார்த்த எனக்கு கிடைச்ச வெளிச்சமே வெற்றிங்கிற ஒளிதான்'' என்று உற்சாகமாகப் பேசின நவீனா தன் திரைப்படத் துறையின் என்ட்ரி பற்றியும் பேசினார்.

``ஃபிட்னஸ் பிசினஸ் நல்ல ரீச் கொடுத்தாலும், புதிதான தேடல் இல்லாமல் செய்றதையே திருப்பிச் செய்றது ஒரு வகையில அலுப்பா இருந்தது. அதனால ஒரு பக்கம் பிசினஸ் போய்ட்டு இருந்தாலும் மறுபக்கம் அட்வான்ஸ் மேக் கப் கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். பிரைடல் மேக் கப் ஷோக்களுக்குப் போனேன். எப்படி ஒரு மேக் கப் உருவாகுதுங்கிறதை அணு அணுவா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். என்னை பிஸியா வைச்சுக்கிட்டேன். நான் படிச்ச கோர்ஸோட பலனா விளம்பரங்களுக்கு மேக் கப் ஆர்டிஸ்டா வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.

என்னோட டேலன்ட்டை விளம்பர செட்ல பார்த்த நடிகை அமலா பால் அவங்க நடிக்க கமிட் ஆகியிருந்த `ஆடை' படத்துக்கு மேக் கப் ஆர்டிஸ்டா கூப்பிட்டாங்க. ஒரு நாள் நடிகர் சிம்பு ஆபீஸ்ல இருந்து கால். `சாருக்கு பர்சனல் மேக் கப் ஆர்டிஸ்டா வொர்க் பண்ண முடியுமா'னு கேட்டாங்க. சந்தோஷத்துல திக்குமுக்காடி போயிட்டேன். உடனே ஓகே சொல்லிட்டேன்.

சிம்பு சாரை நேர்ல பார்த்து அவரோட ஃபியூச்சர் புராஜெக்ட்ல என்ன மாதிரியான அவுட்லுக் வேணும்ங்கிறதை கேட்கப் போயிருந்தேன்.  எந்தப் பந்தாவும் இல்லாம அவருக்கே உரிய ஸ்டைல்ல எல்லாத்தையும் நிதானமா எனக்கு விளக்கினார். எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு கிளம்புறப்ப ரொம்ப நன்றி சார்னு சொன்னேன். உடனே அவர் `இங்க பாரு நவீனா... இது உனக்குக் கொடுத்த வாய்ப்பு இல்ல. உன் திறமைக்குக் கொடுக்கிற வாய்ப்பு. இதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல'னு ரொம்பச் சாதாரணமா சொன்னார். செம இம்ப்ரஸ் ஆகிட்டேன்.

`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துல சிம்பு சாருக்கு நான்தான் பர்சனல் மேக் கப் ஆர்டிஸ்ட். இப்ப நிறைய நடிகர்கள் தங்களோட படத்துக்கு மேக் கப் செய்ய கூப்பிடுறாங்க. இதுபோக, மேக் கப் தொடர்பான பயிற்சிகள், திருநங்கைகளுக்கான மேக் கப் டிரெயினிங் கொடுத்து அவங்க வாழ்க்கையை மேம்படுத்துற செயல்கள் போயிட்டு இருக்கு. அடுத்தடுத்த நகர்வுகள்தான் என்னை பிஸியா வைச்சிருக்கு'' என்கிறார் புன்னகை மாறாத நவீனா.