Published:Updated:

``விஜய், அஜித்துக்கு ஓ.கே. யாஷுக்கு?’’ - KGF வசனகர்த்தா அசோக்

ப.சூரியராஜ்

கமல் சாருடைய பிறந்தநாளுக்கு மைம் ஒண்ணு பண்ணியிருந்தேன். அதைப் பார்த்தவர் `உனக்கு என்ன லட்சியம்'னு கேட்டார். `சினிமா'ன்னு சொன்னேன், `வா'ன்னு சேர்த்துகிட்டார்.

``விஜய், அஜித்துக்கு ஓ.கே. யாஷுக்கு?’’ - KGF வசனகர்த்தா அசோக்
``விஜய், அஜித்துக்கு ஓ.கே. யாஷுக்கு?’’ - KGF வசனகர்த்தா அசோக்

``ட்டு ஷூக்கு பாலீஷ் போட்டாத்தான் எனக்கு ஒரு பன் கிடைக்கும்’’, ``நான் யாரோ அடிச்சு டான் ஆகலை, நான் அடிச்ச பத்து பேருமே டான்’’ என `KGF' படத்தின் ஒவ்வொரு வசனமும் மீம் டெம்ப்ளேட்டாக இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த வசனங்களுக்குச் சொந்தக்காரரான வசனகர்த்தா கே.ஜி.ஆர்.அசோக்கிடம் பேசினோம்.

``தஞ்சாவூர், கரந்தை கலைக் கல்லூரில படிச்சேன். அப்போதிருந்தே கலைத்துறை பக்கம்தான் நமக்கு ஆர்வம். மைம், ஸ்கிட், ஃபோக் டான்ஸ்னு தொடர்ந்து ஆறு வருஷம் நேஷனல் லெவல்ல கோல்டு மெடல் அடிச்சேன். அந்தத் தாக்கத்தில் சினிமாவுக்குக் கிளம்பி வந்தாச்சு. கமல் சாருடைய பிறந்தநாளுக்கு மைம் ஒண்ணு பண்ணியிருந்தேன். அதைப் பார்த்தவர் `உனக்கு என்ன லட்சியம்'னு கேட்டார். `சினிமா'ன்னு சொன்னேன், `வா'ன்னு சேர்த்துகிட்டார். `ஹேராம்’, `ஆளவந்தான்', `விருமாண்டி’னு மூணு படங்களுக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அங்க ஆரம்பிச்சது என் சினிமா பயணம்’’ என ஆரம்பத்திலேயே ஆச்சர்யம் கூட்டினார் கே.ஜி.அசோக். இவரை வேறு எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது இல்லையா... ஆமாம்... `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி கட்டிப்பிடிக்கும் நாகராஜ் அண்ணனாகப் பார்த்திருப்பீர்கள்.


`கே.ஜி.எஃப்'  வாய்ப்பு கிடைத்தது எப்படி?

`` `கே.ஜி.எஃப்’ படத்தின் எக்ஸ்க்யூடிவ் புரொடியூசர் என் நண்பர். அவர் மூலமாதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. எனக்கு கன்னடம் அவ்வளவா தெரியாது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வச்சு ஒரு படம் இயக்கப்போறேன். அந்தப் படத்துக்கு என்கூட கோ-டைரக்டரா வொர்க் பண்ணப்போறவர்தான் மொழி விஷயத்துல எனக்கு உதவியா இருந்தார். அந்தப் படத்துல பைத்தியகாரர் ஒருவர் கதை சொல்ற காட்சி ஒண்ணு வரும். கன்னடத்துல ரொம்ப டெப்த்தான கவிதை அது. அதைத்தான் தமிழாக்க சொல்லி சாம்பிளா அனுப்பியிருந்தாங்க. நானும் பண்ணி அனுப்பினேன். நான் படிச்ச மொழியியல், வசனங்கள் லிப் சிங்க்ல இருக்க உதவி செஞ்சது. ஒரு தெளிவு கிடைச்சது, முழு படத்துக்கும் வசனங்கள் எழுதினேன்.’’

இதற்கு முன்னாடி வேறு படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கீங்களா?

``இல்லை. இதுதான் முதல்முறை. நானே இயக்கின `ஆயுள்ரேகை'ங்கிற படத்துக்கு வசனம் எழுதியிருக்கேன். அவ்வளவுதான். `கே.ஜி.எஃப்'க்கு வசனம் எழுத நான் அவங்ககிட்ட கேட்டது, ஃப்ரீடம் மட்டும்தான். 150 குரல்களுக்கு மேல டெஸ்ட் பண்ணேன். டப்பிங் பண்ணும்போது இயக்குநர் கொண்டுவர நினைச்ச உணர்வை கெடுத்திடாம கவனமா பார்த்துக்கிட்டேன். கன்னடத்துல சில வசனங்களை ரொம்ப எமோஷனலா பேசியிருப்பாங்க. நான் நம்ம ஊருக்கு ஏற்றமாதிரி கொஞ்சம் சட்டுலா பண்ணேன். முழு படத்துக்கான வசனங்களை யாஷ் கிட்ட ஐந்து முறை படிச்சுக்காட்டி ஓகே வாங்கினேன். அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, தெளிவா இருந்தார். எனக்கும் அது நம்பிக்கை கொடுத்தது. இதுதான் நான் வசனம் மட்டும் எழுதுற முதல் படம். படத்தை முடிச்சுட்டு பார்த்தபோது என்கிட்டே இவ்ளோ இருக்கான்னு ஆச்சர்யமா போச்சு!’’


``150 குரல்களுக்கு மேல டெஸ்ட் பண்ணீங்களா?’’

``ஆமாம். எல்லோருமே நம்ம டப்பிங் யூனியனை சேர்ந்த ஆர்ட்டிஸ்ட்கள்தான். ஆனா, எல்லோரையும் அவங்க நார்மல் வாய்ஸ்ல இல்லாம வேற வாய்ஸ்ல பேச வெச்சேன். ஏன்னா, இது இன்னுமொரு டப்பிங் படமா இருந்திடக் கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருந்தேன். வசனங்கள் இந்தளவுக்குப் பேசப்படுறதுக்கு, அந்த வசனங்களைப் பேசின டப்பிங் ஆர்டிஸ்ட்களும் மிக முக்கியமான காரணம். அவங்க இல்லைன்னா இது சாத்தியமாகியிருக்காது. இந்த வசனங்களை எல்லாம் அஜித், விஜய் பேசுனாங்கன்னா, நம்மாளுங்க கைதட்டிடுவாங்க. யாஷ் மாதிரி புதுசா ஒருவர் பேசும்போது, சிரிக்குற மாதிரி இருந்துடக் கூடாது இல்லைய்யா. அதுக்குதான் நான் ரொம்ப பயந்தேன். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள் அதை செமையா பண்ணிட்டாங்க.’’

``கே.ஜி.எஃப்’’ இரண்டாம் பாகத்தின் வேலைகள் ஆரம்பிச்சாச்சா?

``ஆரம்பிச்சுட்டாங்க! டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. கூடிய சீக்கிரத்துல ஷூட் கிளம்பிடுவாங்க. ஸ்க்ரிப்ட் ஃபைனல் ஆன பிறகுதான் நமக்கு வேலை ஸ்டார்ட் ஆகும். முதல் பாகத்திலேயே யாஷ்தான் டப்பிங் பேசுறதா இருந்தது. ஆனா, வசனங்களைப் பார்த்துட்டு இதை நான் பேசி கெடுத்துடக் கூடாதுனு சொல்லிட்டார். இப்போ அவருக்கு கான்ஃபிடன்ஸ் வந்தாச்சு. இரண்டாம் பாகத்துல அவர்தான் பேசுவார்னு நினைக்கிறேன்.’’


அடுத்தடுத்த புராஜக்ட்கள்...

``சினிமாவுல ஒருமுறை போலீஸ் வேஷம் போட்டா, அடுத்தடுத்து போலீஸ் வேஷமா வரும். அதுபோல, நிறைய வசனம் எழுதுற வாய்ப்புகளா வருது. கன்னடத்துல சிவராஜ்குமார் படம் இயக்கப்போறேன். தமிழ்லேயும் ஒரு சின்ன பட்ஜெட் படம் ஒண்ணு இயக்குறேன். அதனால, எதுலேயும் கமிட் பண்ணிக்க விரும்பல’’ என்கிறார் கே.ஜி.ஆர்.அசோக்.