Published:Updated:

ஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்

விகடன் விமர்சனக்குழு
ஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்
ஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்

இன்றோடு ஏழாவதுநாள். சென்னையில் மழை அடிக்கத் தொடங்கியதும் பாதிப்புகளும் தொடங்கிவிட்டன. எப்போதும் தான் வசிக்கும் சாலிகிராமம் பகுதியில் ஏதாவது சிக்கலென்றால் களத்தில் இறங்கும் நடிகர்மயில்சாமி இம்முறையும் இறங்கிவிட்டார்.

எப்படித் தொடங்கினீர்கள் என்று கேட்டதும், நான் எம்.ஜி.ஆர்.பக்தன் எப்போதும் என்னாலியன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன், சாலிகிராமத்தில் எல்லாவீடுகளிலும் தண்ணீர் என்றதும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று இறங்கினேன். என்னோடு பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்துகொண்டார்கள். முருகன் என்பவர் தன்னுடைய டாடா-ஏஷ் வண்டியைக் கொண்டுவந்தார். எவ்வளவு தண்ணீரிலும் ஓட்டுகிறேன் எங்க வேணாலும் ஒட்டறேன் என்றார்.

ஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்

எல்லோருமாகச் சேர்ந்து இன்றோடு ஏழாவதுநாள். எல்லா நாளும் காலையில் கிளம்பி ஒவ்வொரு தெருவாகச் சென்று, தண்ணீர்பாட்டில்கள், பால், மற்றும் உணவு என்று தேவைக்கேற்ப எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருந்தோம். உணவுக்கு ஒரு மெஸ்ஸில் சொல்லிவிட்டோம். அவர்களும் சமைத்துக்கொடுத்தார்கள். காய்கறிகள் மற்றும் சமையல்பொருட்களும் விநியோகித்தோம். எல்லா இடங்களிலும் ஒரு முன்தொகை மட்டும் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டேயிருந்தோம். கொடுப்பதற்கு யாரும் தயங்கவில்லை. தாராளமாகக் கொடுத்தார்கள். முதலில் நான் மட்டும் செலவு செய்துகொண்டிருந்தேன். அப்புறம் பல நண்பர்களும் ஒத்துழைப்புக்கொடுக்கத் தொடங்கினர். திருவண்ணாமலையிலிருந்து மட்டும் எண்பதாயிரம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் வாங்கினோம். சத்யராஜ் சாரிடம் அதற்காகப் பணம் கேட்டேன். கேட்டவுடன் ஐம்பதாயிரம் கொடுத்தார்.

சாலிகிராமம், ஜெயராமன்நகர், மஜித்நகர், முத்தமிழ்நகர், விருகம்பாக்கம் வடபழனி உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றோம். எல்லாப்பகுதிகளிலும் பல்வேறு வகையில் பாதிப்புகள் இருக்கின்றன. மக்களுக்கு இன்னும் நிறையத் தேவைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவர்களால் வெளியே சொல்லமுடியாது.

இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. சாக்கடை கலந்து அத்தண்ணீர் கறுப்பாக சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் இருக்கிறது. அதைச் சரிசெய்வதுதான் முதல்பணியாக இருக்கவேண்டும்.

இந்தமழையால் எல்லோரும் எல்லாவகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் எல்லோரும் எல்லோருக்கும் உதவமுன்வந்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை இந்த மழையில் பார்க்கமுடிந்தது. அதனால் யாரையும் குற்றம் சொல்லாமல் இதிலிருந்து மீண்டுவருவோம்.

இன்னும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பாட்டில்கள் தண்ணீர் இருக்கிறது.ள அவற்றைக்கொடுக்கவேண்டும், இன்றைக்கு எல்லோருக்கும் நிலவேம்புக்குடிநீர் கொடுததோம். இதுவரை நான்காயிரம்பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டுஅண்டாக்களில் கொதித்துக்கொண்டிருக்கிறது. அவற்றையும் கொடுக்கவேண்டும்.

சமையல் கேஸ் தட்டுப்பாடான நேரத்திலும் மக்களுக்காகச் சமைப்பதால் எங்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைத்தது. அதை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்தால் ஆட்டோக்காரர் வாடகை வேண்டாமென்கிறார். இப்படிப் பல நெகிர்ச்சியான விசயங்கள் நடந்தன.

நான் பைபாஸ் சர்ஜரி செய்தவன். நிறைய மாத்திரைகள் சாப்பிடுகிறவன். இந்த ஒரு வாரமாக எல்லோமே மாறிப்போய் விட்டது. இரவில் சாப்பிடவேண்டிய மாத்திரையை காலையில் சாப்பிடுகிறேன் காலையில் சாப்பிடவேண்டியது மாலையில் சாப்பிடுகிறேன்.

என்னைப் பார்த்தால் குடிகாரன் மாதிரி இருக்கிறதென்று சொல்வார்கள். அலைச்சலில் என் முகம் அப்படி ஆகிவிட்டது. இரண்டுகால்களிலும் புண் வந்துவிட்டது. இனிமேல் தணிணீரில் நிற்கக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். இன்றோடு இந்தப்பணியை நிறுத்துகிறோம் என்று சொல்லி முடித்துக்கொண்டார் மயில்சாமி.