Published:Updated:

டான்ஸர், சிங்கர், ஆக்ட்ரஸ்... ஆல் இன் ஆல் ரம்யா!

விகடன் விமர்சனக்குழு
டான்ஸர், சிங்கர், ஆக்ட்ரஸ்... ஆல் இன் ஆல் ரம்யா!
டான்ஸர், சிங்கர், ஆக்ட்ரஸ்... ஆல் இன் ஆல் ரம்யா!

மலையாளம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளும் கலந்து பேசுகிறார் ரம்யா நம்பீசன். ‘மோகத்திரி மூன்றாம்பிறை’ என்று கதாநாயகியாக ரசிக்கவைத்தவர், ‘ஃபை ஃபை ஃபை கலாய்ச்சிஃபை’ என்று பாடகியாகக் கலக்கி, சமீபத்தில் சேதுபதி படத்தில் ரொமான்டிக் மம்மியாக ‘க்யூட்’ சொல்லவைத்தவர். ‘ நடிப்பு, பாட்டு மட்டுமில்ல... நான் ஒரு டான்ஸர்!’ என்கிறார் நமக்குப் பழகிப்போன அவர் சிரிப்பில்.
கோலிவுட்டின் இந்த ‘சம்திங் ஸ்பெஷல்’ ஹீரோயினுடன் ஒரு ஸ்வீட் பேட்டி!

‘‘நான் பிறந்து, வளர்ந்தது கேரளா. பக்கா மலையாளப் பொண்ணு. ரெண்டாவது படிக்கும்போதே என்னை வீட்டில் பாட்டு, டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பிட்டாங்க. பரதம், கர்நாடிக் மியூசிக்னு வளர்ந்தேன். ஒரு லைவ் சேனலில் ஆங்கர் வாய்ப்புக் கிடைச்சதுதான் மீடியா என்ட்ரி. பிறகு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக் கிடைச்சது. ‘குள்ளநரிக் கூட்டம்’, ‘பீட்ஸா’, ‘சேதுபதி’னு தமிழ்ல நல்ல ரீச். மல்லுவுட்டில் ரம்யா பிஸி! ஒரே ஒரு வருத்தம், ஒரு டான்ஸரான எனக்கு அந்தத் திறமையை வெளிப்படுத்துற மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கல. பட், அவார்டு நிகழ்ச்சிகளில் டான்ஸர் ரம்யாவை பார்க்கலாம்’’  கொஞ்சும் குரலில் ஆரம்பித்தார் ரம்யா.

டான்ஸர், சிங்கர், ஆக்ட்ரஸ்... ஆல் இன் ஆல் ரம்யா!

‘‘சிங்கர் ரம்யா பற்றி..?’’

‘‘சோட்டானிக்கரை பகவதி அம்மன் பற்றி பக்திப்பாடல் ஆல்பங்கள் பாடினதுதான் ஆரம்பம். அப்புறம் மலையாளத்தில் நான் நடிச்ச படங்கள் உட்பட பல படங்களில் பாடும் வாய்ப்பை, மலையாள இசையமைப்பாளர்கள் கொடுத்தாங்க. அதில் பல மியூசிக்கல் ஹிட். என்னோட பெயர் ஃபிலிம் ஃபேர் அவார்டுக்கு ‘சிறந்த பின்னணிப் பாடகி  மலையாளம்’ கேட்டகரியில நாமினேட் ஆனது, பெரிய சந்தோஷம். கிடைச்ச பாராட்டு, தெலுங்கு, தமிழ் படங்களிலும் பிளேபேக் சிங்கர் வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தது. தமிழ்ல ‘பாண்டியநாடு’ படத்தின் ‘ஃபை ஃபை ஃபை கலாய்ச்சிஃபை’ பாடல் மாஸ் ஹிட். நான் பாடின ஐயப்ப பக்திப் பாடல் யூடியூபில் ஒன்றரை லட்சம் ஹிட்ஸ் தட்டினதில், ஆனந்தமோ ஆனந்தம்.


‘‘ரியாலிட்டி பாட்டுப் போட்டியில் நடுவராக இருந்திருக்கிறீர்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து..?’’

‘‘எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது இருக்கிற மாதிரிதான் ரியாலிட்டி ஷோக்களும். அந்த நிகழ்ச்சிகள் மூலமா எத்தனையோ திறமைகள் மேடையேற்றப்படுது ரொம்ப நல்ல விஷயம், பெரிய வாய்ப்பு. ஆனா, அதை வாய்ப்பா மட்டும்தான் பார்க்கணும்; அதுவே வாழ்க்கையில்ல. போட்டியாளர்களா கலந்துக்கிற குழந்தைகளோட பெற்றோர்கள் இதை முதல்ல புரிஞ்சுக்கணும். ‘ட்ரை யுவர் லெவல் பெஸ்ட்’னு சொல்லலாம். ‘இந்தப் போட்டிதான் உன் வாழ்க்கையைவே தீர்மானிக்கப்போகுது’ என்பதுபோன்ற, அவங்க வயசுக்கும் மீறின அழுத்தத்தை அந்தக் குட்டிக் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. ஒரு தோல்வியைச் சந்திக்கும்போது அழுவது இயற்கைதான். ஆனா, அதை மிகைப்படுத்தி சேனல்கள் தங்களின் வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கிறாங்க. அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாத அளவுக்கு அது ரியாலிட்டி ஷோக்களின் இயல்பாகிப்போச்சு. வேற என்ன சொல்றது?’’

‘‘ரம்யா இளம்பெண்களுக்கு சொல்லும் எனர்ஜி வார்த்தைகள்..?’’

‘‘சினிமா ஆசையுள்ள பெண்களுக்கு சில வார்த்தைகள் இருக்கு. ஒரு சாதாரண பொண்ணு, நடிகை ஆக முடியுமான்னா, நிச்சயமா முடியும். நானும் நடிகை ஆகிறதுக்கு முன்னாடி ஒரு சாதாரண பொண்ணுதான். இன்னைக்கு நிறைய புது இயக்குநர்கள் வந்துட்டே இருக்காங்க. அவங்க புது முகங்களாதான் தேடுறாங்க. அதனால இன்றைய சினிமாவில் எல்லாருக்கும் இடம் இருக்கு, யாரும் ஜெயிக்கலாம். சரியான இடத்தில் வாய்ப்புப் தேடணும். கிடைக்கிற வாய்ப்பை முழுமையா பயன்படுத்திக்கணும்.’’

டான்ஸர், சிங்கர், ஆக்ட்ரஸ்... ஆல் இன் ஆல் ரம்யா!

‘‘ஒரு நடிகையிடம் பியூட்டி சீக்ரெட் கேட்காமல் விடக்கூடாதே..?!’’ 

‘‘நான் எதைச் செய்தாலும் இதயத்தில் இருந்து செய்வேன். அதுவே நம்மையும் நம்ம வேலையையும் அழகாக்கும். நான் ஒரு ஃபூடி(திஷீஷீபீவீமீ). மனசு சந்தோஷமா இருக்கும்போது, வயித்துக்கும் வஞ்சம் இல்லாம சாப்பிட்டிடுவேன். அப்புறம் கூடின வெயிட்டை வொர்க்அவுட்ஸ்ல கரைப்பேன்.’’

‘‘ஒரு டிஃபால்ட் கேள்வி. யார் கூட நடிக்க விருப்பம்?’’

‘‘நானும் டிஃபால்ட் பதில் சொல்லிடறேன். அப்படியெல்லாம் குறிப்பிட்டு எந்த சாய்ஸும் இல்லை, யார்கூட நடிச்சாலும் நமக்கும், அவங்களுக்கு கம்ஃபர்டபிளா இருக்கிற அளவுக்கு வேலைபார்க்கிற இடத்தில் ஃப்ரெண்ட்லியா நடந்துக்கணும். பிடிச்ச நடிகர்கள்னா, தமிழில் சூர்யா, தனுஷ்!’’


‘‘லவ்வர் நேம் கேட்கவா, கல்யாணத் தேதி கேட்கவா?’’

‘‘நான் என் புரொஃபஷனைதான் இப்போதைக்கு லவ் பண்றேன்!’’

‘‘ரொம்ப பழைய பதில்...’’

‘‘கல்யாணம்... சீக்கிரமே பண்ணிக்கலாம். வாழ்க்கையில் எனக்கு எப்பவும் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்காது. எனக்கு கணவரா வரப்போறவர், பெண்களை மதிக்கிறவரா இருக்கணும். அவ்ளோதான்!’’

ஹேப்பி டேஸ் ரம்யா! 

-கே.அபிநயா