Published:Updated:

’ட்ரைபாட் தூக்கும் ஹீரோயின் தெரியுமா?’ - ‘காதல் கண் கட்டுதே’ இயக்குனர் சிவராஜ்!

விகடன் விமர்சனக்குழு
’ட்ரைபாட் தூக்கும் ஹீரோயின் தெரியுமா?’ - ‘காதல் கண் கட்டுதே’ இயக்குனர் சிவராஜ்!
’ட்ரைபாட் தூக்கும் ஹீரோயின் தெரியுமா?’ - ‘காதல் கண் கட்டுதே’ இயக்குனர் சிவராஜ்!

'தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்கற ஹீரோ, ஹீரோயினே ட்ரைபாட், கேமராலாம் தூக்கி பார்த்துருக்கீங்களா இதுவரை? இல்ல ஷூட்டிங் முடிச்சுட்டு ஜாலியா வாக் போற ஹீரோவைப் பார்த்திருக்கீங்களா?...இவங்களை எங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துருந்தீங்கனா கண்டிப்பா பார்த்திருக்கலாம். அதுதாங்க எங்க டீமோட பலம்’ பெருமிதமாக பேசுகிறார் ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் இயக்குனர் சிவராஜ். தமிழ் சினிமா உலகிற்கு புத்தம்புது வரவு இவர். 

முழுக்க, முழுக்க புதுமுக நடிகர்களையும், புத்தம்புதிதான ஒரு டீமையும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி ரீலிஸுக்கும் தயாராகிவிட்டார். டிசம்பரில் ‘காதல் கண் கட்டுதே’ ரீலீஸாக உள்ள நிலையில் நண்பர்களின் கூட்டு முயற்சி என்கிற ஒரு ஹேஸ்டேக்கும் இந்தப் படத்திற்கு இருப்பதால் கம்மி பட்ஜெட்டில் காதல் படத்தை எப்படி சாத்தியமாக்கினீர்கள் என்று சிவராஜிடமே கேட்டோம்.

”'கோவை பிலிமேட்ஸ்’என்னும் பெயரில் கோயமுத்தூரில் படிக்கும்போதே கல்லூரி நண்பர்கள் இணைந்து சிறு சிறு குறும்படங்களை இயக்கிக் கொண்டிருந்தோம். படித்து முடித்தபிறகும் சினிமா உலகு எங்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. எங்களுடைய கதைகள், கேமரா கோணம், இசை என்று குறும்படங்களில் ரசித்தவர்கள் பெரிய திரையில் நீங்கள் கால்பதிக்க வேண்டும் என்று எங்களுக்கு ஊக்கம் கொடுத்தாங்க. அதுதான் இதுக்கான மையப்புள்ளி” என்று மூச்சு விட்டுக்கொண்டார்.

‘அதுக்கப்புறம் தயாரிப்பாளர் தேடினப்போ எங்களுடைய நண்பர்களில் ஒருவனே தயாரிப்பை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். ஆனாலும், இந்த யூனிட்டில் வேலை பார்த்த நாங்க ஒவ்வொருத்தரும் இதுக்காக உழைச்சோம். போஸ்ட் புரொடக்‌ஷன், ட்ரெய்லர் வேலைகளுக்கு மான்டேஜ் மீடியா புரொடக்‌ஷன் இருந்தாலும், ஷூட்டிங், ஃபுட், பர்மிஷன் மாதிரியான செலவுகளுக்கு நண்பர்களே வேலை பார்த்து சம்பாதிச்ச பணத்தைத்தான் உபயோகிச்சுருக்கோம்’ நட்புகளின் பேருதவி கொடுத்த மகிழ்ச்சி சிவாவின் கண்களிலேயே மிளிர்கிறது.

'நண்பர்களை வச்சு சமாளிக்கறது ரொம்ப கஷ்டமான விஷயம் பாஸ். ஒருநாள் ஷூட்டிங் அப்போ, அந்த ஹோட்டலில் ஷூட் பண்ண ஒன் டே மட்டும்தான் பர்மிஷன். ஆனால், அன்னைக்குனு பார்த்துதான் இவங்க எல்லார்க்குள்ளையும் தூங்கிகிட்டு இருக்கற பர்பெக்‌ஷனிஸ்ட் வெளில வரணும்? ஆளாளுக்கு ‘அதை அப்படி எடுத்துருக்கலாம்...அந்த சீனை இப்படி ஷூட் பண்ணியிருக்கலாம். கேமரா ஆங்கிள் மாத்தியிருக்கலாம்’னு ஐடியா மணிகளா மாறிட்டாங்க. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்துட்டு ஒரு கட்டத்தில், ‘அடேய் அப்ரசண்டிகளா...இன்னைக்கு ஒருநாளைக்குள்ள இங்க ஷூட் முடிச்சாகணும்...படுத்துறீங்களேடா’னு வடிவேலு மாதிரி கத்தினதும்தான் அடங்குனாங்க. வால் பசங்க..’ நண்பர்களை கலாய்த்து ஜாலியாகிறார். 

‘ஹீரோ கே.ஜி, ஹீரோயின் அதுல்யா ரெண்டு பேருமே எங்களோட நண்பர்கள்தான். ரொம்ப நல்ல திறமைசாலிங்க. ஆனா, கொஞ்சம் வாலுங்களும்தான். அதே நேரம் டெடிகேஷன், ஹெல்ப்பிங் மைண்ட் கொண்டவங்க. நண்பர்களோட கூட்டு முயற்சிங்கறதால ஒவ்வொருத்தரும் பந்தாவெல்லாம் காட்டாம உழைச்சுருக்காங்க. அதே நேரம் ஒரு ஹை பட்ஜெட் படம் எப்படி இருக்குமோ அதைவிட குவாலிட்டி அதிகமா இருக்கணும்னு கேமரா, இசை, பாட்டு, ட்ரெய்லர்னு எல்லாத்துக்கும் பார்த்து, பார்த்து உழைப்பை கொட்டியிருக்கோம். ஒரு அழகான, வாழ்க்கையோட போக்கில் ட்ராவல் பண்ற காதல் கதையை, நட்புகளோட உதவியோட திரைக்கு கொண்டுவரேன். பார்த்துட்டு சொல்லுங்க...”காதல் கண் கட்டுதே” உங்களுக்கும் பிடிக்கும் கண்டிப்பா’ மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் சொல்லி முடிக்கிறார் சிவராஜ். 

-பா.விஜயலட்சுமி