Published:Updated:

'மேடி - விஜய் சேதுபதி ரெண்டு பேரும் நரகாசுரன்கள் மாதிரி தெரிஞ்சாங்க!' - விக்ரம் வேதா விவேக் பிரசன்னா

தார்மிக் லீ
'மேடி - விஜய் சேதுபதி ரெண்டு பேரும் நரகாசுரன்கள் மாதிரி தெரிஞ்சாங்க!' - விக்ரம் வேதா விவேக் பிரசன்னா
'மேடி - விஜய் சேதுபதி ரெண்டு பேரும் நரகாசுரன்கள் மாதிரி தெரிஞ்சாங்க!' - விக்ரம் வேதா விவேக் பிரசன்னா

குறும்படத்தில் தன் திரைப் பயணத்தைத் தொடங்கி, தற்பொழுது திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் 'விக்ரம் வேதா' படத்தில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருக்கும் விவேக் பிரசன்னாவுடன் ஒரு ஜாலி கேலி பேட்டி!

''உங்களைப் பத்தி ஒரு இன்ட்ரோ?''

''எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் பக்கத்துல சின்னனூர்னு ஒரு கிராமம். ஸ்கூலிங் அங்கே முடிச்சிட்டு காலேஜ் படிக்க சென்னைப் பக்கம் வந்துட்டேன். எனக்கு மீடியா ரொம்ப பிடிக்கும்ங்கிறதால விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். ஆரம்ப காலத்துல ஒளிப்பதிவு மேலதான் எனக்கு ஈர்ப்பு அதிகமா இருந்துச்சு. அப்புறம் சித்தார்த் ராமசாமிகிட்ட ஒரு மூணு வருஷம் ஒர்க் பண்ணேன். 'அரவாண்', 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை'னு சில படங்கள்ல வேலை பார்த்துருக்கேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் வெளியில வந்து முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்போ என் நண்பர் ரத்ன குமார் ஒரு குறும்படத்தோட ஸ்க்ரிப்ட்டை எனக்கு அனுப்பி, ' அதுல ஒரு ரோல் நீங்கதான் பண்ணணும்'னு சொன்னார். ஏற்கெனவே நான் செட்ல நடந்துக்கிற விதத்தை பார்த்து அவருக்கு என்னை நடிக்க வைக்க தோணுச்சாம். ஒளிப்பாதிவாளரா சினிமாவுக்குள்ள வரலாம்னு நெனைச்சேன். ஆனா ஒரு மேஜிக் நடந்து நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.''  

''குறும்படம் டு முழுநீளப்படம் - பயணம் எப்படி?'

''நான் முதல் குறும்படத்துல நடிச்சதுக்கு அப்புறம் எனக்கு ஷார்ட் ஃபிலிம் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஆனா, நடிக்கலாமா ஒளிப்பதிவாளராவே ஆயிடலாமானு எனக்குள்ள ஒரே யோசனை. 'சரி, ஆனது ஆகட்டும். நடிக்கலாம்'னு முடிவு பண்ணி ரத்னகுமார்னு ஒருத்தரோட குறும்படத்துல நடிச்சேன். அதுல என் நடிப்பை பார்த்த விஜய் சேதுபதி, 'அந்தப் பையனோட கேமராமேன் ஆசையை மூட்டைக் கட்டி வைக்க சொல்லிட்டு நடிக்க சொல்லு, நல்லா வருவான்'னு ரத்னகுமார்கிட்ட சொல்லியிருக்கார். அந்த வார்த்தைகள் பூஸ்ட் மாதிரி இருக்க, நிறைய குறும்படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் கார்த்திக் சுப்புராஜோட பென்ச் டாக்கீஸ் ப்ரொடக்‌ஷன்ல நான் நடிச்ச ஷார்ட் ஃபிலிம் வந்துச்சு. அங்க இருந்து அப்படியே இறைவி, 144, மாநகரம், சேதுபதினு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சது. 

''விஜய் சேதுபதிக்கும் உங்களுக்குமான நட்பு எப்படி?''

''சேது அண்ணாகிட்ட இருக்க பெரிய ப்ளஸ்சே, தனக்குத் தெரியுற விஷயத்தை எல்லாருக்குமே சொல்லித் தருவார். முதல் நாள்ல இருந்தே எனக்கு நிறைய அறிவுரைகள் சொன்னார். அறிவுரைகள் மட்டுமில்ல, தத்துவங்களும் நிறைய சொல்லுவார். அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது, 'We Are Package Of Mistakes' அப்படிங்கிறதுதான். திடீர்னு ரோட்டோரமா போற தாத்தாவை கூப்பிட்டு வச்சு, 'உங்க வாழ்க்கையை நான் வாழணும்னு ஆசையா இருக்கு தாத்தா'னு சொல்லுவார். இந்த இயல்புதான் அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். எனக்கு 'விக்ரம் வேதா' வாய்ப்பும் சேது அண்ணா மூலமாதான் கிடைச்சது. நான் 'சேதுபதி' படத்துல பார்த்த விஜய் சேதுபதிக்கும், 'விக்ரம் வேதா' படத்துல பார்த்த விஜய் சேதுபதிக்கும் பிரமிச்சுப் போற அளவுக்கு மாற்றங்கள் தெரியுது.''

''விக்ரம் வேதா படத்துல விஜய் சேதுபதி - மேடி கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது?''

''நான் மேடி சாரோட பெரிய ஃபேன், என்னோட பெர்சனல் வாழ்க்கையில சேது அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். இவங்க ரெண்டு பேரும் நடிக்கிற படத்துல நானும் இருக்கேன்னா என் சந்தோஷத்தை கேட்கவே வேணாமே! அவங்க ரெண்டு பேருக்கும் இருக்குற அந்த மாஸை தியேட்டர்ல மட்டுமில்ல, செட்லயும் ரசிச்சேன். அவங்க ரெண்டு பேரும் கேமரா முன்னால நடிக்கும்போது ரெண்டு நரகாசுரன்கள் மோதிக்கிற மாதிரி இருந்தது.  

''வீட்டுல 'விக்ரம் வேதா' பார்த்துட்டு என்ன சொன்னாங்க?''

''முன்னாடி பொருளாதாரச் சிக்கல்கள் நிறைய இருந்தது. அப்போ எல்லாம் என்னைவிட தைரியமா இருந்தது என் மனைவிதான். இந்தப் படம் பார்த்துட்டுத்தான் 'இவர் பெரிய நடிகனாயிட்டார்'னு நம்ப ஆரம்பிச்சிருக்காங்க. போதாக் குறைக்கு விஜய் சேதுபதி அண்ணன் வேற, 'உன் புருஷன் பிரிச்சு மேய்ஞ்சுட்டான் பாத்தியா?'னு கேட்க இவங்களுக்கு டபுள் சந்தோஷம். பேர் சொல்ற மாதிரி இன்னும் நிறைய ரோல்கள்ல நடிச்சு இவங்களை இன்னும் ஹேப்பியா வச்சுக்கணும்' என நெகிழ்கிறார் விவேக் பிரசன்னா.