Published:Updated:

``எல்லா இயக்குநர்களும் நல்லா பேசுறாங்க; ஆனா, வாய்ப்புதான் தரமாட்டேங்கிறாங்க!"- `மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி

வே.கிருஷ்ணவேணி

"திறமையான நடிகன்னு பெயரை வெச்சுட்டு என்ன பண்றது?! அதை வெளிக்காட்ட வாய்ப்புகள் வரணும்ல. இந்தக் கஷ்டத்துக்கு வழக்கமான சினிமா வாய்ப்புகளையே பண்ணிடலாம்னு தோணுது."

`மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி
`மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி

`வெண்ணிலா கபடி குழு', `களவாணி' போன்ற படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த ஆண்டனிக்கு, `மேற்குத் தொடர்ச்சி மலை' படம் மிகப்பெரும் அங்கீகாரத்தைக் கொடுத்ததோடு, விருதுகளையும் தந்தது. படம் ரிலீஸாகி எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை ஒரு படத்தில்கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. `அடுத்து என்ன பண்றீங்க?' என்கிற கேள்வியை ஆண்டனியிடம் கேட்டால், சிறிது மௌனத்திற்குப் பிறகு வார்த்தைகள் வருகிறது.

``எனக்கு சொந்த ஊர், திண்டுக்கல். எங்க ஊர்க்காரரான தெனாலி அண்ணனைப் பார்த்துத்தான், நானும் சென்னைக்கு வந்தேன். அவரைச் சுற்றி எப்போவும் இருபது பேர் இருப்பாங்க. நாமும் சினிமாவுக்கு வந்தா என்னைச் சுற்றியும் பத்துப் பேர் இருப்பாங்கன்னு நினைச்சு, ஆசைப்பட்டு சினிமாவுக்குள் வந்தேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது. பிறகு, எப்படியோ சமாளிச்சுட்டேன்.'' என்றவர், நாம் கேட்ட கேள்விக்கு வருகிறார்.

``கமர்ஷியல் படங்களில் நடிச்சிருந்தா, நமக்கு வாய்ப்புக் கொடுத்து இன்னும் பாராட்டியிருப்பாங்க. `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்குப் பிறகு எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை. அந்த மாதிரி ஒரு சப்ஜெட்டை ஒருவர் எடுக்கணும், அவர் கண்ணில் நான் படணும், அந்தக் கதைக்கு நான் சரிபட்டு வரணும். இத்தனையும் நடந்தாதான் எனக்கான வாய்ப்பு கிடைக்கும். எந்த இயக்குநரிடம் போய் வாய்ப்பு கேட்டாலும், நல்லா ரெஸ்பான்ஸ் பண்றாங்க. ஆனா, வாய்ப்புதான் கொடுக்கமாட்டேங்கிறாங்க. நானும் வாய்ப்புக்காக பல ஆபீஸ் படியேறிட்டுதான் இருக்கேன். எனக்கு என்ன ரோல் கொடுக்கலாம்னு அவங்களுக்கே தெரியல. இதையெல்லாம் தாண்டி முத்தாய்ப்பாய் ஒரு படத்தில் சின்ன ரோல் கிடைச்சது. இப்போதைக்கு அது வேண்டாம்னு விட்டுட்டேன். நல்ல வாய்ப்பு வரும்ங்கிற நம்பிக்கையிலதான் என் வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு." என்றவர், தன் பழைய நினைவுகளை அசைபோடுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆண்டனி
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆண்டனி

``2004- ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். `நேபாளி' எனக்கு முதல் படம். `வெண்ணிலா கபடி குழு', `களவாணி' படங்களில் நடிச்ச பிறகுதான் என் முகம் வெளியே தெரிய ஆரம்பிச்சது. அதற்கு முன்பும் சரி, பிறகும் சரி... பிரபலமாகாத படங்களில் நடிச்சப்போகூட ரொம்ப சந்தோஷமாக, திருப்தியா இருந்தேன்.

முக்கியமா, `களவாணி'யில நடிச்ச பிறகு வாய்ப்புக்காக நிறைய போன் கால்ஸ் வரும். `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்துக்குப் பிறகும் அப்படி நடக்கும்னு நினைச்சேன். படம் வெளியான புதிதில் சில வாய்ப்புகள் வந்தன. ஆனா, எல்லாமே என் எண்ணத்துக்கு நேரெதிரா இருந்ததால, மறுத்துட்டேன். இந்தப் படத்துல நடிச்ச பிறகு, என்னை எப்படி ஜட்ஜ் பண்றதுனு தெரியல. ஹீரோவா வெச்சுப் பண்றவங்க என்னை ஹீரோவா வைக்கும்போது, ஃபைட், டான்ஸ்னு பல விஷயங்களை எதிர்பார்ப்பாங்க. இப்போதைக்கு அப்படி வாய்ப்புகள் வந்தாலும் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

திறமையான நடிகன்னு பெயரை வெச்சுட்டு என்ன பண்றது?! அதை வெளிக்காட்ட வாய்ப்புகள் வரணும்ல. இந்தக் கஷ்டத்துக்கு வழக்கமான சினிமா வாய்ப்புகளையே பண்ணிடலாம்னு தோணுது. நடிக்காம இருந்திருந்தா, வேற வேலையாவது செஞ்சிருக்கலாம். நடிகர் ஆகிட்டதுனால, திடீர்னு இந்த ஃபீல்டுல இருந்து விலகவும் முடியல. `ஜெயிச்சுட்டோம்'னு அப்படியே விட்டுட்டா, அடுத்த வாய்ப்பும் வராது இல்லையா... அதனால, என்னை நிரூபிக்க எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். அசிங்கப்படாம, கேவலப்படாம அடுத்தடுத்து எனக்கு நல்ல படங்களில் நடிக்கிற வாய்ப்புகள் வரணும். அதுதான் என் ஆசை.'' என்பவர், தன் குடும்பத்தினரைப் பற்றிப் பகிர்ந்தார்.

``எல்லா இயக்குநர்களும் நல்லா பேசுறாங்க; ஆனா, வாய்ப்புதான் தரமாட்டேங்கிறாங்க!"- `மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி

``மனைவி, ஞானவிண்ணரசி. இரண்டாம் வகுப்பு செல்லவிருக்கும் மகள், கவிநிலவு. இரண்டு வயதாகும் மகன், அகரமுதல்வன். நாங்க ஒரு அன்பான குடும்பம். நான் கிறிஸ்தவன். ஆனா, என் குழந்தைகளுக்கு மத அடையாளம் வேண்டாம்னுதான் தமிழ்ப் பெயர்களை வெச்சேன். மகளுக்கு இப்போ ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். அதுக்கு என்கிட்ட பணமும் இல்லை. எப்போவும்போல, கடைசி நேரத்துல கைக்கு வரும்." எனச் சிரிப்பவரிடம், ``இயக்குநர் லெனின் பாரதியிடம் தொடர்பில் இருக்கிறீர்களா?" எனக் கேட்டேன்.

``நிச்சயமா! எதைப்பற்றியும் கவலைப்படாத ஆள் நான். ஒழுக்க ரீதியிலும் பின்தங்கிய ஆளா இருந்தேன். அவருடன் வொர்க் பண்ண பிறகுதான் எனக்குள் ஒரு தெளிவு கிடைச்சது. லெனின் பாரதி மூலமாதான், ஒருத்தர்கிட்ட எப்படிப் பழகணும்னு கத்துக்கிட்டேன். லெனின் பாரதி எனக்குக் கொடுத்த வாய்ப்பு ரொம்பப் பெருசு. என்னை மாதிரி கஷ்டப்படுற இன்னொருத்தருக்குத்தானே அடுத்த வாய்ப்பைக் கொடுப்பார். அதனால, மறுபடியும் அவர்கிட்ட போய் நான் நிற்கல. மொத்தத்துல, நல்லகண்ணு ஐயா வீட்டை இடித்து, தூக்கி ஓரமா வெச்ச மாதிரி இருக்கு, சினிமாவுல என் நிலைமை!" என்கிறார், ஆண்டனி.