Published:Updated:

''என் வாழ்க்கைல நான் எடுத்த நல்ல முடிவு அதான்..!'' - ப்ரீத்தா ஹரி

ஆ.சாந்தி கணேஷ்

''புகுந்த வீட்டின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றபடி நம்மளை மாத்திக்கிறதுதான் நல்ல வாழ்க்கைக்கு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட கால தாம்பத்தியத்துக்கு இதுதான் சரியான வழி.''

ப்ரீத்தா - ஹரி
ப்ரீத்தா - ஹரி

நட்சத்திர தம்பதிகளின் மகள், நடிகை என்று மட்டுமே நமக்கெல்லாம் அறிமுகமாகிருக்கிற ப்ரீத்தா, ஹரியின் மனைவி, மூன்று ஆண் குழந்தைகளின் அம்மா என்கிற முகம் மிக மிக அன்பானது. தன் உலகமே தன்னுடைய குடும்பம்தான் என்று வாழ்ந்துகொண்டிருக்கிற ப்ரீத்தா ஹரியிடம், 'தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று கேட்டோம். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

ப்ரீத்தா - ஹரி
ப்ரீத்தா - ஹரி

''அழகான குடும்பம், அன்பான கணவன்னு நான் ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவள்னுதான் சொல்லணுங்க. என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான். அதுல சந்தோஷத்தைத் தவிர, கடவுள் வேற எதையுமே கொடுக்கலைங்க. ''  என்றவர் தொடர்ந்தார். 

கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பையும் வாழ்க்கையையும் கொடுத்து வாங்கணும். 

நிறைய விட்டுக் கொடுக்கிற தன்மை இருந்தா மட்டும்தான் தம்பதியர் ஒரு வீட்டுக்குள்ள பல வருடங்கள் ஒற்றுமையா வாழ முடியும். உங்க கணவர்கிட்டேயோ மனைவிகிட்டேயோ விட்டுக் கொடுக்கிறதுல எந்த ஈகோவும் பார்க்காதீங்க ப்ளீஸ். 

கணவருடன் ப்ரீத்தா
கணவருடன் ப்ரீத்தா

 வேறு வேறு கருத்துகள், வேறு வேறு ரசனைகள். வேற வேற குடும்பங்கள்ல இருந்து வந்தாலும், இனிமே நாம ரெண்டு பேரும் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் ஒண்ணா பயணம் செய்யப்போறவங்க அப்படிங்கிறதை ரெண்டு பேருமே மனசுல வைச்சுக்கோங்க. சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தாலும் பிரியவே கூடாதுங்கிற எண்ணம் வலுவா இருக்கும். 

நம்ம கலாசாரத்துல பெண்கள்தான் கணவர் வீட்டுக்குப் போறோம். கணவர் வீடுங்கிறது வேற மாதிரி இருக்கும். நிச்சயமா நம்ம அம்மா வீடு மாதிரி இருக்காது. பெண்கள் நாம அதுக்கேத்த மாதிரி மாற வேண்டி வரும். அதனால, நம்ம கணவர், அவருடைய குடும்பம், அவர் கூடப் பிறந்தவங்கன்னு புகுந்த வீட்டின் பழக்க வழக்கங்களுக்கு ஏத்தபடி நம்மளை மாத்திக்கிறதுதான் நல்ல வாழ்க்கைக்கு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட கால தாம்பத்தியத்துக்கு இதுதான் சரியான வழி. 

ப்ரீத்தா ஹரியின் குழந்தைகள்
ப்ரீத்தா ஹரியின் குழந்தைகள்

கணவன் - மனைவிக்கு நடுவுல வாக்கு வாதங்கள் வர்றது சகஜம். ஆனா, அதை ரொம்ப காலத்துக்கு மனசுல வைச்சுக்கிட்டு பேசாம இருக்கிறது, முகத்தைக் கோபமாக வைச்சுக்கிட்டு இருக்கிறது வேண்டாம்கிறது என்னோட கருத்து. 

இன்னிக்கு கணவனும் மனைவியும் உட்கார்ந்து பேசிக்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்காங்க. வேகமான உலகம்தான், இருந்தாலும் நேரம் கிடைக்கிறப்போ நீங்களே நேரத்தை உருவாக்கிக்கிட்டு ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனிமையில உட்கார்ந்து பேசுங்க. அதுவரைக்கும் நீங்க பெருசா நினைச்சுக்கிட்டிருந்த பிரச்னை, கோபம்கூட ஒண்ணுமே இல்லைன்னு ஆகிடும்.

கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருங்க. நல்ல நண்பர்களுக்கு இடையில எந்த ஒளிவு மறைவும் இருக்காதில்லையா. அந்த இயல்பே தம்பதிகளை மகிழ்ச்சியா வைச்சுக்கும்.

குழந்தை வளர்ப்புங்கிறது சாதாரணமான விஷயம் கிடையாது. ஒரு குழந்தை நல்லவனா இருந்தா, அதுக்கு பெற்றோரைத்தான் காரணமா இந்த உலகம் சொல்லும். இதுக்கும், கணவன் - மனைவி ஒற்றுமையா இருந்தாகணும். கணவன் - மனைவி எப்படி சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கிறதுக்கு என் வீட்டிலேயே வாழுற உதாரணமா இருக்கிறவங்க என் மாமனாரும் மாமியாரும்தான். அவங்களுக்கு 7 குழந்தைகள். அவங்ககிட்டே இருந்து நான் கத்துக்கிட்ட நல்ல விஷயங்களுக்கு கணக்கே கிடையாது. ஹரி,  நல்ல மனிதர், நல்ல கணவர், நல்ல அப்பாவா இருக்கிறதுக்கு அவங்களோட வளர்ப்புதான் காரணம். இன்னிக்கும் அவங்களுக்கு நடுவுல அந்த அன்பு மாறவே இல்லை. அவங்ககிட்டே இருந்து நான் கத்துக்கிட்டதைத்தான் இங்கே டிப்ஸா சொல்லியிருக்கேன்'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் ப்ரீத்தா ஹரி.