Published:Updated:

''பிக் பாஸ் ஃபைனலுக்கு ஓவியா ஒரு பிளான் வைச்சிருக்காங்க!’’ - பிரியங்கா #BiggBossTamil

கு.ஆனந்தராஜ்
''பிக் பாஸ் ஃபைனலுக்கு  ஓவியா ஒரு பிளான் வைச்சிருக்காங்க!’’ - பிரியங்கா #BiggBossTamil
''பிக் பாஸ் ஃபைனலுக்கு ஓவியா ஒரு பிளான் வைச்சிருக்காங்க!’’ - பிரியங்கா #BiggBossTamil

"ஓவியா ஆர்மியில் நானும் ஒருத்தி. நேற்று ஓவியாவை சந்திச்சுப் பேசினதும், செல்ஃபி எடுத்துகிட்டதும் செம்ம ஹேப்பி. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஃபைனலில் கலந்துக்கிட்டு, ஓவியாவுடன் இன்னும் நிறைய விஷயங்களைப் பேசப்போறேன்" - உற்சாகமாகப் பேசுகிறார், தொகுப்பாளினி பிரியங்கா. விஜய் டிவியின் 'கிங்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சியின் ஆங்கர் பயணத்தை முடித்துவிட்டு, அடுத்தடுத்த பயணத்தில் இருக்கிறார். 

" 'கிங்ஸ் ஆப் காமெடி' ஜூனியர்ஸ் நிகழ்ச்சி, என் ஆங்கரிங் பயணத்தில் ரொம்பவே மறக்க முடியாத அனுபவத்தையும் மனசுக்கு நெருக்கத்தையும் கொடுத்திருக்கு. ஆறு மாசம் அந்தக் குழந்தைகளோடு இருந்தேன். அவங்களும் சொந்த அக்கா மாதிரி என்னை கலாய்ச்சு தீர்த்தாங்க. அவங்க பாசத்தை மறக்கவே முடியாது. ஏற்கெனவே 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் நடுவராக இருந்து என்னைவிட வயசில் பெரியவங்களின் திறமைகளுக்கு மதிப்பிட்டிருக்கேன். ஆனால், குழந்தைகளின் நடிப்புத் திறமையைப் பார்த்ததும், 'நாம சின்ன வயசில் என்ன செஞ்சு கிழிச்சோம்'னு எனக்குள்ளே அடிக்கடி கேள்வி வரும். சின்ன இடைவெளியில் திடீர்னு ஸ்கிரிப்டை மாற்றினாலும் அதைச் சரியா ஸ்டேஜ்ல பெர்ஃபாம் பண்ணிடுவாங்க. 'எப்படி அசால்டா பண்றீங்க?'னு கேட்டால், ஜாலியா சிரிச்சுட்டுப் போயிடுவாங்க. ஒன்பது வருட ஆங்கரிங் பணியில், எந்த நிகழ்ச்சியைப் பற்றியும் என் சோஷியல் மீடியா பேஜ்ல பாராட்டி எழுதினதில்லை. இந்த 'கிங்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சியின் ஃபைனல் ரவுண்டு முடிஞ்சதும், நெகிழ்ச்சியோடு ஒரு போஸ்ட் போட்டேன்" என்கிற பிரியங்கா, தன் ஆங்கர் பயணத்தில் காதல் கணவரின் பங்களிப்புக் குறித்துப் பேசுகிறார். 

"விஜய் டிவிக்கு வந்த பிறகு என் ஆங்கரிங் பயணம் ரொம்பவே வேகமா உயர்ந்துச்சு. 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி எனக்குப் பெரிய மைல்ஸ்டோன். ஒரு கட்டத்தில் சக ஆங்கர்ஸ், பங்கேற்பாளர்கள் என்னைக் கலாய்க்கிறதை எல்லோரும் ரசிச்சாங்க. வடிவேல் சார் மாதிரி நானும் என்னைக் கிண்டல் பண்றதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்க ஆரம்பிச்சேன். எல்லோர் மனசிலும் சீக்கிரமே இடம் பிடிச்சேன். நான் விஜய் டிவியில் சேர்ந்தபோது, பிரவீன்குமார் புரோகிராம் புரொடியூசரா இருந்தார். ஆரம்பத்தில் எலியும் பூனையுமா இருப்போம். அப்புறம் நண்பர்களாகி, காதலர்களாகி, தம்பதியரா மாறினோம். நாங்க ரெண்டு பேரும் எங்களோட வளர்ச்சியில் ஹெல்ப் பண்ணிக்குவோம். என்னோட ப்ளஸ், மைனஸ் விஷயங்களைக் கணவர் ரொம்பவே அன்போடு சொல்லி சரிசெய்வார்" என்கிற பிரியங்கா, நேற்று ஓவியாவைப் பார்த்த அனுபவத்தை உற்சாகமாகச் சொல்கிறார். 

"நான் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் எல்லா சீசனையும் தொடர்ந்து பார்த்திருக்கேன். தமிழில் 'பிக் பாஸ்' ஆரம்பமானதும், ரொம்பவே எதிர்பார்ப்போடு இருந்தேன். பிடிச்ச, பிடிக்காத விஷயங்களை ரொம்பவே வெளிப்படையா சொன்ன ஓவியாவின் செயல்பாடுகள் ரொம்பவே பிடிச்சுப்போய், ஓவியாவின் ஆர்மியானேன். அவங்களுக்கு நிறைய ஓட்டிங் பண்ணினேன். 'தலைவி வாழ்க'னு அவங்களுக்காக போஸ்ட் போட்டுட்டே இருப்பேன். ஓவியா 'பிக் பாஸ்'ல இருந்து வெளியேறினப்போ ரொம்பவே ஃபீல் பண்ணினேன். 

'சன் மியூசிக்' சேனலில் ஆங்கரா இருந்தப்போ, 'வட போச்சே' நிகழ்ச்சி மூலமாக சக ஆங்கரிங் நண்பர்களோடு சேர்ந்து ஓவியாவை கலாய்ச்சிருக்கேன். அப்புறம், ஒரு அவார்டு ஃபங்ஷனில் அவங்களைச் சந்திச்சுப் பேசினேன். நேற்று சென்னை ஓ.எம்.ஆர் ரோட்டில் நடந்த தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆங்கரா கலந்துகிட்டு பேசினேன். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான், 'நிகழ்ச்சியை நீங்க தொகுத்து வழங்கணும்'னு சொன்னாங்க. நேற்றைக்கு சில நிகழ்ச்சிகளில் கமிட் ஆகியிருந்தாலும், 'ஓவியாவுக்காக நிச்சயாமா ஆங்கரிங் பண்றேன்'னு சொன்னேன். நேற்று ஓவியா சாப்பிடுறப்போ, 'வடை இருக்கா... வடை'னு ரொம்பவே க்யூட்டாகச் சொன்னாங்க. 'எவ்ளோ பெரிய மாஸ் ஆகிட்டாங்க. ஆனாலும், ரொம்பவே சிம்பிளா இருக்கிறாங்களே'னு ஆச்சர்யப்பட்டேன். 

நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறிப் பார்த்தால், ரோடு முழுக்க ரசிகர்கள் கூட்டம். நிறைய பசங்க சர்டிஃபிகேட் ஃபைல், பேக்குடன் இருந்தாங்க. 'ஆபீஸ் போகலையா ஜி'னு கேட்டால், 'இன்டர்வியூக்குப் போற வழியில் ஓவியாவைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்'னு சொன்னாங்க. பொண்ணுங்க கூட்டமும் நிறைய இருந்துச்சு. 'பாரேன், இந்தப் பொண்ணு எல்லார் மனசிலும் ஸ்ட்ராங்கா இடம்பிடிச்சிருக்குது'னு பெருமைப்பட்டேன். ஆடியன்ஸ் கேட்ட கேள்விகளுக்கு ஓவியா சூப்பரா பதில் சொல்லி முடிச்சதும், என்னை கட்டிப்பிடிச்சு செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க. அதை ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணி நிறைய லைக்ஸ் வாங்கினேன். 

'என்னால் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல். அதனால் என்ன? இனிமேல் என்னை சினிமாவில் பார்க்கலாம். கண்டிப்பா 'பிக் பாஸ்' ஃபைனலுக்கு வருவேன்னு சொல்லிட்டு,  ஃபைனலுக்குப் பிறகு ரசிகர்களிடம் மனம்விட்டு பேசப்போறேன்'னு சொன்னாங்க. அவங்களோட பிளான் தெரிஞ்சதுலேருந்து நான் செம குஷியா இருக்கேன். இந்த வாரத்துடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடியப்போகுது. நிகழ்ச்சியின் ஃபைனல் நாளில் ரிசல்ட் அறிவிக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஓவியாவை போட்டியாளராக்கி, ஓட்டிங்கை ஸ்டார்ட் பண்ணினாலும் அவங்கதான் வின் பண்ணுவாங்கனு நான் உறுதியா நம்புறேன். அவங்க 'பிக் பாஸ்' வின்னர் என்பதைவிட, மக்கள் எல்லோரின் மனசையும் ஜெயிச்சதுதான் பெரிய விஷயம்" என்று சிரிக்கிறார் பிரியங்கா.