Published:Updated:

’தனுஷ் ஏற்கெனவே 10 படம் இயக்கிருப்பாருங்க!’ - ‘விஜய் டிவி’ தீனா

பா.ஜான்ஸன்
’தனுஷ் ஏற்கெனவே 10 படம் இயக்கிருப்பாருங்க!’ - ‘விஜய் டிவி’ தீனா
’தனுஷ் ஏற்கெனவே 10 படம் இயக்கிருப்பாருங்க!’ - ‘விஜய் டிவி’ தீனா

சரத்துடன் சேர்ந்து விஜய் டிவியில் சரவெடி காமெடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த தீனா இப்போது தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' மூலம் பெரிய திரையில் அறிமுகமாக இருக்கிறார். சின்னத்திரை டூ சினிமா வாய்ப்பு பயணத்தைப் பற்றி அவரிடம் பேசியதிலிருந்து...

என் சொந்த ஊர் திருவாரூர், ஸ்கூல் வரைக்கும் அங்க தான். காலேஜ் படிச்சது மாயவரம். நிறைய சினிமாகாரங்க மாதிரி நானும் ஒரு என்ஜினியரிங் ஆள் தான். வீட்ல அதைப் படிக்க சொன்னாங்க, அதனால படிச்சேன். ஆனா ஆர்வம் முழுக்க மீடியா மேல தான். அந்த ஆர்வம் 3வது படிக்கும் போதே வந்திருச்சு, அப்போவே சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி பேசுவேன், மிமிக்ரி பண்ணுவேன். வீட்ல மீடியா போறேன்னு சொன்னேன்.  விடல. சரி என்ஜினியரிங் படிப்புக்கான வேலைய பார்த்துகிட்டே மீடியா வேலைய தேடினேன். விஜய் டிவில ‘அது இது எது’ல அசிஸ்டெண்டா சேர்ந்தேன். அங்க இருந்து ‘கலக்கப் போவது யாரு’ வந்தப்போ, ஆடிஷன்ல கலந்துகிட்டேன், பெர்ஃபாமரா மாறினதுக்குப் பிறகு கூடவே ஸ்க்ரிப்ட் ரைட்டராவும் ஆனேன். ஒரே நேரத்தில் பெர்ஃபாமராவும், ஸ்க்ரிப்ட் ரைட்டராவும் இருந்ததுல நிறைய கத்துக்க முடிஞ்சது. அப்படி ஆரம்பிச்சது என்னோட இந்தப் பயணம்.

டிவில வர ஆரம்பிச்சதுக்குப் பிறகு வீட்ல என்ன சொன்னாங்க?

ஒரு நாலு எபிசோட் வரைக்கும் திட்டீட்டு தான் இருந்தாங்க. பிறகு அக்கம் பக்கத்தில் இருக்கவங்க வந்து உங்க பையன் நல்லா பண்றான்னு சொன்னதும் சந்தோஷமாகிடுவாங்க. அதுக்குப் பிறகு எது பண்ணாலும் ரசிப்பாங்க.

நிறைய ஷோ பண்ணியிருக்கீங்க, அதில் உங்களால மறக்க முடியாததுன்னா எதை சொல்வீங்க?

ஒரு முறை செமிஃபைலன்ஸ்ல எலிமினேட் ஆகிட்டேன். அப்போ வைல்ட் கார்ட் ரவுண்ட் வந்தது. என் கூடவே சரத்தும் எலிமினேட் ஆனதும் அவனுக்கும் சேர்த்து ஸ்க்ரிப்ட் வொர்க் பண்ண வேண்டி இருந்தது. சின்னச் சின்ன ஸ்க்ரிப்ட் வொர்க் பண்ணிட்டு, எனக்கு சரியா ரெடி பண்ணல. கொஞ்சம் பண்ணி வெச்சிருந்ததும் ரொம்ப பொதுவானதா இருந்தது. எல்லாரும் பயன்படுத்துற மாதிரி இருந்ததால முன்னால வந்தவங்க யூஸ் பண்ணிட்டாங்க. எந்த கான்செப்ட்டும் இல்லாம ஆன் த ஸ்பாட்ல, கவுண்டர்ஸ் கொடுத்தே பேசினேன். ஆனா, அந்த பெர்ஃபாமன்ஸுக்கு பயங்கரமான பாராட்டுகள் கிடைச்சது. அதுக்கு  முக்கியக் காரணமா இருந்தது, என்னோட ஷோ டைரக்டர் தாம்சன் சார் தான். பிறகு என்னுடைய நண்பர்கள். நான் பொதுவா அதிகமா பேசவே மாட்டேன். ஸ்டேஜ்லதான் அவ்வளோ பேசுவேன். அதுக்கு என்னுடைய ஃப்ரெண்ட்ஸும் காரணம். அவங்க ஜாலியா என்னைய கலாய்ப்பாங்க, கவுண்டர்ஸ் கொடுப்பாங்கனு செம ஜாலி டீம். ஃப்ரெண்ட்ஸ் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

பவர் பாண்டி வாய்ப்பு எப்படி வந்தது?

ஒரு நாள் வொண்டர் பார் ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தது. ஆடிஷன் வர சொன்னாங்க. நான் நடிச்சுக் காட்டினதப் பார்த்து தனுஷ் சாருக்குப் பிடிச்சுப் போச்சு. என்னை செலக்ட் பண்ணாங்க. அதுக்கு முன்னாலயே சில பட வாய்ப்புகள் வந்தது. ஆனா, என்னோட என்ட்ரி தனுஷ் சார் இயக்கும் படம்ங்கறதுல எனக்குப் பெரிய சந்தோஷம். ஏன்னா நான் அவருடைய பெரிய ஃபேன். எனக்கும் அவருக்கும் காம்பினேஷன் சீன் எல்லாம் இருந்தது. ஒரு ரசிகனா இருந்துகிட்டு அவர் கூடவே நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

டிவிக்கும் சினிமாவுக்குமான வித்யாசத்தை எப்படி உணர்றீங்க?

டிவில ஒரு முறை ஸ்டேஜ் ஏறிட்டோம்னா தொடர்ந்து பெர்ஃபார்ம் பண்ணிட்டே இருக்கணும், கட்டே கிடையாது. எல்லாரையும் சிரிக்க வெச்சுட்டு தான் கீழ இறங்கணும். ஆனா, சினிமால அப்படிக் கிடையாது சீன் பை சீன் தான். ஆனா, நடிப்பைப் பொறுத்தவரை நாம பெட்டர் பண்ணி நடிக்கணும். சின்ன தப்பு பண்ணாலும் மறுபடி எடுக்க வேண்டி இருக்கும். இந்தப் படம் மூலமா நடிப்பு கத்துகிட்டேன். தனுஷ் சார் நிறைய விஷயம் சொல்லித்தந்தார். அவர நடிகரா நாம பாத்திருப்போம். ஆனா, ஒரு இயக்குநரா, பல விஷயங்களைக் கண்ட்ரோல் பண்றார். எல்லா டெக்னிகல் விஷயங்களும் தெரிஞ்சு வெச்சிருக்கார். அவரைப் பாத்தா முதல் படம் இயக்கறவர் மாதிரியே தெரியல, நமக்குத் தெரியாம ஒரு பத்து படம் இயக்கிட்டு வந்திருப்பார் போல. அப்படித்தான்  இருந்தது. அவ்வளவு வேகமா எல்லா வேலைகளையும் செஞ்சார், அதே சமயத்தில் ஒவ்வொரு சீனும் அவருக்குத் திருப்தி தந்ததுக்குப் பிறகு தான் ஓகேவே சொல்வார். அது நாங்க நடிக்கும் ஷாட்டா இருந்தாலும் சரி, அவர் நடிக்கும் ஷாட்டா இருந்தாலும் சரி. எனக்கு கூட வசனங்கள் எப்படிப் பேசணும்னு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக் கொடுத்து இப்படித் தான் நடிக்கணும்னு நடிச்சுக் காமிச்சார். 

முதல் சினிமாங்கறதால பதற்றம் இருந்ததா?

நிறைய பயம் தான் இருந்தது. எப்படியும் நடிச்சிடலாம்னு ஒரு தைரியம் இருந்தது. ஆனா, எதாவது தப்பு பண்ணிடுவோமோனு சின்னதா பயமும் இருந்தது. ஆனா, கடைசி வரை எந்தத் தப்பும் பண்ணல, திட்டும் வாங்கல. ஆனா, முதல் நாள் ஷூட்டிங் போனப்போ செம கூட்டம். என்னோட சீன் நடிக்கணும்னு நான் உள்ள நுழைஞ்சேன். காஸ்ட்யூமெல்லாம் போட்டுட்டு வந்ததும் அந்த ஊர்காரங்க மாதிரியே இருந்ததும் என்னைய செக்யூரிட்டி உள்ள போக விடமாட்டேன்னுட்டாங்க. நான் ஆர்டிஸ்ட் தான்னு தெரிஞ்ச பின்னால விட்டாங்க. ஷாட் முடிச்சு வர்றப்போ என்னைத் தடுத்த செக்யூரிட்டி கேட்டார், 'நீங்க தீனா தான?' பதிலுக்கு நான், 'என்ன தள்ளிவுட்டதே நீ தான?'னு கவுண்டர் குடுத்துட்டு வந்துட்டேன். 

இயக்குநர் தனுஷ், உங்க நடிப்ப பார்த்திட்டு என்ன சொன்னார்?

என்னோட போர்ஷன் டப்பிங் பண்ணதுக்குப் பிறகு பார்த்திட்டு, இந்தப் பையன் நல்லா பண்ணியிருக்கான்னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்கார். சார் நீ நல்லா பண்ணியிருக்கேன்னு சொல்லியிருக்கார்னு டீம்ல நிறைய பேர் சொன்னாங்க. என்ன ஒரே வருத்தம். தனுஷ் சாருடைய ஃபேனா இருந்து, அவர் கூடவே நடிச்சிட்டேன். ஆனா, அவரோட ஒரு போட்டோ எடுத்துக்க சான்ஸ் கிடைக்கல. சீக்கரமா எடுத்துக்க வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன். 

அடுத்து என்ன விஷயங்கள் பண்ண விருப்பம்?

நல்ல காமெடியனா பெயர் எடுக்கணும்ங்கறது தான் ஆசை. பிறகு இயக்குநர் ஆகணும்ங்கறது இன்னொரு பெரிய ஆசை. ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுக்கணும். நான் பேசிக்கா ஒரு அத்லெட். அது சம்பந்தமான ஒரு படம் இயக்கணும்னு ஆசை.

- பா.ஜான்ஸன்