Published:Updated:

கமல்ஹாசனாகவே இருந்தாலும் சினிமாவில் முத்தம் கொடுத்துவிடமுடியாது…இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டர் தெரியுமா?

ஆர்யா - டாப்ஸி

புத்தம் புது காலை தொடரின் இன்றைய பகுதி சினிமாத்துறையில் புதிதாக உருவாகியிருக்கும் இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டர் வேலை குறித்தும், இந்தியாவின் முதல் இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டராகப் பணியாற்றும் ஆஸ்தா கண்ணா பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

கமல்ஹாசனாகவே இருந்தாலும் சினிமாவில் முத்தம் கொடுத்துவிடமுடியாது…இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டர் தெரியுமா?

புத்தம் புது காலை தொடரின் இன்றைய பகுதி சினிமாத்துறையில் புதிதாக உருவாகியிருக்கும் இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டர் வேலை குறித்தும், இந்தியாவின் முதல் இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டராகப் பணியாற்றும் ஆஸ்தா கண்ணா பற்றியும் விரிவாகப் பேசுகிறது.

Published:Updated:
ஆர்யா - டாப்ஸி
மற்றவர் மனதை புரிந்து கொள்வதும் ஒருவகையில் நெருக்கம்தான்!
தரனா பர்க் (மீ டூ இயக்கம்)

வாடகைத் தாய் சப்ஜெக்ட்டுகளை சுலபமாக எடுத்துவிடும் இந்தியத் திரையுலகத்துக்கு முத்தக் காட்சிகளை எடுப்பது இன்னும் பிரச்னைக்குரிய வேலையாகத்தான் இருக்கிறது.

'புன்னகை மன்னன்’ படம் வந்தபோது கமல்-ரேகா உதட்டு முத்தக் காட்சி ஒரு பேசு பொருளானது ஞாபகம் இருக்கலாம். உண்மையிலேயே அந்த முத்தம் பற்றி முன்கூட்டியே ரேகாவிடம் சொல்லப்படாமல்தான் காட்சி படம்பிடிக்கப்பட்டது என்றும், இல்லை என்றும் பல கதைகள் உண்டு. இதுபற்றி ரேகாவே சினிமா விகடனிலும் பேசியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாகவே கமல்ஹாசன் படம் என்றாலே அதில் சில நெருக்கமான காட்சிகளும், ஓரிரு முத்தக் காட்சிகளும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்று ஒரு கருத்து எப்போதும் இருக்கும். கூடவே அப்படிப்பட்ட காட்சிகளில் எப்படி அவர் நடிக்கிறார் என்ற கேள்விகளும் சுற்றிக் கொண்டேதான் இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருமுறை இந்தக் கேள்வி கமலுடன் நடித்த நடிகை ராதிகா சரத்குமார் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "கூட ஒரு கழுதை நடிச்சாக்கூட, கமல்ஹாசனால் ரொமான்ஸ் பண்ண முடியும்... ஏன்னா அவருக்கு ரொமான்ஸ் வெறும் நடிப்பு மட்டும்தான். பார்க்குற நமக்கு அது ரொமான்ஸாத் தெரிஞ்சாலும், படப்பிடிப்புல உண்மையான ரொமான்ஸ் எதுவும் இருக்காது" என்று பதிலளித்தார்.

கமல்ஹாசன் - ரேகா
கமல்ஹாசன் - ரேகா

கமல்ஹாசன் போன்ற பிறவி நடிகர்களால் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்த பின், "not getting carried away" என, எந்தவித பற்றுதலும் இல்லாமல் இருக்க முடியும் என்றாலும், மற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கு இது சாத்தியம் தானா? இதுபோன்ற நெருக்கமான படக்காட்சிகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ அல்ல.. ஹாலிவுட்டிலேயே இந்தப் பிரச்னைகள் உண்டு.

1992-ம் ஆண்டு வெளிவந்து உலகெங்கும் சக்கைப் போடு போட்ட ஹாலிவுட் திரைப்படமான ‘பேஸிக் இன்ஸ்டிங்க்ட்’ படத்தையும், அதன் கதாநாயகி ஷேரன் ஸ்டோனையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தப் படத்தின் மூலம், ஆஸ்கர், கோல்டன் கிளோப் உள்ளிட்ட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 1993-ம் ஆண்டில் எம் டிவியின், ‘உலகின் மிகவும் விரும்பத்தக்க பெண்’ விருதைப் பெற்றவர் ஷேரன் ஸ்டோன்.

அந்த ஷேரன் ஸ்டோனின் வயது இப்போது 63. ‘The Beauty of Living Twice’ என்ற புத்தகம் ஒன்றை சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள இவர், அதில் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’ படத்தில் தான் கால் மேல் கால் போட்டபடி எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், தனது உள்ளாடையை அதன் வெண்மையான நிறத்தின் ரிஃப்ளெக்‌ஷன் காரணமாக இயக்குனர் அகற்றச் சொன்னதும், பின்னர் அந்தக் காட்சியை திரைப்படத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து பார்த்தபோதுதான், தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது என்றும் எழுதியிருந்தார்.

இந்தத் தகவலை முற்றிலும் மறுக்கும் இயக்குநர் பால் வெர்ஹோவன், "ஷேரன் ஸ்டோனின் நினைவுத்திறனை சோதிக்க வேண்டும். காத்ரீன் ட்ரமல் என்ற அவரது கதாப்பாத்திரத்தின் தன்மைக்கேற்ப, அனைத்தையும் புரிந்துகொண்டுதான் அவர் அவ்வாறு நடித்தார். இதில் நாங்கள் எதுவும் ஏமாற்றவில்லை" என்று அதை மறுத்திருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களில் இம்மாதிரியான nudity குறித்த பிரச்னைகள் எழும் அதே சமயத்தில் பாலிவுட், கோலிவுட் உலகம் வேறு மாதிரியான பிரச்னைகளை முன் வைக்கிறது.

ஷேரன் ஸ்டோன்
ஷேரன் ஸ்டோன்

எப்போதும் தாங்கள் உடுத்தும் உடைகளைக் காட்டிலும், உடன் நடிக்கும் நடிகர்களுடனான நெருக்கமான காட்சிகளே தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் இந்திய கதாநாயகிகள்.

‘தயாவன்’( ‘நாயகன்’ ரீமேக்) திரைப்படத்தில், வினோத் கண்ணாவுடனான முத்தக்காட்சிக்கு இன்றும் வருத்தம் தெரிவிக்கிறார் மாதுரி தீட்சித். ‘அசார்’ படப்பாடலில் இடம்பெற்ற நீண்ட முத்தக்காட்சிக்கு தலைகுனிகிறார் நர்கீஸ் ஃபக்ரி. நானா படேகரின் மீது பாலியல் தொல்லை புகாரை எழுப்பிய தனுஸ்ரீ தத்தாதான் இந்தியாவில் #metoo இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

முன்னர் இது போன்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவே ஹீரோயினுடன் அவர் அம்மாக்கள் பாதுகாப்புக்கு போவது வழக்கமாய் இருந்தது. காலப்போக்கில் அது குறைந்து போக, இப்போது இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது ஆரம்பித்திருக்கிறது.

அதிலும் 2017-ல் #MeToo பிரச்சினைகள் உச்சம் பெற ஆரம்பிக்க, இதைத் தவிர்ப்பதற்காகவே, நெட் ஃபிளிக்ஸ் 2018-ல் தாங்கள் எடுத்த ஒரு தொடருக்கு ‘இன்ட்டிமசி கோ ஆர்டினேட்டர்’ என்ற நெருக்கக் காட்சிகள் ஒருங்கிணைப்பாளர் என்று புதிய பணியாளரை நியமிப்பதாக அறிவித்தது.

என்னது... 'இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டர்' என்று ஒரு வேலையா, இதற்கெல்லாம் கூட ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதா, அப்படி இவர்கள் என்ன வேலை செய்வார்கள் என்ற நமது ஆச்சர்யங்களுக்கு பதிலளிக்கிறார் இந்தியாவின் முதல் இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டரான ஆஸ்தா கண்ணா.

ஆஸ்தா கண்ணா
ஆஸ்தா கண்ணா

பாலிவுட்டில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆஸ்தா கண்ணா, ஒருமுறை படத்தின் கதாநாயகிக்கு ஒரு நெருக்கமான காதல் காட்சியைப் புரியவைக்க முற்படும்போது, மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சூழலில் என்ன செய்கின்றனர் என்று தேடும்போது தான், அங்கே Intimacy Professionals Association என்ற என்ற பணியைப் பற்றி தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து தேடும் போது, அதற்கென ஒரு துறை சார்ந்த படிப்பே தனியாக உள்ளது என்பதை அறிந்த ஆஸ்தா கண்ணா, கோவிட் பெருந்தொற்று மற்றும் லாக்டௌனில், இங்கிலாந்தின் இந்த ஐசி படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து, இந்தியாவின் முதல் இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டராக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாகச் சொல்கிறார்.

"ஒரு சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் இயக்குநர் செய்வது போன்ற பணிதான் என்னுடையது" என்று புன்னகைக்கும் இவர், "ஒரு சண்டைக் காட்சியில் ஸ்டன்ட் மாஸ்டர் எப்படி தன்னுடன் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தபடியே காட்சி நன்றாக வர உதவுகிறாரோ, அதேபோல பாலியல், கவர்ச்சி மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகளில் பாதுகாப்பாகவும், அதேசமயம் நடிப்பதை எளிமைப்படுத்துவதும் விதமாக உதவுவதும்தான் இன்ட்டிமசி கோஆர்டினேட்டரின் பணி" என்கிறார் ஆஸ்தா கண்ணா.

உண்மையில் காதல் காட்சிகளில் நடுநிலையுடன் நின்று இருபாலினருக்கும் தனித்தனியாக காட்சிகளையும், ஒளிப்பதிவையும் புரியவைத்து, முறையான சம்மதத்தைப் பெற்ற பிறகுதான் ஒளிப்பதிவு நடக்கிறது. அத்துடன் ஆடைக்குறைப்பு இருக்கும் காட்சி அமைப்பில், அதனை ஒரு வரைபடமாக வரைந்து, ஒப்புதல் பெறுவதும் உண்டு என்கிறார் ஆஸ்தா கண்ணா.

சினிமா பண்டி படக்காட்சி
சினிமா பண்டி படக்காட்சி

காதல் காட்சிகள் மட்டுமன்றி, தந்தை-மகள் காட்சிகளுக்கும், கதாநாயகி - வில்லன் காட்சிகளுக்கும், நடன அமைப்புகளிலும் இதேபோன்ற இன்ட்டிமசி கோ-ஆர்டினேஷன் தேவைப்படுகிறது என்கிறார். அதாவது எல்லா விதத்திலும் நடிகர் நடிகைகள் வரம்புக்குள் இருந்து, அவர்களது இமேஜ் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் இந்தப் பணி, உண்மையில் இயக்குநருக்கும், நடிகர்களுக்கும் இடையேயான பாலமாகத் திகழ்கிறது என்கிறார் அவர்.

திரைப்படங்களில் மட்டுமன்றி தொலைக்காட்சி தொடர்களுக்கும், நடன நிகழ்ச்சிகளுக்கும் இன்ட்டிமசி கோ-ஆர்டினேஷன் கை கொடுக்கிறது. முன்பெல்லாம் முத்தக் காட்சிகள் வைக்கவே தயங்கிய திரையுலகில் தற்போது அது சகஜமாகிவிட்டதுடன், தற்போது ஓடிடி ஸ்ட்ரீமிங் அதிகரித்து வரும் காலங்களில் இளம்பெண்கள், புதுமுகங்களுக்கு நெருக்கமான காட்சிகளில் பாலியல் தொல்லைகள் ஏற்படாமல் பாதுகாக்கவும், படப்பிடிப்பு தடங்கலின்றி நடைபெறவும் இந்த இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டர்கள் பணி மிகவும் தேவையாய் இருக்கிறது என்பதும் புரிகிறது.

‘’சானிடரி நாப்கின்கள், ஸ்கின் கலர் உள்ளாடைகள், டேப்கள், டியோடரன்ட் மற்றும் மவுத் ஃப்ரெஷ்னர் உள்ளடக்கிய டூல் பாக்ஸ் ஒன்றையும் எப்போதும் நாங்கள் கையில் வைத்திருக்கிறோம். அப்போதைய காட்சி அமைப்புக்கும், பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டரீதியான பிரச்னைகளைத் தவிர்க்கவும் எங்களது அறிவுரை மட்டுமல்ல, இந்த டூல் பாக்‌ஸும்

பெரிதும் உதவுவதால், தற்போது திரையுலகில் இந்தப் பணி தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது’’ எனும் ஆஸ்தா கண்ணா, தற்சமயம் தன்னுடன் ஒன்பது பேர் கொண்ட குழுவை இணைத்து "இன்ட்டிமசி கலெக்ட்டிவ்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் காஸ்டியூம் டிசைனர், கோரியோகிராபர் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

பாலிவுட்டைப் பின்தொடரும் கோலிவுட்டும் விரைவில் இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டர்களை தமது திரைப்படங்களில் உபயோகிக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம் என்றாலும், இயக்குநர் தெளிவாக காட்சியமைப்பை விளக்கும்போதே பிரச்னைகள் தவிர்க்கப்படுவதுடன், இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டருக்கு என்று கொடுக்கும் சம்பளம் தயாரிப்பாளருக்கு மிச்சம் என்கிறார்கள் மூத்த இயக்குநர்கள்.

அப்படி என்ன சம்பளமாய் இருக்கும் இந்த இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டர்களுக்கு என்று விசாரித்தால், "ஹாலிவுட்டில் ஆறு இலக்க சம்பளத்தை இவர்கள் அமெரிக்க டாலர்களில் பெறுகிறார்கள்" என்கிறது என்பிசி செய்தித் தொகுப்பு.

யோசித்துப் பார்த்தோமேயானால், ஒருகாலத்தில் அம்மாக்களும், பி.ஏ.க்களும் செய்ததை இன்று இன்ட்டிமசி கோ-ஆர்டினேட்டர்கள் செய்து வருகின்றனர் என்றாலும், இப்போது சட்டரீதியாகவும், ஒரு ப்ரொஃபஷனல் டச்சுடனும் இது இருக்கிறது என்பதுதான் உண்மை.

சில எதிர்கால #மீ_டூ-க்கள் நிகழாமல் இருக்க, இத்தகைய சில நிகழ்கால மாற்றங்கள் நிச்சயம் தேவைப்படுகின்றன!