Published:Updated:

ஜெயம் ரவி படத்தில் இரானிய நடிகை; இசை ஏ.ஆர்.ரஹ்மான்?

தார்மிக் லீ

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான `கோமாளி' படத்துக்கு மக்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து தனது 26-வது படமான `ஜன கன மன' படத்தில் நடித்து வருகிறார், ஜெயம் ரவி.`என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அஹ்மது இப்படத்தை இயக்குகிறார்.

Jayam Ravi - Elnaaz Norouzi
Jayam Ravi - Elnaaz Norouzi ( Jana Gana Mana )

ஜெயம் ரவி நடிப்பில் அஹ்மது இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் `ஜன கன மன' படத்தின் படப்பிடிப்பு, தற்போது அஸர்பைஜானில் நடந்துவருகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். மேலும், `கே.ஜி.எஃப்' படத்தில் கருடன் என்ற வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராமச்சந்திர ராஜு, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Elnaaz Norouzi
Elnaaz Norouzi

பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துவரும் நிலையில், இரானைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையான எல்னாஸ் நோரௌஸியும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டுவருகிறது. நவாஸுதின் சித்திக் நடிப்பில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியான `சாக்ரெட் கேம்ஸ்' வெப் சீரிஸில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் இதன் இரண்டாவது சீஸன் நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

மேலும், படத்தில் இவருக்கான ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக பயிற்சிகள் மேற்கொள்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கலாம் என கோலிவுட் கிசுகிசுத்து வருகிறது.