
சினிமாத்தனம் இல்லாத ஸ்டன்னர் சாம்-பிசி-யின் சண்டைக்காட்சிகளும், த.ராமலிங்கத்தின் நேர்த்தியான கலை இயக்கமும் படத்தின் மிகப்பெரிய பலங்கள்.
‘உலகை அழிக்கும் ஆயுதங்கள் வேண்டாம்; மனிதம் காக்கும் அன்பு மட்டும் போதும்’ என்பதை எளிய மனிதர்களைக் கொண்டு காகிதக் கொக்குகளால் காட்சிப்படுத்தி யிருக்கும் படமே ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.’
இரும்புக்கடையில் பணியாற்றும் லாரி ஓட்டுநர் தினேஷ், ஆசிரியை ஆனந்தியைக் காதலிக்கிறார். வர்க்கமும் சாதியும் காதலுக்குக் குறுக்கே வர, ஒருகட்டத்தில் அது ஆணவக் கொலை முயற்சி வரைபோகிறது. இதற்கிடையே தினேஷ் வேலை செய்யும் இரும்புக்கடைக்குள் தவறாக வந்து இறங்குகிறது இரண்டாம் உலகப்போரின் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்டு, அழிக்கப்படாமல் கடலில் மூழ்கடிக்கப்பட்ட குண்டு. ‘குண்டு எத்தனை பேரைக் கொன்றாலும் பரவாயில்லை, அது யாரிடமும் ஆதாரமாகக் கிடைக்கக்கூடாது’ என அரசியல் பலத்துடன் கார்ப்பரேட்டும், போலீஸும் கைகோத்துக் களமிறங்க, இந்தச் சதியை அம்பலப்படுத்தத் துடிக்கிறார் அரசியல் உணர்வுள்ள ரித்விகா. குண்டிலிருந்து அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட்டார்களா, காதல் கைகூடியதா என்பதைச் சொல்கிறது படம்.
குடித்துவிட்டு முதலாளி மாரிமுத்துவிடம் நீதி கேட்கும் ஆவேசம், தந்தையின் கனவை நிறைவேற்றத் தவிக்கும் தவிப்பு ஆகியவற்றை அழகாகக் கடத்தியிருக்கிறார் தினேஷ். ஆனால் எந்நேரமும் ஹை-பிட்சிலேயே எகிறிக்கொண்டிருப்பது கொஞ்சம் ஓவர். காதலுக்காக வீட்டை எதிர்க்கும் பெண்ணாக வழக்கமான வேடத்தில் ஆனந்தி. படத்தின் கலகலப்புக்காக மட்டும் இல்லாமல் எமோஷன்களிலும் யதார்த்தம் கூட்டியிருக்கிறார் முனீஸ்காந்த். படத்தைத் தாங்கி நிற்கும் அழுத்தமான கதாபாத்திரம் ரித்விகாவுக்கு. ஆனால் அவர் அல் ஜசீரா நிருபரா, ஆவணப்பட இயக்குநரா, அரசியல் போராளியா என்ற குழப்பமும் யதார்த்தத்தை மீறிய அரசியல் உரையாடல்களும் செயற்கை.

சினிமாத்தனம் இல்லாத ஸ்டன்னர் சாம்-பிசி-யின் சண்டைக்காட்சிகளும், த.ராமலிங்கத்தின் நேர்த்தியான கலை இயக்கமும் படத்தின் மிகப்பெரிய பலங்கள். ‘நிலம் எல்லாம்’, ‘மாவுளி’ பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார் டென்மா. படம் முழுக்க இருட்டை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார். செல்வா ஆர்.கே-வின் எடிட்டிங்கும் சிறப்பு.
அடித்தட்டு மக்களின் வழியே சர்வதேச அரசியலையும் ஆயுத அபாயத்தையும் சொல்லியிருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரையின் முதல்முயற்சிக்கும் வியாபார வெற்றியை மனதில் கொள்ளாமல் கதைக்காகவே களம் அமைத்துக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கும் பாராட்டுகள்.

தினேஷ் - அப்பாவின் உறவைச் சொல்லும் அழுத்தமான காட்சிகள் இல்லாமை, குண்டைச் சுமந்து செல்லும் லாரிக்கு ஸ்பீடு பிரேக்கர் ஆகும் க்ளிஷே காதல் காட்சிகள், ஆனந்தியின் குடும்பச் சித்திரிப்பில் போதாமை, குண்டைக் கைப்பற்ற முயலும் அதிகாரச் சக்திகள் குறித்து, வழக்கமான தமிழ் சினிமா பாணியிலான தட்டையான சித்திரிப்புகள் போன்ற பலவீனங்கள் இருந்தாலும் கதை புதிது, களம் புதிது என்பதற்காகப் பாராட்டப்பட வேண்டிய படம்.