சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: இருட்டு

இருட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
இருட்டு

பேய்ப்படமா என பயந்துகொண்டே இசையமைத்திருக்கிறார் கிரிஷ்.

ர் ஊரையே பழிவாங்க நினைக்கும் பேய்களின் திகிலூட்டும் முயற்சிகளும் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் மக்களும்தான் ‘இருட்டு.’

சூரியன் கொட்ட கொட்ட முழித்திருக்கும் நேரத்திலும் ஒரு கிராமத்தில் மட்டும் திடீரென இருள் போர்த்திக்கொள்கிறது. அப்போது ஒரேநேரத்தில் ஆறு பேர் கொல்லப்படுகிறார்கள். விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளரும் மர்மமாகத் தற்கொலை செய்துகொள்கிறார். புதிதாக வரும் ஆய்வாளர் சுந்தர்.சி உண்மையைக் கண்டுபிடித்து ஊரைக் காப்பாற்ற முயல்கிறார். அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன நடக்கிறது என்பதே கதை.

வழக்கமான பேய்க் கதையில் ‘ஜின்’ என்ற புதிய பேய்களைக் காட்டியதன் மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர் வி.இஸட். துரை. அதுபோல், க்ளிஷேவான திகில் காட்சிகளுக்குப் பதிலாக புதிய காட்சிகளுக்கும் மெனக்கெட்டி ருக்கலாம். “இப்ப காக்கா பறக்கும் பாரேன்” என யாரோ சொல்லும்போதே காக்கா பறக்கிறது. ஆண்டுக்குப் பத்துப் பேய்ப்படங்கள் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்த இயக்குநர்கள் இன்னும் யோசிக்க வேண்டும். சுந்தர்.சி-க்கு மெனக்கெடவே தேவையில்லாத பாத்திரம். பேய்தான் எனத் தெரிந்தாலும் எந்தக் கவலையுமின்றித் திரிகிறார். அந்த உடல்மொழி அந்த பயமற்ற ஆய்வாளர் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறது. கவர்ச்சிக்கு சாக்‌ஷி சௌத்ரி, கதைக்கு சாய் தன்ஷிகா என ஏரியா பிரித்திருக்கிறார்கள். சாய் தன்ஷிகா நடிப்பில் குறைவில்லை என்றாலும் கவர்ச்சியைத் தாண்டியும் கவனிக்க வைப்பது சாக்‌ஷி சௌத்ரிதான். காமெடி ஏரியாவில் விடிவி கணேஷ்தான் ஒரே பேட்ஸ்மேன். தடவித் தடவி ஆடினாலும் ஜெயிக்க வைத்துவிடுகிறார்.

இருட்டு
இருட்டு

மனிதர்களால் செய்ய இயலாத காரியங்கள் டஜன் கணக்கில் நடந்த பின்பும் சுந்தர்.சி அது பேய் இல்லையென நம்புவது நம்பும்படி இல்லை. அதுவும், தன் மகளைப் பேய் பிடித்து ஆட்டும்போதும் “ஏன்ம்மா இப்படிப் பண்ற... அப்பா இருக்கேன்மா” என்பதெல்லாம் உச்சக்கட்ட காமெடி. கதையே சொல்லாத முன்பாதி சுவாரஸ்யம் இரண்டாம் பாதி திரைக்கதையில் இல்லை. சுந்தர்.சி-க்குத்தான் சிறப்பு சக்தியிருக்கிறது; ஆனால் அவர் மனைவியையும் குழந்தையையும்கூட ஏன் பேயால் கொல்ல முடியவில்லை? ஊர் முழுவதையும் ஜின்கள் பழி வாங்க நினைப்பதாக ஃப்ளாஷ்பேக் சொல்கிறது. ஆனால், தங்களைத் தாக்க வந்தவர்களைத் தவிர வேறு யாரையும் அவை கொல்லாதது ஏன்? காவல்துறையால் பேய்களைக் கைது செய்துவிட முடியாது எனும்போது, இந்த வழக்கை நடத்தும் காவலர்களை ஏன் குறி வைக்கிறது ஜின்? இப்படி ஏராளமான கேள்விகள்.

இருட்டு
இருட்டு

பேய்ப்படமா என பயந்துகொண்டே இசையமைத்திருக்கிறார் கிரிஷ். பாடல்களைவிடப் பின்னணி இசை நன்று. மலைக்கிராமத்தை அழகாகக் காட்டியிருக்கிறார் இ.கிருஷ்ணசாமி. சுதர்சனின் படத்தொகுப்பும் பயமுறுத்தியிருக்கிறது. “எனக்கு திகில் வேணும்ப்பா” என்னும் பேய்ப்பட ரசிகர்கள் நம்பி இந்த இருட்டில் தொலையலாம்.