ஆண் பிள்ளைகளோடு பழகாத பெண்கள் லெஸ்பியன் ஆவார்களா... `பாவக்கதைகள்' சொல்வது சரியா?

`இதுக்குதான் இம்புட்டு பில்டப்பா..?' என்ற ரேஞ்சில் விக்னேஷ் சிவனின் `லவ் பண்ணா உட்றணும்' கதை மீதான கோபத்தையும் ஆதங்கத்தையும் ரைட்டப்பாகக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி படம் `பாவக்கதைகள்'. தற்போது இதுதான் சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக்! முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நான்கு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான பாவக்கதைகளின் டிரெய்லர் நமக்குள் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதே எதிர்பார்ப்போடு நேற்று படம் பார்த்தவர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்திருக்கலாம்.

மற்ற மூன்று கதைகளை விட்டுவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனின் `லவ் பண்ணா உட்றணும்' கதையை எடுத்துக்கொள்வோம். அஞ்சலியும், கல்கி கோச்சலினும் இருக்கும் காட்சிகளை டிரெய்லரில் பார்த்துவிட்டு கொஞ்சம் மெர்சலாகித்தான் போனோம். ஆனால், அப்படி நம்பி பார்த்தவர்களுக்கு க்ளைமாக்ஸில் காத்திருந்தது ஆப்பு. இதனால் `இதுக்குதான் இம்புட்டு பில்டப்பா..?' என்ற ரேஞ்சில் விக்னேஷ் சிவனின் கதை மீதான கோபத்தையும் ஆதங்கத்தையும் ரைட்டப்பாகக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
விக்னேஷ் சிவன், இந்தப் படத்தில் `தன் பாலின உறவை' கதையின் போக்குக்கு ஊறுகாயாகப் பயன்படுத்தியிருப்பதுதான் அபத்தத்தின் உச்சம். இதில் `தன் பாலின உறவு' குறித்து இடம்பெற்றிருக்கும் ஒரு வசனம்தான் இந்தக் கட்டுரையின் மையக்கரு.

கதையின் நாயகி அஞ்சலி, சாதி வெறி பிடித்த தன் தந்தையை நோக்கிக் கூறும் ஒரு வசனம் : ``உங்களுக்கெல்லாம் பயந்து பயந்து, பசங்க கூட பேசுறதையே நிறுத்தி, அப்படியே பொண்ணுங்க கூட பேசிப்பேசி, அப்படியே இவங்க கூட காதல்ல விழுந்துட்டேன்!"
`ஆண் பிள்ளைகளோடு பழக அனுமதிக்கப்படாத பெண்கள் லெஸ்பியன் ஆவார்கள்(?!)' என்ற கருத்தையே இந்த வசனம் முன்வைக்கிறது. இது தன்பாலின உறவில் `இரண்டு பெண்களின் உடல் மற்றும் உள்ளம்' சார்ந்த உறவுக்குக் கொடுக்கப்படும் தவறான விளக்கம்.
இந்தக் கருத்தின் மீதான தன்னுடைய பார்வையை நம்முடன் பகிர்ந்துகொண்டார் `கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி'யின் தலைவரும் மருத்துவருமான மனோரமா.

``ஒரு பெண் மற்றொரு பெண்ணை மனம் மற்றும் உடல்ரீதியாக விரும்பி உறவுகொள்வதும், இரண்டு ஆண்களுக்கு இடையேயான காதலும் காமமும் `தன் பாலின உறவு'க்கு கீழ் வரும். தன்பாலின ஆண்கள் `கே (Gay)' என்றும், தன்பாலின பெண்கள் `லெஸ்பியன் (Lesbian)' என்றும் குறிப்பிடப்படுவார்கள். ஓர் ஆண் அல்லது பெண் தன்பாலின ஈர்ப்பாளராக மாறுவதற்கு மரபியல், உடல் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
`ஆண் பிள்ளைகளோடு பழக வாய்ப்பில்லாத, அனுமதிக்கப்படாத பெண்கள் லெஸ்பியன் ஆவார்கள்' என்ற கருத்து நூறு சதவிகிதம் தவறானது. கடந்த 60, 70-களில் உள்ள பெண்களுக்குத் திருமணத்துக்கு முன்பு ஆண்களுடன் பேசுவதற்கான, பழகுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தப் படத்தில் கூறியுள்ள கருத்துப்படி பார்த்தோம் என்றால் 60, 70-களில் பிறந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் லெஸ்பியனாகத்தானே மாறியிருக்க வேண்டும்?

ஆண்வாசமே இல்லாமல் வளரும் பெண்கள் `தன்பாலின உறவுக்குள் செல்வார்கள்' என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னைச் சுற்றியுள்ள ஆண்களுடன் சரளமாகச் சிரித்துப் பேசி பழகும் பெண்களிலும் லெஸ்பியன்ஸ் இருக்க வாய்ப்பிருக்கிறது.
ஒரு பெண் லெஸ்பியன் உறவுக்குள் செல்ல அவரின் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு காரணங்கள் உள்ளன. அப்பெண்ணின் உடலுக்குள் நிகழும் வேதியியல் மாற்றம் மற்றும் சுரக்கப்படும் ஹார்மோன்கள் மற்றொரு பெண்ணின் மீது ஈர்ப்பைத் தூண்டுகின்றன. இது இயற்கையாக நிகழக்கூடிய ஒன்று. தவிர யாரும் வலிந்து தன்பாலின உறவுக்குள் செல்ல முடியாது. மற்றவர்களையும் அதில் தள்ள முடியாது.

அதே நேரத்தில், ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் `செக்ஸ்' தொடர்பான விஷயங்களைப் பற்றியும், தங்களது பாலியல் தேவைகளைக் குறித்தும் அடிக்கடி உரையாடும்போது, அவர்களுக்குள் ஈர்ப்பு ஏற்படும் பட்சத்தில் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. இது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.
ஆக, `ஆண் பிள்ளைகளோடு பழக அனுமதிக்கப்படாத பெண்கள் லெஸ்பியன் ஆவார்கள்' என்பது போன்ற மேம்போக்கான கருத்துகளை யார்மீதும் திணிக்கக் கூடாது" என்கிறார் மனோரமா.