Published:Updated:

கேப்டன் மார்வெல், லயன் கிங், அலாவுதீன்... 90's நாஸ்டால்ஜியாவும் நல்லா இருந்த சினிமாவும்!

ஹாலிவுட், நாஸ்டால்ஜியாவுக்காக தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டது. ரெட்ரோ காலமான 70, 80களைவிட, இப்போது 90'ஸ்களின் காலகட்டமே ஹாலிவுட்டில் அதிகமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்றால், திரைத்துறையிடம் அதிருப்தியே நிலவுகிறது.

கேப்டன் மார்வெல், லயன் கிங், அலாவுதீன்... 90's நாஸ்டால்ஜியாவும் நல்லா இருந்த சினிமாவும்!

ஹாலிவுட், நாஸ்டால்ஜியாவுக்காக தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டது. ரெட்ரோ காலமான 70, 80களைவிட, இப்போது 90'ஸ்களின் காலகட்டமே ஹாலிவுட்டில் அதிகமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்றால், திரைத்துறையிடம் அதிருப்தியே நிலவுகிறது.

Published:Updated:

பொதுவாக, நாஸ்டால்ஜியாவுக்கு சினிமாவில் நல்ல விலை. `ஆட்டோகிராஃப்', `பள்ளிக்கூடம்', `பசங்க' என நம்மூரில் வெளியான பெரும்பான்மையான நாஸ்டால்ஜியா படங்கள் வெற்றியடைந்ததற்கான காரணம், அவற்றிலிருந்த நட்பு, காதல் என்ற உணர்வுக் கட்டமைப்புகளும், அவற்றில் காட்சிப்படுத்தப்பட்ட பழைமைகளும்தாம். பென்சில் கடன் வாங்கும் உறவில் தொடங்கி, காதலைச் சொல்லத் தயங்கும் தருணம் வரை... இந்த நாஸ்டால்ஜியா திரைப்படங்கள் எளிதில் அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். அதனால், இவ்வகைப் படங்கள் எல்லோராலும் தொடர்புப்படுத்திக்கொள்ளும் விதத்திலும் அமைந்துவிடுகின்றன.

Premam
Premam

நிகழ்காலத்தில் 90'ஸ் கிட்ஸ் மீம்ஸ் என சாதாரண மீம்களில் தொடங்கி, இப்போது ஒரு கான்செப்ட், உலகின் எல்லா மொழித் திரைத்துரைக்குள்ளும் தன்னைப் பொருத்திக்கொண்டது. மலையாளத்தின் `பிரேமம்', 'ஓம் சாந்தி ஓசனா', இந்தியின் 'சிச்சோரே' என உள்ளூர் சினிமாக்கள் முதல், ஹாலிவுட் வரையில் பார்வையாளர்களின் இளமைப் பருவத்தைக் கிளறத் தொடங்கிவிட்டன. அதிலும், ஹாலிவுட் சினிமா நாஸ்டால்ஜியாவுக்காக தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டது. ரெட்ரோ காலமான 70, 80களைவிட இப்போது 90'ஸ்களின் காலகட்டமே ஹாலிவுட்டில் அதிகமாகச் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்றால், திரைத்துறையிடம் அதிருப்தியே நிலவுகிறது.

இந்த ஆண்டு வெளியான `கேப்டன் மார்வெல்', 'அலாவுதீன்', 'தி லயன் கிங்' என அதிக வசூலைக் குவித்த பெரும்பான்மையான படங்கள் நாஸ்டால்ஜியாவைச் சந்தைப்படுத்தியவைதாம். இது 'தி லயன் கிங்' படத்தின் வெள்ளிவிழா ஆண்டு. அதனால், அனிமேஷன் வடிவில் இருந்த அந்தப் படத்தை மீண்டும் லைவ் ஆக்‌ஷன் வடிவத்துக்கு மாற்றி ஒவ்வொரு ஃப்ரேமையும் மீட்டுருவாக்கம் செய்து, புதிய ஓர் அனுபவத்தைக் கொடுக்க முயன்றது, டிஸ்னி நிறுவனம்.

The Lion King
The Lion King

ஏற்கெனவே 90-களில் அனிமேஷன் படத்தைப் பார்த்த 90'ஸ் கிட்ஸுக்கு இந்தப் படம் அதே அளவுக்கான அனுபவத்தைக் கொடுக்கவில்லையென்றாலும், இந்தப் படம் வசூல் சாதனை படைக்கத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப் பார்த்த பலரும் திரையரங்கில் படத்தின் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து அவர்களின் வசனத்தையும் பேசியபடியே கண்டு ரசித்தது, இந்தப் படத்தின் வெற்றி.

இதேபோன்ற தாக்கம்தான், 'அலாவுதீன்' படத்துக்கு நேர்ந்தது. இந்தக் கதாபாத்திரம் அனிமேஷன் படமாகத்தான் 90-களில் வெளியானது. அலிபாபா, சிந்துபாத் என அரேபிய இரவுக் கதைகள் பலவற்றையும் இதுவரை சினிமா, கார்ட்டூன், காமிக்ஸ் எனப் படித்திருந்தாலும், 'அலாவுதீன்' அளவுக்கு அவை யாவும் குழந்தைகளைக் கவரவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான், எல்லாக் காலங்களிலும் அலாவுதீன் கதை எந்த வடிவில் சொல்லப்பட்டாலும், அது எல்லா வகையான ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்துவிடுகிறது. அதனால், அதன் ஒவ்வொரு தனிக் கதாபாத்திரத்துக்கும் ஒரு தனிக்கதை சொல்லப்பட்டு, அவையும் பெரிய ஹிட்டாக மாறின.

Aladdin
Aladdin

அண்மையில் வெளியாகி உலகளவில் ஹிட்டடித்த `அலாவுதீன்' திரைப்படத்தின் பலவீனமாக இருந்தது. அது 90-களின் நாஸ்டால்ஜியாவை அப்படியே மீண்டும் திரையில் காட்டத் தவறிதுதான். உண்மைத் தன்மைக்காக ஆசிய வம்சாவளியைச் சார்ந்த நடிகர்களை நடிக்க வைத்திருந்ததும், 90-களில் வெளியான அனிமேஷன் தொடரின் அதே பி.ஜி.எம்மை மீண்டும் பயன்படுத்தியது என எத்தனையோ காரணங்கள் இருந்தன. போதாக்குறைக்கு, விளக்கில் ஒளிந்திருக்கும் பூதமாக நடித்திருந்தது, 90'ஸ் கிட்ஸின் ஆதர்ஷ நாயகன் வில் ஸ்மித். விமர்சகர்களால் தீவிரமாகச் சாடப்பட்டாலும், அது படத்துக்கான எக்ஸ்ட்ரா மைலேஜாக அமைந்தது. இருந்தும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி படத்துக்கு அமையவில்லை. 'தி லயன் கிங்'கைப் போலவே இதுவும் மற்றுமொரு படமாகத்தான் பார்க்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய படம், 'கேப்டன் மார்வெல்'. மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸின் மிகவும் பலம் பொருந்திய சூப்பர் ஹீரோவான இந்தப் பாத்திரத்தின் முன்கதையை முழுக்க முழுக்க 90-களில் நடக்கும்படியே அமைத்திருந்தது, அந்த நிறுவனம். அதுவரை வெளியான 20 எம்.சி.யூ படங்களில் காட்டப்படாத காலகட்டம் இது. வீடியோடேப் கடையில் விழுந்து உலகத்துக்குள் காலடி எடுத்து வைப்பதில் தொடங்கி, ஒரு பேஜர் மூலமாக உலகத்துடன் எப்போதுமே தொடர்பில் இருப்பதாகச் சொல்லி இங்கிருந்து மீண்டும் விண்வெளிக்குக் கிளம்புவது வரை இந்தப் படத்தில் எல்லாமே 90'ஸ் நாஸ்டால்ஜியாதான்! ஏதேதோ டைம்லைனில் பயணித்துக்கொண்டிருந்த எம்.சி.யூவையே இந்த நாஸ்டால்ஜியா வலைக்குள் சிக்கவைத்துவிட்டதுதான், 90'ஸ் கிட்ஸ் கான்செப்ட் சந்தைப்படுத்தப்பட்டதன் உச்சக்கட்டம். என்னதான் இந்தப் படம் வசூல் சாதனை செய்திருந்தாலும், அந்த நாஸ்டால்ஜியா கிளர்ச்சி ஏற்படவில்லையென்பது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது.

Captain Marvel
Captain Marvel

ஃபேன்டஸி படங்கள், சூப்பர் ஹீரோ படங்கள் என இரண்டு முக்கியமான ஜானரை ஆதிக்கம் செய்த நாஸ்டால்ஜியா தீம், ஹாரர் ஜானரையும் விட்டுவைக்கவில்லை. அதன் விளைவுதான் 'இட்' படத்தொடர். தங்கள் சிறுவயதில் கண்டு அஞ்சும் ஒரு கோமாளியின் மீதிருக்கும் பயத்தால் அவதிப்படும் ஒரு பள்ளிக்கூட நட்பு வட்டாரத்தின் கதையைப் படமாக்கியிருந்தனர். ஏற்கெனவே வெளியான 'இட்' படத்தின் ரீமேக்காக இருந்தாலும், இந்தப் படத்தின் சிறப்பம்சம், இதில் காட்டப்பட்ட கடந்த காலம். ஆனாலும், இந்த ஜானருக்கான அம்சங்கள் குறைவாக இருந்ததால், தொடரின் இரண்டு படங்களுமே சுமார் வெற்றியைத்தான் பெற்றன.

இவையன்றி, சிறுவயதில் 'தி ஆடம்ஸ் ஃபேமிலி', 'ஸ்கூபி டூ', 'டோரா தி எக்ஸ்புளோரர்' என கார்ட்டூன் வடிவில் பார்க்கப்பட்ட எல்லாக் கதைகளும் கடந்த ஓராண்டாக ஹாலிவுட்டில் படமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பாக்ஸ் ஆபீஸில் தோற்றும்விட்டன. இவை ஒருபுறமிருக்க 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பல படங்களை மீண்டும் ரீபூட் செய்து வருகிறது, ஹாலிவுட். 'மென் இன் ப்ளாக்', 'சார்லிஸ் ஏஞ்சல்ஸ்', 'ரெஸிடென்ட் ஈவில்', 'தி இன்கிரிடிபில்ஸ்' என இந்தப் பட்டியலும் மிக நீண்டதுதான். இவற்றில் ஏற்கெனவே 'மென் இன் ப்ளாக்' படுதோல்வியைச் சந்தித்தது.

MIB International
MIB International

அதேபோல, `96', `கோமாளி', `மெஹந்தி சர்க்கஸ்' எனத் தமிழிலும் நாஸ்டால்ஜியா படங்கள் வெளியாகியுள்ளன. ஏன் இதே படங்கள் பிற இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவிருக்கின்றன. ஆனால், '96' படம் கொடுத்த அந்த உணர்வு பரிமாற்றங்களை அதன் கன்னட ரீமேக்கான '99' ஏற்படுத்தவில்லை. 'ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கிற்கு விளைந்ததுபோலவே! இங்கும், 'கோமாளி' படத்துக்கு விமர்சனரீதியாக அவ்வளவு வரவேற்பில்லை என்பதே உண்மை.

கடைசியாகப் புழுதியில் புரண்டு விளையாடியது எங்கள் தலைமுறைதான். கடைசியாக வெயிலில் கிரிக்கெட் ஆடியது எங்கள் தலைமுறைதான். கடைசியாகப் பம்பரம், பட்டம் விட்டது எங்கள் தலைமுறைதான் எனச் சொற்களிலும், மீம்களிலும் மட்டுமே பெருமையாகப் பேசப்பட்டுவந்த கருத்துகளைத் திரையில் பார்ப்பதும் ஒரு சுகம்தான். உண்மையில் எல்லாத் தலைமுறைக்கும் இப்படிப்பட்ட 'கடைசி'கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை குறித்த படங்களும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தன. என்றாலும், இப்போது வருகிற மாதிரி மாதத்துக்கு இரண்டு என்றெல்லாம் படங்கள் வரவில்லை. தவிர, எல்லாப் படங்களாலும் அந்த உணர்வுகளைப் படம்பிடித்துவிடவும் முடியவில்லை. இத்தனை தோல்விகளும் அதற்குச் சான்று.

Comali
Comali

காரணம், அந்த 'கடைசி'களுடன் சேர்ந்து, 'முதல் முதலாக சிறுவயதை மீம்ஸில் ஏற்றி அழகு பார்த்த தலைமுறையும் நம்முடையது' என்ற உண்மையும் இருக்கிறதல்லவா! முன்பைவிட நாஸ்டால்ஜியாவை அசைபோட எத்தனையோ ஊடகங்கள் சூழ்ந்துவிட்ட நிலையில், இப்போது 90'ஸ் கிட் கான்செப்ட் என்பது நினைவுகள் என்பதைத் தாண்டி, ஒரு நுகர்வுக் கலாசாரத்துக்கான அடிப்படை விதையாகவும் மாறிவிட்டது. அதை அதிகமாகக் கொடுப்பது தேவையா, இல்லையா என்பதைவிட அவற்றை எவ்வளவு உண்மைத் தன்மையுடன் காட்டவேண்டும் என்ற அடிப்படையும் இங்கே கருத்தில் கொள்ளப்படவேண்டும். வெறும் மாருதி ஆம்னியையும், யமஹா ஆர்.எக்ஸ் 100-ஐயும் திரையில் காட்டிவிட்டு, இளையராஜாவையும், ரஹ்மானையும் பின்னால் இசையில் கோத்துவிட்டால் போதுமா?! 90'ஸ் என்பது இவை மட்டுமல்லதானே. 'ஆட்டோகிராஃப்', '96' ஹிட்டானதற்குக் காரணம், இவற்றையெல்லாம் கடந்தது. ஏனென்றால், நாஸ்டால்ஜி என்பது பொருள்களில் ஒளிந்திருக்கவில்லை, அது உணர்வுகளில் இழையோடுகிறது!