சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் விஜய்யின் அடுத்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
ஜார்ஜியாவில் தொடங்கிய படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது ஷாப்பிங் மால் ஒன்றின் செட் அமைத்து, அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதற்கு பிறகு மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது 'பீஸ்ட்' படக்குழு எனத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதைத் தொடர்ந்து, 'பீஸ்ட்' வட்டாரத்தில் விசாரித்தோம். ஜார்ஜியா செல்வதாக வரும் தகவல்கள் உண்மையில்லையென்றும், இன்னும் 15 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இந்தப் படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் வம்சி இயகத்தில் நடிக்கவிருக்கிறார், விஜய்.
அந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் டிசம்பர் மாதத்தில் இருந்து வெளியாகும் என இயக்குநர் வம்சி சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். 'பீஸ்ட்' படத்தின் ஷுட்டிங் நிறைவடைவதற்கும் 'விஜய் 66' படத்தின் அறிவிப்புகள் வெளியாவதற்கும் சரியாக இருக்குமாம். தீபாவளியன்று இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தனர், விஜய் ரசிகர்கள். ஆனால், எந்த அப்டேட்டும் வரவில்லை.
ஷூட்டிங் முழுக்க முடிந்த பிறகே, முதல் சிங்கிளை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். 2022 ஏப்ரல் மாதம் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாக இருக்கிறது.