Published:Updated:

``நல்லவேளை... நயன்தாரா அந்தப் படத்துல என்கூட நடிக்கல!'' - பார்த்திபன் தொடர் - 4

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் நான்காவது பகுதி.

``நல்லவேளை... நயன்தாரா அந்தப் படத்துல என்கூட நடிக்கல!'' - பார்த்திபன் தொடர் - 4

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் நான்காவது பகுதி.

Published:Updated:
பார்த்திபன்

``நீங்களும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்த ஏலேலோ படம் என்ன ஆனது? இசைத் தொடர்பான அந்தப் படத்தில் ஐரிஷ் இசை குறித்தெல்லாம் கேள்விப்பட்டோம்... அதற்கான பாடல்கள் கம்போஸிங் முடிந்துவிட்டதா, அந்தப் படம் கைவிடப்பட்டு விட்டதா இல்லை மீண்டும் தொடங்கப்படுமா?- சையத், பவானி

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

``சில நேரங்கள்ல வருத்தத்தைகூட வெளில சொல்லமுடியாத மாதிரி ஆகிடும். அந்த மாதிரி வருத்தம்தான் `ஏலேலோ' நடக்காமப்போனது. அது நடக்காமலேயும் போகாதுன்றது ஒரு சந்தோஷமான விஷயம். இப்பக்கூட சமீபத்துல ஃபேஸ்புக், ட்விட்டர்லலாம் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்கமாதிரி `ஏலேலோ' படத்தோட பூஜை போட்டோஸ்லாம் போட்டிருந்தாங்க. ஐரிஷ் மியூசிக்கையும், நம்ம மியூசிக்கையும் இணைக்கிற அற்புதமான விஷயம் இந்தப்படத்தோட கதையோடவே ஒட்டியிருக்கு. சிறப்பான கதையம்சம் கொண்ட படமா இருக்குனு ரஹ்மான் சொன்னார். அவருக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் காரணம் இல்லாம என் படங்களை ஒத்துக்கமாட்டார். அந்தப்படத்துக்காக நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த வெளிநாட்டு கதாநாயகி காதல் வயப்பட்டு, கடைசி நேரத்துல நான் நடிக்கமுடியாதுன்னு சொன்னதால படம் தள்ளித் தள்ளிப்போயிடுச்சு. தள்ளித்தான் போயிட்டிருக்கே தவிர தவிர்க்கப்படல. `ஏலேலோ' படத்துல நான் என்ன எதிர்பார்த்தேனோ அதைவிட மிகச்சிறப்பான படத்துல, உலகளாவிய அளவில் பேர் பெறப்போகிற படத்துல ரஹ்மான் சார் இருப்பார். இருக்கணும் என்பது என் விருப்பம். இருப்பார்ன்றது என் நம்பிக்கை. நடக்கணும்றது என் வேண்டுதல்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` 'சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும்' என்று ட்விட்டரில் சொல்லியிருக்கிறீர்களே... அதற்கான எதிர்வினைகளும் கடுமையாக இருந்ததே? - சாம்சன், ஶ்ரீபெரும்புதூர்

பார்த்திபன்
பார்த்திபன்

``ஒரு மரணம், அதுவும் போர் வீரனின் மரணம் மனசை ரொம்பவும் பாதிக்கும். நாம் காவல் தெய்வங்களை, எல்லைச்சாமிகளை கும்பிடுற பண்பாடு உடையவர்கள். சீன தாக்குதலுக்குப் பின்னாடி என்ன அரசியல்னு எனக்குத் தெரியல. ஆனா, நான் ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடியவன். அதனாலதான் அப்படி ஒரு போஸ்ட் போட்டேன். ஆயுதங்களை ஏந்தக்கூடாதுன்னு இருந்தும் கம்பிகளால் அடிச்சித் துன்புறுத்தியிருக்காங்க. எதற்குத் திரும்பவும் போர் வரணும். ஏற்கெனவே கொரோனாவால் கஷ்டத்தில் இருக்கும்போது ஏன் அப்படி நடக்கணும்னு தோணுச்சு. இந்தியாவில் இருக்கும் எல்லாமே மேட் இன் சைனாதான். மரணம்கூட 'மேட் இன் சைனாவா மாறிடுச்சு'னு ஒரு போஸ்ட் சோஷியல் மீடியாலப் பார்த்தேன். அதனாலதான் சீனப் பொருள்களை நாம் ஏன் தவிர்க்கக்கூடாதுன்னு நினைச்சேன். அப்படி போட்டவுடனே நீங்க ஸ்டேட்டஸ் போடுற போனுக்கான பார்ட்ஸ்கூட சீனால இருந்துதான் வருதுனு ஸ்டேட்டஸ் போடுறாங்க. அந்த அறிவு கூட இல்லாதவன் இல்லை நான்.

ஜல்லிக்கட்டு போராட்டம்லாம் அரசாங்கம் சொல்லி நடக்கல. மக்கள்தான் கையிலெடுத்தாங்க. செய்தியைப் பதிவிடும்போது நல்ல விஷயங்களை எடுத்துக்கிட்டு, கெட்டவிஷயங்களை விட்டுடறது நல்லது. இதெல்லாம் அரசாங்கம் எடுக்கவேண்டிய முடிவுன்னு சொல்றாங்க. மீண்டும் போர் வேண்டாம். சுதேசியா இருப்போம்னுதான் நான் சொல்றேன். அமெரிக்காவோட பிரச்னை வந்தபிறகு ஜப்பான், அமெரிக்கப் பொருள்களையே வாங்குவதில்லைன்னு முடுவெடுத்து எல்லா விஷயங்களையும் உள்நாட்டுலயே உற்பத்திப் பண்ண ஆரம்பிச்சாங்க. அந்தமாதிரிதான் நான் சொல்றேன். என்னோட இந்த ஸ்டேட்டஸ் கீழ நீதிபதி சந்துரு அவர்களும் ஒரு கார்ட்டூன் பதிவிட்டிருந்தார். சீனப் பொருள்களை தவிர்த்துட்டோம்னா நிர்வாணமாத்தான் நிக்கணும்னு சொல்லும் கார்ட்டூன் அது. அவருடன் அப்படியே ட்விட்டரில் உரையாடினேன். நான் மிகவும் நேசிக்கும், மிகவும் மதிக்கும், அப்பழுக்கற்ற மனிதர் அவர். அவருடன் உரையாடியதே எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கமென்ட்டுகளில் கெட்ட கெட்ட வார்த்தைகளால், மனதைப் புண்படுத்தி என்னவெல்லாமோ எழுத ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப சங்கடமாகிடுச்சு. ஏன் இவ்ளோ வெறுப்பு. சோஷியல் மீடியாவை விட்டுட்டு ஓடிடலாம்னு கூட தோணுச்சு. சிலரோட வாயை மூடறதுக்காகவே சிலர் வேலை செய்றதாக்கூடச் சொல்றாங்க. அது உண்மையா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். எதிர்வினையை மிகவும் நாகரிகமாக ஆற்றவேண்டும்னு அன்போடு, தாழ்மையோடு, அடிபணிந்து கேட்டுக்குறேன். முகம் தெரியாதவங்க என்னவேணா எழுதலாம்னா, முகம் தெரிஞ்சவங்க யாரும் அங்க வரமாட்டாங்க. அதனால நாகரிகத்தோட இருப்போம்.''

``உங்கள் படங்களுக்கான ஹீரோயின்களை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க.. இவங்ககூட நடிக்கணும்ன்னு நினைச்சு நடிக்கமுடியாத ஹீரோயின்?''

- வினித், பாண்டிச்சேரி

நயன்தாரா
நயன்தாரா

``என்னோட முதல் படமான `புதியபாதை'ல நான் புதுமுகம். அதனால ஹீரோயின் கேரக்டருக்கு மிக மிகப் பொருத்தமான ஒருத்தர் வேணும்னு ரொம்பத் தேடித் தேடிக் கண்டுபிடிச்சுதான் சீதா அவர்களை அந்தப் படத்துக்கு புக் பண்ணோம். அந்தப்படத்துக்கு அவங்க ரொம்ப அவசியம். அவங்க இல்லைன்னா அந்தக் கதையை நகர்த்தியிருக்கவே முடியாது. அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அவங்க இல்லைன்னா, இவங்கன்னு இருந்திருக்கலாமே தவிர, `புதிய பாதை'க்கு பாப்புலர் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கணும், மக்களுக்கு அவங்க மேல நல்ல அபிப்ராயம் இருக்கணும், அவங்களுக்கு இந்த ரோல் சூட்டபிளா இருக்கணும், பெண்கள் மத்தியில நல்ல அபிப்ராயம் உள்ளவங்களா இருக்கணும்னு தேடித்தான் அவங்களை ஃபிக்ஸ் பண்ணோம். அவங்க சிறப்பாவே அமைஞ்சிருந்தாங்க. `பொண்டாட்டி தேவை' படத்துல முதல் மூணு நாள் கெளதமிதான் நடிச்சாங்க. அப்புறம் என்னவோ தெரியல அவங்களால சரியான நேரத்துக்கு வர முடியலைன்னு ஏதோ ஒரு விஷயம். அவங்களுக்கு பதிலா அஷ்வினினு ஒருத்தரைப்போட்டு படம் எடுத்தேன். `உள்ளே வெளியே' படத்துலயும் முதல்ல சுகன்யாதான் நடிச்சாங்க. படம் ஆரம்பிச்ச சில நாள்கள்ல ஏதோ காரணங்களால அவங்களால நடிக்கமுடியல. அதுக்கு அப்புறம்தான் ஐஸ்வர்யா வந்தாங்க. சுகன்யா இருக்கும்போது காஸ்ட்யூம் வேற மாதிரி இருந்தது. ஆனா, ஐஸ்வர்யா வந்ததும் காஸ்ட்யூம்ஸ்லாம் அப்படியே கிளாமரா மாறிடுச்சு. `சரிகமபதநி' படத்துலயும் இதே மாதிரி கஸ்தூரிதான் நடிக்கிறதா இருந்தது. அப்புறம் ரோஜா நடிச்சாங்க.

அப்புறம் `குடைக்குள் மழை'... அன்றைய டயானா.. இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான் நடிக்கிறதா இருந்தாங்க. அடுத்து அவங்களை நான் நேர்ல சந்திக்கணும். ஆனா, அவங்க வர முடியாத சூழல். போன்ல நான் அவங்ககிட்ட `இல்லல்ல... நீங்க வந்திருக்கணும். வரலைன்னா முன்கூட்டியே சொல்லியிருக்கணும்'னு ஸ்ட்ராங்க சொல்லிட்டு மதுமிதாவை வெச்சு எடுத்தேன். இப்ப நயன்தாராவோட வளர்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்களோட அப்பவே படம் பண்ணியிருந்தா இன்னும் ரெண்டு மூணு படங்கள் தொடர்ந்து பண்ணியிருக்கலாமோனு தோணும். ரொம்ப தொழில்பக்தி உள்ள நடிகை. `நானும் ரவுடிதான்' படத்துல பார்க்கும்போது `நல்லவேளை... நீங்க என் படத்துல நடிக்கல. நடிக்காததுனாலதான் இவ்ளோ உயரத்துக்கு வந்துட்டீங்க'னு சொன்னேன். பலர் இப்படி என் படங்கள்ல நடிக்கமுடியாமப் போனதுக்கு அந்த நேரத்துல ஸ்ட்ராங்கான ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.''

``புரிதல்கள் திரிதல்களாகிறதே. அதுவும் நிரந்தரப் புரிதல்களாக மாற என்னதான் வழி? பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்களே, இருவர் சேர்ந்து பேச உட்கார்ந்தால்தானே அது முடியும். ஒருவர் பேச்சுக்கு வரவே மாட்டேன் என்றால் எப்படிப் பேசித் தீர்ப்பதாம்?'' - கவிஞர் ராம்க்ருஷ், சென்னை

Parthiban, Meena
Parthiban, Meena

``புரிதல்கள் திரிதல்கள் ஆகின்றன. சம்டைம்ஸ் மன எரிதல்கள் ஆகின்றன. அதை சரிதல்கள் ஆக்குவது எப்படி? நானும் யோசிச்சிப் பார்க்குறேன். நிரத்தரப்புரிதல்... நிரந்தரம்னு ஒண்ணு இந்த உலகத்துல இல்லைன்னு முதல்ல புரியணும். எல்லாமே தற்காலிகமானதுதான். நிரந்தரம்னு எதவுமே இல்லை. ரெண்டு பேர் உட்கார்ந்து பேசினால்தான் தீர்வுக்கு வரமுடியும். பேசுறதுக்கே வரமாட்றாங்கன்னா, பேசுறதுக்கான சூழலை ஏற்படுத்த முடியலைன்னா, அதுக்குக்கூட கன்வின்ஸ் பண்ணமுடியலைன்னா எந்த சுமுகமான உறவுக்கும் வந்துடமுடியாது. முதல்ல பேச கன்வின்ஸ் பண்ணணும். என்னோட `முதல் பார்வை'ல ஒரு காட்சி. என்னோட குருநாதர் பாக்யராஜ் சார் ரொம்ப ரசிச்ச காட்சி. அது இன்னும் படமாகல. ஒரு ஏழை, பணக்காரப்பெண்ணைக் காதலிக்கிற காட்சிதான். இவங்க காதல் அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சிடும், அந்தப் பொண்ணு அந்தப் பையனை எங்க அப்பாவை அவர் ஆபீஸ்ல போய் பாருன்னு சொல்லுவா. பையன் ஆபீஸுக்குப் போவான். ப்ரியா இண்டஸ்ட்ரீஸ்னு 15 கம்பெனிகளோட பேர் இருக்கும். தன்னோட சேர்ல ஹீரோவை உட்காரச் சொல்லிட்டு, `நீங்க இந்தக் கம்பெனியோட முதலாளி. நீங்க உங்கப் பொண்ணுக்கான மாப்பிள்ளையைப் பார்க்குறீங்க. அவர்கிட்ட நீங்க என்னலாம் கேள்வி கேட்பீங்க?'னு ரொம்ப புத்திசாலித்தனமா கேட்பார். உடனே அந்த ஹீரோ, `கிளர்க்கை வேலைக்கு எடுக்குற மாதிரி என்னோட பொண்ணுக்கான மாப்பிள்ளையை ஆபீஸுக்கு கூப்பிட்டுப் பேசமாட்டேன். வீட்டுக்குதான் கூப்பிடுவேன்'னு சொல்லுவான். உடனே கட். இப்போ வீட்ல அடுத்த காட்சி. `நான் உங்க திருமணத்துக்கு சம்மதிப்பேன்னு நீ நம்புறீயா'ன்னு அந்த அப்பா கேட்பார். `நிச்சயமா சம்மதிப்பீங்க... இல்லைன்னா நீங்க வீட்டுக்கு கூப்பிட்டிருக்க மாட்டீங்க'ன்னு சொல்லுவான். உங்களுக்கு சம்மதம் வந்தப்பிறகுதான் இந்தப் பேச்சுவார்த்தையே நடக்குதுன்னு சொல்லுவான். அதுமாதிரி இரண்டு பேரும் கலந்து பேசுறதுக்கு சுமுகமான சூழலை உங்களைச் சுற்றி ஏற்படுத்துங்க. அப்பதான் அது ஃப்ரூட்ஃபுல்லா நடக்கும். ஆல் தி பெஸ்ட்.''

``நீங்க கடந்து வந்த பாதையில் எத்தனையோ பேரை சந்திச்சிருக்கலாம். ஆனால், நீங்க ஆச்சர்யமா பாத்த சாதாரணமான மனிதன் யார்? - மொகமது ஆரிஃப், வத்தலகுண்டு

``சாதாரண மனிதர். மிகப்பெரிய மகான் திரு.சுந்தரம் சார். ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர். என் முதல் படமான `புதிய பாதை'யின் தயாரிப்பாளர். என்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். என்னுடைய கனவுகளுக்கு உயிர் கொடுத்தவர். என்னதான் நான் பாக்யராஜ் சார்கிட்ட இருந்து வந்திருந்தாலும் வெளியிலப்போனப்பிறகு யாரை சந்திச்சு வாய்ப்பு கேக்குறதுன்னு எனக்குத் தெரியல. ரெகுலர் ஃபார்மேட்ல படம் பண்ற பல தயாரிப்பாளர்களை சந்திச்சிட்டேன். அவங்க நம்மளை நிச்சயம் திரும்பக்கூப்பிடமாட்டாங்கன்னு தெரிஞ்சும் போய் கதை சொல்லுவேன். ஆனா, சுந்தரம் சார்கிட்ட நான் கதை சொன்னதும், உடனே 'நான் ரெடி... பார்ட்னர்ஷிப்ல நான் இந்தப் படத்தைப் பண்ணத் தயாரா இருக்கேன்'னு சொன்னார். சத்யராஜ், அர்ஜுன் நடிச்சா நல்லயிருக்கும்னு சொன்னேன். `நீ நடிச்சா நான் எடுக்குறேன்'னு சொன்னார். ஒரு கிங் மாதிரியிருப்பார். டெசிஷன் மேக்கிங்ல அப்படி ஒரு தெளிவு. படத்துக்கு இடையிடையே நிறைய தடங்கல்கள் வரும். அவர் ஆபீஸ்ல போய் நிப்பேன். கெட் அவுட்னு சொல்லுவர். ரெண்டு நாள் அங்கயே போய் நிப்பேன். என்னைப் புரிஞ்சிப்பார். என் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சதும் திரும்ப வேலைகள் தொடங்கும். சுந்தரம் சார் மாதிரி இப்ப ஒருத்தர் கிடைக்கமாட்டாரானு தோணும். நான் யார்னு தெரியாது, எனக்கு என்ன வியாபாரம் இருக்குன்னு தெரியாதபோது என் திறமைகளின் மீது நம்பிக்கை வைத்தவர். நான் படம்லாம் பண்ணி கார் வாங்கிட்டு கார்ல போவேன். அவர் அப்பவும் ஸ்கூட்டர்லதான் போவார். யாராலும் விலைக்கு வாங்க முடியாத மாபெரும் மனிதர். ரொம்ப எளிமையானவர். மறுபடியும் வாழ்க்கைல சுந்தரம் சார் மாதிரியான மனிதரைப் பார்ப்பேனானுதான் தேடிட்டிருக்கேன்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.