சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: ஜடா

Kathir
பிரீமியம் ஸ்டோரி
News
Kathir

‘ஹீரோ காதலித்தே தீரவேண்டும்’ என்பதற்காகவே ஒரு ஹீரோயின்.

‘ஸ்போர்ட்ஸ் ஜானரில் ஒரு பேய்ப் படம்’ என்கிற வித்தியாச காம்போவில் வெளிவந்திருக்கும் படம்தான் ‘ஜடா.’

சந்தோஷ் டிராஃபியில் விளையாடும் லட்சியத்தோடு கால்பந்தாட்டப் பயிற்சி பெறும் இளைஞன் கதிர். ஆனால், ரூல்ஸே இல்லாமல் அடாவடித்தனமாக நடக்கும் உள்ளூர் செவன்ஸ் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறார். கோபமாகத் தடுக்கிறார் கோச். அவர் தடுப்பதற்கும், கதிர் விளையாடியே ஆகவேண்டும் எனத் துடிப்பதற்கும் ஒரே காரணம்தான். சேது என்கிற முன்னாள் கால்பந்தாட்ட வீரனின் திடீர் மரணம்தான் அது. ஆளையே கொல்லும் ஆக்ரோஷ செவன்ஸில் கதிர் கோல் மழை பொழிய, பரம எதிரிகளை அரை இறுதிப்போட்டியில் சந்திக்க நாள் குறிக்கப்படுகிறது. ஆனால் இங்குதான் ட்விஸ்ட்டே. இரண்டாம் பாதியில், படம் சென்னையிலிருந்து சாத்தான்குளத்துக்கு பஸ் ஏறுகிறது. அங்கே அமானுஷ்யமான ஒலிகள், குறுக்கா மறுக்கா ஓடும் எலிகள், குய்யா முய்யா எனக் கத்தும் கிளிகள் ஒருபக்கம் பயமுறுத்த முயல, இன்னொருபக்கம் சேதுவின் மரணம் குறித்த சஸ்பென்ஸ் உடைய, எதிரியைக் கதிர் என்ன செய்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

செவன்ஸ் ஃபுட்பால் என்கிற கான்செப்ட்டை எடுத்துக்கொண்ட இயக்குநர், அதை மட்டுமே எடுத்துக்கொண்டு கதை சொல்லியிருக்கலாம். இல்லையென்றால் இது பேய்ப்படம்தான் என ஆரம்பத்திலிருந்தே தீர்மானித்து அதை நோக்கித் திரைக்கதை அமைத்திருக்கலாம். சுவாரஸ்யமற்ற திரைக்கதை, படத்தின் பெரிய பலவீனம்.

ஜடா
ஜடா

நடிக்க அதிக வாய்ப்பில்லாமல், பயப்படுவது, கோபப்படுவது, வருத்தப்படுவது என வெறுமனே வந்துபோகிறார் கதிர். ‘ஹீரோ காதலித்தே தீரவேண்டும்’ என்பதற்காகவே ஒரு ஹீரோயின். அதனாலேயே ரோஷிணி பிரகாஷ் முதல் மூன்று சீன்களுக்குப் பிறகு... ‘டேய் எப்படா சென்னைக்கு வருவ’ என போனில் மட்டும் பேசுகிறார். நாலைந்து கவுன்ட்டர் வசனங்கள் தவிர யோகிபாபுவும் சலிப்பூட்டவே செய்கிறார். நண்பர்கள், பயிற்சியாளர், வடசென்னை வில்லன் என ஏராளமான பாத்திரங்கள் இருந்தும் யாருக்குமே முக்கியத்துவம் இல்லாமல் கதை நகர்கிறது. ஃப்ளாஷ்பேக்கில் வந்து போகும் கிஷோர்கூட ஏமாற்றமே தருகிறார்!

`விக்ரம் வேதா’ ஃபீவரிலேயே சாம் சி.எஸ். அமைத்திருக்கும் பின்னணி இசை கூட ஓகேதான். ஆனால் பாடல்கள் நினைவில் தங்காமல் மறைகின்றன.

Kathir
Kathir

‘ஸ்போர்ட்ஸ் ஜானர்’, ‘பேய் ஜானர்’ என இரண்டு கோல் போஸ்ட்டிலும் மாறி மாறி வீசப்பட்டு, ஏகப்பட்ட அடிவாங்கியிருக்கிறது ‘ஜடா.’