சினிமா
Published:Updated:

ஜெய் பீம் - சினிமா விமர்சனம்

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா

அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட நாயகனாக சூர்யா.

விளிம்புநிலையில் தத்தளிக்கும் உயிர்களை இச்சமூகத்தோடு இறுக்கமாய் இணைக்கும் சட்டத்தின் தொப்புள்கொடியை நம்பிக்கையாய் பற்றிக்கொள்ளும் கரமே இந்த ‘ஜெய் பீம்’.

வெயில் காயும் விழுப்புரத்தின் கோணமலையில் வாழ்ந்து வரும் இருளர்களுக்கு வயல்களில் எலி பிடிப்பதும் வீடுகளில் பாம்பு பிடிப்பதும் எஞ்சிய நேரங்களில் செங்கல் சூளை போன்ற இடங்களுக்கு கூலி வேலைக்குப் போவதுமாய் வாழ்க்கை நகர்கிறது. வறுமைக்குக் கொடுத்த நேரம் போக மீதியைக் காதலுக்கு மொத்தமாய்க் கொடுத்துக் கொண்டாடும் ராசாக்கண்ணு - செங்கேணி குடும்பமும் அவர்களுள் ஒன்று. இந்தத் தம்பதியின் அதிகபட்ச ஆசை, மழைக்கு ஒழுகாத ஒரு கல்லு வீடு. அதற்கான முதல் செங்கல்லை சம்பாதிக்கும் ராசாக்கண்ணு மீதியை சேமிக்க தூரத்துச் செங்கல் சூளைக்கு வேலைக்குப் போகிறார். அதேசமயம் ஊர்த்தலைவர் வீட்டில் நகை, பணம் காணாமல் போக, சந்தேகத்தின் நிழல் ஊரைவிட்டுப் போன ராசாக்கண்ணு மேல் விழுகிறது. ஒருபக்கம் ஆளுங்கட்சியின் அழுத்தம், மறுபக்கம் தங்கள் மேல் படியும் கையாலாகாதவர்கள் முத்திரை - இரண்டும் சேர்ந்து காவல்துறையை வெறி கொள்ளச் செய்ய, அதன்பின் நடக்கிறது கொடூரமான மனித வேட்டை. இரக்கமற்று பரபரத்து அலையும் நெடுஞ்சாலை வாகனங்களின் சந்தடியில் அடிபட்டுத் தெறிக்கும் பரிதாப நத்தைகளைப் போலாகிறது இருளர் குடியிருப்பு. சிதைந்தது போக, எஞ்சிய சக்தியைத் திரட்டி அவர்கள் கடைசிப் புகலிடமான நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறார்கள். அந்த சட்ட உலகம், இந்தத் தொல்குடிகளுக்கு ஆதரவளித்து நியாயம் தருகிறதா என்பதே ‘ஜெய் பீம்’ பேசும் பயணம்.

ஜெய் பீம் - சினிமா விமர்சனம்

அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட நாயகனாக சூர்யா. நீதிமன்றத்தில் எதிராளிகளைத் துளைத்தெடுக்கும் இரும்புக்கணை, வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்காக இளகிக் கரையும் பனித்துளி என இருவேறு பரிமாணங்கள். நீதித் தராசைப் போலவே இருபக்கத்தையும் சமமாய் சுமந்து மிளிர்கிறார். பாதிக்கப்பட்ட வர்களின் வலி பேசும் கதையில் தன் பங்கு எதுவரையில் என உணர்ந்து பிறருக்கு வெளிகொடுத்து நடித்திருக்கும் முதிர்ச்சி பாராட்டுக்குரியது.

‘ஜெய் பீம்’ என ஓங்கி உயர்ந்திருக்கும் கரத்தின் நாடி, நரம்பு, அதனூடே ஓடும் ரத்தம் அத்தனையுமே லிஜோமோள் ஜோஸ்தான். இருளர் பழங்குடிப் பெண் செங்கேணியாக ஆற்றாமையில் பொங்கும் முகபாவனைகள், வேதனையில் துடிக்கும் உடல்மொழி என ஒவ்வொரு காட்சியிலும் பார்ப்பவர்களின் இதயத்தில் வலி விதைத்துச் செல்கிறார். துறுதுறு காட்டுராசா ராசாக்கண்ணுவாக மணிகண்டன். வசன உச்சரிப்புகள் தொடங்கி தாங்கிக் குதித்து நடக்கும் நடை வரை ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிகிறது அவரின் மெனக்கெடல். பிரகாஷ் ராஜின் அனுபவத்திற்கு மூத்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை வெகு இயல்பாக, அழகாக சுமந்திருக்கிறார். அதிகாரத்தையே தடித்த சீருடையாய் அணிந்திருக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் பாத்திரத்தை தமிழ் பிரதிபலித்திருக்கிறார். மொசக்குட்டி, இருட்டப்பன் தொடங்கி மண்வாசத்துடன் அசல் மனிதர்கள் ஏராளம்பேர் திரையில்.

ஒருபுறம் நெகிழ்வான மண்ணின் மைந்தர்களும் அவர்தம் கலாசாரமும், மறுபுறம் ஓங்கி உயர்ந்த இறுகிய செவ்வண்ணக் கட்டிடமும் அதுதரும் மரியாதை கலந்த அச்சமும். மூன்றாவது முனையில் இருள் சூழ்ந்த சிறையும் அதனுள் நடக்கும் அரச பயங்கரவாதமும். இந்த மூன்று பக்கங்களையும் இணைக்கும் உச்சிப்புள்ளியாய் உயர்ந்து நிற்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.

நிச்சயமாகவே சொல்லலாம், தமிழ் சினிமாவில் நீதிமன்றத்தை இவ்வளவு உயிர்ப்பாக கண்முன் கொண்டுவந்த மாயாஜாலம் இதற்குமுன் நிகழ்ந்ததில்லை என. கலை இயக்குநர் கே.கதிரின் காய்த்துப்போன கைகளோடு ஒரு கைகுலுக்கல். பிலோமின் ராஜின் இரண்டாம்பாதி படத்தொகுப்பில் பிசிறே இல்லை. ஆனால் முதல் பாதியில் உணர்ச்சிப் பிரவாகமாய் மாறியிருக்க வேண்டிய காட்சிகள் சட்சட்டென துண்டாடப்பட்டு அடுத்த நொடி வேறொரு பக்கம் பாய்வதுதான் சின்னக் குறை. ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஏமாற்றம். இறுதிக்காட்சியில் ஓலமும் நன்றியுமாய் ஒலிக்கும் ‘மண்ணிலே ஈரமுண்டு’ பெருமழைக்குப் பின்னான மென்காற்று.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் துளியும் சமரசம் கலந்திடாத இயக்குநர் த.செ.ஞானவேலின் கலைநேர்மைக்கு சாட்சி, சாதிய அதிகாரத்தைத் தோலுரிக்கும், படத்தின் முதல் காட்சி. ‘‘ஒருநாள் கூலியா ஆயிரம் ரூபாய் கூட வாங்காத பொண்ணுதான் லட்சக்கணக்குல பேரத்தொகையை மறுத்திருக்காங்க’’, ‘‘அந்த போலீஸ்காரங்க பாம்பு கடிச்சு வந்தாலும் காசு வாங்காம வைத்தியம் பார்ப்பேன் சார்’’, ‘‘எல்லா போலீஸும் மோசம்னு நினைக்கிற வக்கீலும் எல்லா வக்கீலும் மோசம்னு நினைக்கிற போலீஸும் சேர்ந்து செய்யப்போற விசாரணை’’ என்று ஞானவேலின் வசனங்கள் வலிமையானவை.

ஜெய் பீம் - சினிமா விமர்சனம்

காவல்துறை அராஜகத்தின் கோரப் பக்கங்கள் இதற்குமுன்னும் திரையில் வந்திருக்கின்றன. ஆனால் கல்வியோ பிற வசதிகளோ இன்னமும் பெரிதாய்ப் போய் சேர்ந்திடாத ஒரு சமூகத்தை காக்கிகள் தங்கள் ரத்தம் தோய்ந்த பூட்ஸ்கால்களால் நசுக்கும் கள நிலவரத்தை திரையில் சொல்லியிருப்பது இதுவே முதல்முறை. ‘என்னை பொய் கேஸ் போட்டு திருட்டுப்பட்டம் கட்டிட்டாங்க. அதுக்குப் பின்னால பள்ளிக்கூடத்தில யார் ரப்பர் காணாமப் போனாலும் என் பையைத்தான் பார்ப்பாங்க’ என்கிற சிறுவனின் இயலாமைக் குரல் நம்மை உடைத்துப்போடுகிறது.

எங்கோ ஒரு மூலையிலிருந்து எழும் கூக்குரல், அதை இருட்டிலிருந்து மீட்க ஓடும் சட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் - இவர்களைப் பிணைத்தவகையில் மிகத் தெளிவாக ஒரு வழக்கு விசாரணையை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் தவறினாலும் ஆவணப்படமாகிவிடும் கதைக்களத்தை விறுவிறுப்பான புனைவாக மாற்றியிருப்பதில் தெரிகிறது ஞானவேலின் சாமர்த்தியம். பிற்பாதியில் ஒட்டாமல் வரும் பாடல் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

ஜெய் பீம் - சினிமா விமர்சனம்

அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதான அத்துமீறலைப் பதிவுசெய்வதோடு, போராடி நீதியைப் பெறமுடியும் என்னும் நம்பிக்கையை விதைத்திருக்கும் ‘ஜெய்பீம்’ கொண்டாடப்படவேண்டிய திரைப்படம்.