
இடைவேளைக் காட்சியைத் தவிர எங்கும் அழுத்தம் இல்லாத, எளிதில் யூகிக்க முடியும் திரைக்கதை பெரும் பலவீனம்.
சில ஆண்டுகளாகவே சென்னையின் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நகருக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்படும் மக்களின் துயரங்களைச் சொல்வதாய் நினைத்து, திசைமாறிப் பயணித்திருக்கும் படைப்பு ‘ஜெயில்.’
சென்னைப் பூர்வகுடிகள் மீள்குடியேற்றம் செய்யப்படும் காவேரி நகரில் போதைப்பொருள் விற்கும் இரு கும்பல்களுக்கு இடையே தொடர்மோதல். இருபுறமும் உயிர்கள் பலியாக, இதைக்கொண்டு ஆதாயம் அடைவது சுயநல போலீஸ் அதிகாரிதான் என்பது கதை.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் மெட்ராஸ் மண்ணின் மொழி பேச நிறையவே எத்தனிக்கிறார். ஆனால் அதில் பாதியளவு கவனம்கூட உடல்மொழியில் செலுத்தாததால், பல படங்களில் அவர் ஏற்று நடித்த விடலைப்பையன் கேரக்டராகவே தேங்கிப்போகிறார். நாயகி அபர்ணதி துணிச்சல், காதல், கோபம், சோக உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்துகிறார். நந்தன் ராம் உறுத்தலில்லாத நடிப்பு. ராதிகா வரும் காட்சிகளிலெல்லாம் அவரின் அனுபவம் முன்னிற்கிறது. ஆனால் அழுத்தமாக நடிப்பதற்கான பெரிய வாய்ப்புகள் இல்லை. ரவிமரியா கோபக்கார வில்லனா காமெடி வில்லனா என்கிற குழப்பமே கதை போகும் போக்கையும் பாதிக்கிறது. இயல்பாய் படத்திலிருக்கும் ஒரே இடம் `பசங்க’ பாண்டி - சரண்யா ரவிச்சந்திரன் இடையில் நடக்கும் காட்சிகள் மட்டுமே!
‘காத்தோடு காத்தானேன்’ பாடல் மட்டும் ஜி.வி முத்திரை. மற்ற பாடல்களிலும் பின்னணி இசையிலும் அது காணாமல்போகிறது. காட்சிகளுக்குப் பொருந்தாமல் வரும் பாடல்கள் உறுத்தல். இடைவேளைக்கு முன்னால் வரும் சண்டைக்காட்சியில் மட்டும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவும் எடிட்டர் ரேமண்ட் டெர்ரிக் கோஸ்டாவும் நன்றாகவே தெரிகிறார்கள்.
இடைவேளைக் காட்சியைத் தவிர எங்கும் அழுத்தம் இல்லாத, எளிதில் யூகிக்க முடியும் திரைக்கதை பெரும் பலவீனம்.

குப்பைகளைப் போல் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பூர்வகுடி மக்கள் தங்கள் பணிவாய்ப்பையும் தங்கள் குழந்தைகளின் கல்வியையும் இழந்து, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுறுவதுதான் யதார்த்தம். ஆனால் படத்தின் தொடக்கத்து வாய்ஸ் ஓவரிலும் படம் முடிந்தபிறகு காட்சிப்படுத்தப்படும் பேப்பர் கட்டிங்கிலும் மட்டுமே இது இருக்கிறது. இடையில் இருப்பது வழக்கமான ஒரு மசாலா கதை மட்டுமே.
எளிய மக்களைக் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்கும் போலீஸ் மற்றும் பொதுப்புத்திக்கு மேலும் வலுச்சேர்க்கும் இயக்குநர் வசந்தபாலனின் பார்வையால் இதுபோன்ற கலைப்படைப்புகளே அந்த மக்களுக்கு ‘ஜெயில்’ ஆகிவிடுகின்றன.