Published:Updated:

என்ன 'கொரில்லா' டிரெய்லர் முழுக்க அரசியலா இருக்கு!

வரவர வடபழனியிலோ, கோடம்பாக்கத்திலோ ஒரு குழந்தை அழுதால்கூட அது அரசியல் நையாண்டியோடுதான் அழுகிறது. தமிழ் சினிமா நம்மூர் அரசியலைப் படுத்தும் பாடு அப்படியிருக்கிறது.

என்ன 'கொரில்லா' டிரெய்லர் முழுக்க அரசியலா இருக்கு!

காமெடி படம், சீரியஸ் படம், பேய் படம், அடல்ட் படம் என எந்தப் படமாக இருந்தாலும், அதற்கு மாட்டுக்கறி தடையும், இந்தித் திணிப்பும், ஜி.எஸ்.டியும், டீமானிட்டைசேஷனும் பலியாகிச் சிக்கிச் சின்னாபின்னமாகின்றன. இன்று வெளியாகியுள்ள ஜீவாவின் 'கொரில்லா' திரைப்பட முன்னோட்டமும் தன் பங்குக்கு அரசியலைக் கிளறியுள்ளது.

'பாங்க் ஆஃப் இந்துஸ்தானி'ல் கொள்ளையடிக்கும் திருடர்கள், போலி மருத்துவர் பி.ஹெச். ராஜா, மிச்சர் சாப்பிடும் குங்குமம்-விபூதியிட்ட வெள்ளை சட்டை அரசியல்வாதி, விவசாயக் கடனை ரத்து செய் என்ற பதாகைகளை ஏந்திய போர்ரட்டக்காரர்கள் என கிடைத்த கேப்பிலெல்லாம் அரசியலை வாரியிருக்கிறார்கள்.

A still from the trailer
A still from the trailer

டிரெயிலரின் மற்றுமொரு ஹைலைட் என்னவென்றால், தொடங்கும்போது 'ப்ரே ஃபார் நேசமணி' எனக் கூறவிட்டு தொடங்குகிறார்கள். என்றாலும், எப்போதும்போல் யோகி பாபுவின் உருவக் கேலியும், இரட்டை அர்த்த வசனங்களையும் சேர்த்தே நிரப்பியிருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பை அறிவித்த நடுவணரசின் நடவடிக்கைகளைக் குறித்து, அதனால் ஏற்பட்ட பின்விளைவு, அதைச் சுற்றிய ஒரு வங்கிக் கொள்ளையை மையப்படுத்தியது இந்தப் படம். வங்கிக் கொள்ளையராக வரும் ஜீவாவுக்கு, மக்கள் ஆதரவு தெரிவிக்கும் காட்சிகளை உள்ளடக்கிய இதன் முன்னோட்டத்தின் மூலம், இது ஒரு வகை 'ராபின்ஹுட்' படமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Jiiva and Shalini Pandey from Gorilla
Jiiva and Shalini Pandey from Gorilla

எல்லாவற்றுக்கும் மேலாக, அனிமல் ட்ராமா ஜானர் படமான இதில் சிம்பன்ஸி வகை குரங்கு ஒன்று காங் என்ற கொரில்லாவாக நடித்திருக்கிறது. வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் மனிதர்களுடன் காங்கும் இணைந்து அந்தக் குற்றத்தைப் புரிவதுபோலத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னோட்டம் முழுக்க காங்கின் சேட்டைகள் நிரம்பியும் இருக்கிறது. காதல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், வங்கிக் கொள்ளைக் காட்சிகள் எனப் படம் முழுக்க காங்கிற்கான முக்கியத்துவம் பரவியிருக்கும் என்றே நம்பலாம்.

டான் சாண்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, ராதாரவி, சதீஷ், ராமதாஸ், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில், ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு