Published:Updated:

கே.வி.ஆனந்த்: பாக்கெட் நாவல் டு சினிமா... புது வெளிச்சம் தந்த இயற்கையின் காதலன்! #RIPKVAnand

சமையல் உருவாகும் விதத்தை அருகிலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு தானும் ஒருநாள் சமைத்துப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் எழுவது இயல்புதானே... எனவே ஒளிப்பதிவாளர் என்கிற நிலையிலிருந்து 'சினிமா இயக்குநர்' என்கிற அடுத்த தாவலை வெற்றிகரமாக முயன்றார் கே.வி.ஆனந்த்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்தின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நடிகர் விவேக், இயக்குநர் ஜனநாதன், இயக்குநர் தாமிரா என்று தமிழ் சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்களை நாம் அடுத்தடுத்து இழந்து கொண்டிருக்கிறோம். இந்த வரிசையில் கே.வி.ஆனந்தும் இணைந்தது துரதிர்ஷ்டமானது.

ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஆகிய அடையாளங்களைத் தாண்டி பலர் அறியாத இன்னொரு முக்கியமான அடையாளமும் கே.வி.ஆனந்திற்கு இருக்கிறது. ஆம். அடிப்படையில் அவர் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர். உண்மையில் அவரது கலைப்பயணம் புகைப்படங்களின் மூலம்தான் துவங்கியது. "உனக்கு எது சந்தோஷம் தருதோ... அதுதான் உன் தொழில்!" என்கிற ஆசியுடன் தனது தந்தையிடமிருந்து பரிசாகப் பெற்ற கேமராவை வைத்து இந்தியா முழுதும் சுற்றி புகைப்படங்களை எடுத்த ஆனந்த் அதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிறகு தமிழின் அனைத்து முன்னணி இதழ்களின் அட்டைகளையும் கட்டுரைகளையும் கே.வி.ஆனந்த்தின் புகைப்படங்கள் அலங்கரித்தன. தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசித்தவர்களுக்கு கே.வி.ஆனந்த் என்கிற பெயர் முன்பே பரிச்சயமாகியிருக்கும். அதுவரையான வணிக நாவல்கள் என்பது சுமாரான கோட்டோவியங்களின் மூலமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாணியை மாற்றி அட்டைகளுக்கு என்று பிரத்யேகமான புகைப்படங்களை எடுக்கும் புதிய பாணியை உருவாக்கினார் ஆனந்த் . இதற்காக மிகவும் மெனக்கெட்டார்.

நாவலின் உள்ளடக்கத்தை கவனமுடன் வாசித்து அந்தச் சூழலுக்கேற்ற புகைப்படங்களை அமைத்தார். நிஜ மாடல்களை உபயோகித்து அவர்களின் முதுகில் கத்தி சொருகியிருப்பது போலவும் ரத்தம் வடிந்திருப்பது போலவும் இருளின் மறைவில் ஒரு துப்பாக்கி நீட்டியிருப்பது போலவும் என ஆனந்த் உருவாக்கிய புகைப்படங்களுக்கு என தனியான ரசிகர்கள் உருவாகினர். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் ஆனந்த்தின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு விதம் விதமாக ஊக்கமளித்தார்கள்.

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

புகைப்படக் கலைஞராக இருந்த ஆனந்த், ஒளிப்பதிவாளராக மாறியதென்பது ஒருவகையில் இனிய விபத்தே. ஒரு முன்னணி வார இதழில் தான் விரும்பிய பணி கிடைக்காத வெறுப்பில் அந்தமானுக்கு கப்பல் ஏறி அங்கும் நிறைய புகைப்படங்களை எடுத்த ஆனந்திற்கு திடீரென ஒரு யோசனை. ''நாம் ஏன் சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆகக்கூடாது?"


உடனே அங்கிருந்து கிளம்பி அவர் சென்ற இடம் மிக முக்கியமானது. ஆம்... இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவராக மதிக்கப்படும் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இணைந்தார் ஆனந்த். இயல்பிலேயே தன்னிடம் அமைந்துள்ள திறமை காரணமாக அங்கு விரைவிலேயே முதன்மை மாணாக்கனாக தேறினார். ஒளியின் ரகசியங்களைப் புரிந்து கொண்ட ஆனந்தால் சினிமா ஒளிப்பதிவையும் திறம்பட கற்றுக் கொள்ள முடிந்தது.

இந்தச் சமயத்தில்தான் 'தேன்மாவின் கொம்பத்து' (1994) என்கிற மலையாளத் திரைப்படத்திற்காக ஒளிப்பதிவு செய்யக் கேட்டு ஸ்ரீராமை அணுகினார் பிரியதர்ஷன். தன்னுடைய சீடர்களை சிறப்பான திசையை நோக்கி நகர்த்திச் செல்வதில் சிறந்தவரான ஸ்ரீராம், "கே.வி. ஆனந்த்தை அழைத்துச் செல்லுங்கள்" என்று கைகாட்டினார். அது குருவின் ஆசி பரிபூர்ணமாக கிட்டிய தருணமாக இருந்திருக்க வேண்டும். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒளிப்பதிவிற்கான தேசிய விருதை வென்று குருவின் பெயரைக் காப்பாற்றினார் ஆனந்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீராமிடம் தொழில் கற்றுக் கொண்டாலும் தனக்கான பிரத்யேக பாணியை முதல் படத்திலேயே கே.வி. ஆனந்த் உருவாக்கிக் கொண்டார் என்பதை 'தேன்மாவின் கொம்பத்து' திரைப்படத்தின் காட்சிகளைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். இயற்கையின் மிகச்சிறந்த காதலனாக இருந்த ஆனந்த், நிலப்பரப்புகளின் ஒவ்வொரு துளியையும் மிகுந்த அழகியலுடன் அதில் பதிவு செய்திருப்பார்.

செல்லும் திசை அனைத்திலும் வெற்றி வாகை சூடுவதுதானே ஒரு திறமைசாலிக்கு அழகு?! மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி என்று தான் ஒளிப்பதிவு செய்த ஒவ்வொரு திரைப்படத்திலும் அழுத்தமான முத்திரைகளைப் பதித்தார். 'காதல் தேசம்' (1996) திரைப்படத்தில் ''ஹலோ டாக்டர்... ஹார்ட்டு வீக் ஆச்சே'' என்கிற பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை இன்றைக்குப் பார்த்தாலும் அத்தனை நவீனமாகவும் புத்துணர்ச்சி வழிவதாகவும் இருக்கிறது. சிவாஜி (2007) படத்தின் 'ஆம்பல் ஆம்பல்' பாடலை கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதம் பிரமிப்பைத் தருவதாக இருக்கும். இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 'முதல்வன்' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளிலும் பாடல்களிலும் இளம் ஒளிப்பதிவாளர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

சமையல் உருவாகும் விதத்தை அருகிலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு தானும் ஒருநாள் சமைத்துப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் எழுவது இயல்புதானே... எனவே ஒளிப்பதிவாளர் என்கிற நிலையிலிருந்து 'சினிமா இயக்குநர்' என்கிற அடுத்த தாவலை வெற்றிகரமாக முயன்றார் கே.வி.ஆனந்த்.

சிவாஜி - ரஜினி, விவேக், ஸ்ரேயா
சிவாஜி - ரஜினி, விவேக், ஸ்ரேயா

'கனா கண்டேன்', 'அயன்', 'கோ', 'மாற்றான்', 'அநேகன்', 'கவண்', 'காப்பான்' என்று அவர் இயக்கிய ஏழு திரைப்படங்களுமே வணிக ரீதியான வரவேற்பைப் பெற்றன. இதில் 'அயன்', 'கோ' ஆகிய இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்தது. சூர்யாவின் கலைப் பயணத்தில் 'அயன்' ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மலைச்சிகரத்தை நோக்கி நடக்கும்போது சில சறுக்கல்களையும் சந்தித்துதானே ஆக வேண்டும்? இந்த நோக்கில் 'மாற்றான்', 'கவண்', 'காப்பான்' போன்ற திரைப்படங்கள் குறித்து அதிருப்தியான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. தனது முந்தைய திரைப்படங்களை அடுத்து வரும் திரைப்படங்களில் தானே கிண்டல் செய்து கொள்ளும் ஆனந்த் இவற்றையும் ஓர் அனுபவமாகவே எடுத்துக் கொண்டார்.

கே.வி.ஆனந்த் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமுமே ஓர் ஆழமான சமூக விஷயத்தை கருப்பொருளாகக் கொண்டிருக்கும். முதல் படமான 'கனா கண்டேன்' இன்றைக்குப் பார்த்தாலும் புத்துணர்ச்சியோடு இருக்கக்கூடிய அருமையான திரைக்கதையைக் கொண்டது. 'கந்துவட்டி' பற்றி இந்தத் திரைப்படம் பிரதானமாக பேசியிருந்தாலும் கூடவே நீர் அரசியலையும் பேசியிருப்பார் ஆனந்த். வருங்காலத்தில் உலகப் போர் நிகழ்வதற்கு காரணமாக நீர் பற்றாக்குறை இருக்கலாம் என்றும் கடல்நீரை குடிநீராக்குவது பற்றியும் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம் அல்லவா... இதை தனது முதல் படத்திலேயே பேசி விட்டார் ஆனந்த்.

'குருவி' என்று அழைக்கப்படும் சிறு கடத்தல் தொழில் செய்பவர்களைப் பற்றி 'அயன்' திரைப்படத்திலும், ஒரு பத்திரிகை புகைப்படக்கலைஞர் அரசியல் சதுரங்க ஆட்டத்திற்குள் சிக்குவதைப் பற்றி 'கோ' திரைப்படத்திலும் பேசினார். ஒரே மாதிரியான தோற்றங்களைக் கொண்ட இரட்டை நாயகர்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு புதிதான விஷயமல்ல. ஆனால் Conjoined twins எனப்படும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை நாயகர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது 'மாற்றான்'தான். பூர்வஜென்ம காதலை வைத்து உருவாக்கப்பட்ட 'அநேகன்', தங்களின் வணிகத்திற்கு ஏற்ப செய்திகளைத் திரிக்கும் ஊடகத்துறையின் ஊழலை அம்பலப்படுத்தும் 'கவண்', SPG எனப்படும் சிறப்பு நிலை காவல்அதிகாரிகளை பெருமைப்படுத்திய 'காப்பான்' என்று ஆனந்த் ஒவ்வொரு ஏரியாவிலும் வித்தியாசமாக கில்லியடிக்க முயன்றிருக்கிறார்.

தமிழில் சினிமா தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்னும் அம்சம், பல இயக்குநர்களை அந்தச் சமயத்தில் தமிழில் தலைப்பு சூட்ட வைத்தாலும் அதிலும் தன் தனித்தன்மையைக் காட்டினார் ஆனந்த். 'கோ', 'அயன்' என்று அவர் வைத்த ஒவ்வொரு தூய தமிழ் தலைப்புமே சராசரி பார்வையாளர்களை நின்று திரும்பிப் பார்க்க வைத்தன.

கதை, திரைக்கதை ஆசிரியர்களுக்கு இன்றும் முதல் மரியாதை தருகிறது ஹாலிவுட் சினிமா. ஒரு ஸ்கிரிப்ட்டை செப்பனிட்டு இறுதி செய்து விட்டுத்தான் அடுத்த நிலைக்கு அவர்கள் நகர்வார்கள். இதுபோல் கதாசிரியர்களுக்கு மரியாதை தரும் கலாசாரம் தமிழ் சினிமாவிலும் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று வரிசையாக டைட்டில் கார்டு போட்டுக் கொள்ளும் மோசமான போக்கு இயக்குநர்களைப் பிடித்து ஆட்டியது. காரணம் இது மட்டுமல்ல. அந்தப் படம் ஹிட் அடித்து விட்டால் அந்தக் கதைக்கான ரீமேக் உரிமையும் பல கோடிகளுக்கு விலை போகும். எனவே அரிதான சில இயக்குநர்களைத் தவிர்த்து கதாசிரியர்களைக் கிள்ளுக்கீரையாக உபயோகிக்கும் போக்கே இன்றும் நிலவுகிறது.

சூர்யா, ப்ரியதர்ஷுடன் கே.வி.ஆனந்த்
சூர்யா, ப்ரியதர்ஷுடன் கே.வி.ஆனந்த்

இந்தச் சூழலில் தனது அனைத்துத் திரைப்படங்களிலும் கதாசிரியர்களை தனியாக உபயோகிப்பதில் முன்னுதாரணமாக இருந்தார் ஆனந்த். க்ரைம் நாவல் காலத்திலிருந்தே பழக்கம் இருந்த சுபா என்கிற இரட்டை எழுத்தாளர்கள்தான் ஆனந்தின் பெரும்பாலான படங்களின் பின்னணியில் இயங்கினார்கள். கே.வி. ஆனந்தின் கடைசித் திரைப்படமான 'காப்பான்' படத்தில் பட்டுக்கோட்டை பிரபாகருடன் கூட்டணி சேர்ந்தார் ஆனந்த். கபிலன் வைரமுத்து எழுதிய 'மெய்நிகரி' என்கிற நாவல்தான் 'கவண்' திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இப்படியாக கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தந்ததால்தான் ஆனந்தின் ஒவ்வொரு திரைப்படமுமே வெவ்வேறு களங்களில் வித்தியாசமாக பிரகாசித்தது.

கதாசிரியர்களைப் போலவே விசுவாசமான தொழில்நுட்பக் கூட்டணியை அமைத்துக் கொள்வதிலும் ஆனந்த் திறமைசாலியாக இருந்தார். இவரது திரைப்படங்களின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜின் அட்டகாசமான பாடல்களும் பின்னணி இசையும் பக்க பலமாக இருந்ததை எவராலும் மறுக்க முடியாது. போலவே ஆன்டனி என்கிற திறமையான எடிட்டரையும் தொடர்ந்து உபயோகித்தார் ஆனந்த். இத்தனைக்கும் ஆன்டனியின் கருத்துகளும், ஆனந்தின் கருத்துகளும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருக்கும்.

"ஆன்டனி எனது பிரியமான எதிரி. எனது தவறுகளை உடனே சுட்டிக் காட்டக்கூடியவர். ஆகையால்தான் என்னால் காட்சிகளை சிறப்பாக வடிவமைக்க முடிந்தது'' என்று ஒரு விழா மேடையில் சொன்னார் ஆனந்த். 'கோ' திரைப்படத்தில் வரும் ''அகநக சிரிப்புகள் அழகா'' என்கிற பாடலைப் பாருங்கள். ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் இணைந்து அடித்த ரகளையான சிக்ஸர் அது. ஒரு பாடலை எப்படி இளமைத் துள்ளலுடன் காட்சிப்படுத்துவது, உற்சாகமாக வடிவமைப்பது என்பதற்கான சிறந்த உதாரணம் அந்தப் பாடல். இயக்குநரின் கச்சிதமான ஒருங்கிணைப்பு இல்லாமல் இது சாத்தியமாகாது.

ஒரு முக்கியமான பாத்திரத்தை நல்லவர் போல் சித்தரித்து விட்டு பிறகு எதிர்பாராத தருணத்தில் அவரை வில்லனாகக் காட்டி அதிர்ச்சி தருவதை ஒரு வழக்கமான உத்தியாகவே ஆனந்த் வைத்திருந்தார் என்பதை அவருடைய அனைத்துப் படங்களையும் கவனித்தால் தெரியும். உதாரணமாக 'கனா கண்டேன்' திரைப்படத்தில் 'சாக்லேட் பாய்' தோற்றத்தில் முதலில் வருவார் ப்ரித்விராஜ். இன்றைக்கு மலையாளத் திரைப்பட உலகில் அவர் மிகப் பெரிய ஹீரோ. ஆனால் காட்சிகள் நகரும் போதுதான் ப்ரித்விராஜுக்குள் இருக்கிற ஆபத்தான வில்லன் மெல்ல வெளியே வருவார். 'அநேகன்' திரைப்படத்தின் 'கார்த்திக்'கையும் இவ்வகையில் சொல்லலாம்.

கே.வி.ஆனந்த் அடிப்படையில் ஒரு வெகுஜன சினிமா இயக்குநர்தான். ஆனால் தன்னுடைய திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியையும் அதன் ஒவ்வொரு துளியையும் ஸ்பெஷல் ஆக்கி விட வேண்டும் என்பதற்காக கடினமான உழைப்பைச் செலுத்தத் தவறியதில்லை. இதில் அவருக்கு வெற்றிகள் கிடைத்ததைப் போலவே எதிர் விமர்சனங்களும் கிடைத்தன. இரண்டையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தைக் கொண்டிருந்தார்.

கே.வி.ஆனந்த்:  பாக்கெட் நாவல் டு சினிமா... புது வெளிச்சம் தந்த இயற்கையின் காதலன்! #RIPKVAnand

காதலை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் கனவுடன் அதற்கான பணிகளில் சமீபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் கே.வி.ஆனந்த். ஆனால் அதற்குள் இயற்கை அவரை அழைத்துச் சென்று விட்டது. எந்த இயற்கையின் அழகைக் கண்டு ஆனந்த் ஒளிப்பதிவாளர் ஆக வேண்டுமென்று விரும்பினாரோ, அந்த இயற்கைக்குள்ளேயே கலந்து விட்டார்.

" 'கேமராவை தவிர்த்து மத்த விஷயங்கள்ல நீ ஒரு பூஜ்யம்' என்றுதான் என் அம்மாவும் மனைவியும் என்னைக் கிண்டல் செய்வார்கள்" என்று ஒரு நேர்காணலில் கூறிச் சிரிக்கிறார் ஆனந்த். இது அவரின் தன்னடக்கமாக இருந்தாலும் தன்னுடைய துறை சார்ந்து அவர் தொடர்ந்து தேடிக் கொண்டேயிருந்ததும் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருந்ததும்தான் சம்பந்தப்பட்ட துறையின் உச்சத்திற்கு அவரை அழைத்துச் சென்றது எனலாம்.

"உனக்கு எது சந்தோஷம் தருதோ... அதுதான் உன் தொழில்" என்று தன் தந்தை சொன்ன ஆசியை மெய்யாக்கினார் கே.வி.ஆனந்த். தான் விரும்பும் தொழிலில் தொடர்ச்சியாக மெனக்கெட்டால் அதற்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்பதற்கான சமகால உதாரணம் என்று 'கே.வி.ஆனந்த்'தை உறுதியாக சொல்ல முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு