Published:Updated:

`ஜோதிகாவின் கிராமத்துப் படம்!’ - முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் - சமுத்திரக்கனி காம்போ

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் கிராமத்துப் பின்னணி கதைகொண்ட படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

ஜோதிகா
ஜோதிகா

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில், ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறார், ஜோதிகா. இரண்டாவது இன்னிங்ஸ்தான் என் மனசுக்கு நெருக்கம் எனப் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கடந்த வருடம், 'நாச்சியார்', 'செக்கச் சிவந்த வானம்', 'காற்றின் மொழி' என இவர் நடித்த மூன்று படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் வெளியான 'ராட்சசி' படத்திற்கும் ஏகபோக வரவேற்பு. தற்போது, 'ஜாக்பாட்' படத்தில் ரேவதியுடன் அதகளம் செய்திருக்கும் ஜோதிகாவை ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடிவருகிறார்கள்.

சசிகுமார்
சசிகுமார்

இதைத் தொடர்ந்து, ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம், அறிமுக இயக்குநர் ஃப்ரட்ரிக் இயக்கத்தில் 'பொன்மகள் வந்தாள்' என இரண்டு படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். இப்போது, அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. 'கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.