* குற்றம் நடந்தது என்ன? டைப் கோர்ட் ரூம் டிராமாதான் படம். ஊருக்குள் வரும் வடநாட்டு சைக்கோ கொலைகாரி குழந்தைகளை கொல்வதோடு, தடுக்க வந்த இரண்டு பேரையும் சுட்டுக்கொள்கிறாள் எனப் பரபரப்பாகிறது உதகமண்டலம். உடனடியாகக் களத்தில் இறங்கும் போலீஸ் சில குழந்தைகளின் உடலைக் கைப்பற்றி, சைக்கோ கொலைகாரியை என்கவுன்டர் செய்து கேஸை முடிக்கிறது. 2004-ம் ஆண்டு நடக்கும் இந்தச் சம்பவத்தின் உண்மையை 2019-ல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து உண்மைகளை உடைக்கிறாரா ஜோதிகா என்பதுதான் படத்தின் கதை.

* படத்தின் மிகப்பெரிய பலமே ஜோதிகாதான். 2000-களில் பார்த்த ஜோதிகாவா இது? செகண்டு இன்னிங்ஸில் படத்துக்குப் படம் நடிப்பில் இன்னும் மெருகேறிக்கொண்டே இருக்கிறார் ஜோ. இந்தப் படத்தில் இன்னும் இளமையாகத் தெரிவது கூடுதல் ப்ளஸ். கண்களில் நிரந்தரமாகத் தேங்கிப்போன வலியோடு மென்சோகத்திலேயே வாழும் கதாபாத்திரம்தான் என்றாலும் கதையின் கனத்தைப் பெரும்பாலான காட்சிகளில் நமக்குள் கடத்துகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
* கோர்ட் ரூம் டிராமா பாணி கதையில் எதிர்த்தரப்பும் எக்கச்சக்க எனர்ஜியோடு இருந்தால் மட்டுமே விறுவிறுப்பு சாத்தியம். பார்த்திபன் படத்தின் அப்படியான எனர்ஜி பூஸ்டர். உணர்ச்சிபூர்வமான காட்சியை ஒற்றை என்கவுன்டரில் காலி செய்வது, உண்மையை மழுப்பும் வில்லன் தரப்பிடம் கோபத்தைக் கொட்டுவது என டெம்ப்போவைத் தக்கவைப்பதில் முக்கியப் பங்கு அவருக்கே!

* 15 ஆண்டுகளுக்கு முன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண் சீரியல் கில்லரின் வழக்கை ஒரு பெண் வழக்கறிஞர் தோண்டியெடுத்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவது என்ற சுவாரஸ்ய ஒன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, பின் பாதிக்கப்பட்டவர்களே அதற்கு வாழும் சாட்சிகளாக மாறிப்போவது என நடைமுறை நிகழ்வுகளைப் புகுத்தி ஒரு வலிமையான கருத்தைச் சொன்னதற்காக இயக்குநர் ஃப்ரெட்ரிக்குக்குப் பாராட்டுகள்.
* முதல் பாதி திரைக்கதை ட்விஸ்ட்களோடு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்க, இரண்டாம் பாதியில் ஏகத்துக்கும் சறுக்கியிருக்கிறார் இயக்குநர். நீதிமன்றத்துக்கு 'எவி'டென்ஸ் வேண்டும் என்று சொல்பவர்கள் கடைசியில் நீண்ட உரையாடல்கள் மூலமே கண்ணீர் மல்கி, கசிந்துருகி தீர்ப்பெழுதுவது அபத்தம். இரண்டாம் பாதியில் ட்விஸ்ட்கள் வைக்கிறேன் என்கிற பெயரில் புகுத்தியிருப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி. இயக்குநரின் புத்திசாலித்தனம் இரண்டாம் பாதி திரைக்கதையில் மிஸ்ஸிங்!

* கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் வந்ததும் ஸ்கிப் செய்யும் ரகத்தில் இருக்கிறது. தனது ஹோம் கிரவுண்டான பின்னணி இசையிலும் கோவிந்த் வசந்தா ஏமாற்றமே.
* ராம்ஜியின் கேமரா ஊட்டியின் பனிமேகங்களுக்கிடையே தூறலாய் இதமளிக்கிறது. முன் - பின் எனப் பாயும் திரைக்கதையில் த்ரில்லருக்கு உண்டான வெப்பத்தை நமக்குள் இறக்குகிறது ரூபனின் எடிட்டிங்.
* படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிப் பேசுகிறது. குழந்தைகள் நலன் கருதி சகல விவரங்களும் மறைக்கப்படும் நடைமுறையில் பார்வையாளர்களை அழவைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஷாட்கள் திணிக்கப்பட்டுள்ளன. கருத்துகள் சொல்வதில் இருக்கும் பொறுப்பு அதைப் படமாக்கும் விதத்திலும் இருக்கிறது என்பதை படைப்பாளிகள் உணர்தல் நலம்.

* பெண் சக்தியை முன்னிலைப்படுத்தும் படத்தில்கூட பெண்களையே கிண்டல் அடிப்பது எந்தவகையில் சரி? பெண் நீதிபதியை உருவகேலி செய்வது, மாமியார் - மருமகள் பிரச்னை, பொண்டாட்டித் தொல்லை எனப் பொதுமைப்படுத்தப்பட்ட உரையாடல்களை முழுவதுமாகத் தவிர்த்திருக்க வேண்டும்.
* பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் என ஏகப்பட்ட அனுபவம் வாய்ந்த இயக்குநர் கம் நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், பார்த்திபனைத் தவிர வேறு யாருக்குமே தேவையான ஸ்க்ரீன்ஸ்பேஸ் இல்லை. படத்தில் லாஜிக் ஓட்டைகளும் எக்கச்சக்கம்.

ஒரு முக்கியமான கதைக்களத்தை எடுத்துக்கொண்ட இயக்குநர், திரைக்கதை சுவாரஸ்யங்கள் வழியே இன்னும் அதிக மெனக்கெடலுடன் படமாக்கியிருந்தால் 'பொன்மகள் வந்தாள்' உண்மையிலேயே தரமான படைப்பாகியிருக்கும்.