Published:Updated:

``ஹிட் இல்ல... ஆனா, அப்பாவுக்கு அந்த ரெண்டு படங்கள்தான் பிடிக்கும்!'' - புஷ்பா கந்தசாமி #KB90

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி பேட்டி...

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் கோலோச்சியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். `இரு கோடுகள்', `அவள் ஒரு தொடர்கதை', `அபூர்வ ராகங்கள்', `தில்லு முல்லு', `சிந்து பைரவி', `புன்னகை மன்னன்', `புதுப்புது அர்த்தங்கள்' எனக் காலத்தைக் கடந்த பல படைப்புகளை உருவாக்கியவர். ரஜினி, கமல் என நடிகர்கள் யாராக இருந்தாலும் இவரது இயக்குநர் கறார் குறையாது. `டைரக்டர்ஸ் டச்' என்பதை தமிழ் சினிமாவில் உணரவைத்த கே.பாலசந்தர் பிறந்தது, 90 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூலை மாதத்தில்தான். கே.பி. நினைவுகள் குறித்து அவர் மகள் புஷ்பா கந்தசாமியிடம் பேசினேன்.

``வீட்ல எனக்கோ என் சகோதரர்களுக்கோ பிறந்த நாள்னா, அப்பாகிட்ட இருந்து பரிசுப் பொருள் தவறாம வந்துடும். அந்தப் பரிசுப் பொருளையும் அவரே கடைக்குப் போய் பொறுமையா செலக்ட் பண்ணி வாங்கிட்டு வருவார். எவ்வளவு பிஸியான வேலை நேரமா இருந்தாலும் சரி, அந்த பர்சேஸை என்ஜாய் பண்ணுவார். அவருடைய மறைவுக்குப் பின்னாடி வந்த என்னுடைய பிறந்த நாள்கள்லாம் ஒருவிதமான ஏக்கத்துடனேயே கடந்து போகுது’’ கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீரைக் கடந்தபடியே பேச ஆரம்பிக்கிறார்...

`` `சிந்து பைரவி’ல `இசைதான் மூச்சா இருக்கு'னு டயலாக் இருக்கும். அப்படித்தான் அப்பா. சினிமாதான் அவரோட மூச்சு. முதல்ல டிராமா மேல பெரிய காதலோட இருந்தார். பிறகு, சினிமாவுக்குள் வந்ததும் 24 மணி நேரமும் சினிமாதான் சிந்தனை. மத்த கம்பெனிகளுக்கு எவ்வளவோ ஹிட் படங்களை இயக்கினார். சொந்தமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பிறகு `கவிதாலயா’வுக்கு படங்கள் பண்ணார். ரஜினி, கமல்னு தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் அவரை குருன்னு கொண்டாடினாங்க. இப்படி எவ்வளவோ பண்ணிட்டு போயிருக்கார்.

`கோடம்பாக்கம் உங்களைக் கொண்டாடுறது இருக்கட்டும், உங்க படங்கள்ல நீங்க கொண்டாடின படங்களைப் பத்திச் சொல்லுங்கப்பா’னு நானே ஒருமுறை கேட்டிருக்கேன். `புன்னகை’ படத்தைச் சொன்னார். 1971-ல் வெளியான படம் இது. ஜெமினி கணேசன் நடிச்சிருப்பார். காந்தியவாதக் கொள்கையைப் பேசின படம். 50 வருஷத்துக்கு முன்னாடியே காந்தியம் பேசின படம்தான் அவருக்குப் பிடிச்சிருந்திருக்கு.

ரஜினி, பாலசந்தர்
ரஜினி, பாலசந்தர்

பிறகு, சொந்தத் தயாரிப்புல `அக்னி சாட்சி’யும் அவர் சிலாகிச்ச படம். சிவகுமார், சரிதா நடிப்பில் நுண்ணிய உணர்வுகளைச் சொன்ன படம். வணிக ரீதியா சுமாரா ஓடினாலும், இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பு உண்டு. ரஜினி, கமல் ரெண்டு பேருமே இந்தப் படத்துல சிறப்புத் தோற்றத்துல நடிச்சிருப்பாங்க.

ஓய்வான நேரத்துல அவருடைய சினிமாப் பயணத்தைக் கேட்டு உட்கார்ந்தா, மணிக்கணக்குல போகும். தான் அறிமுகப்படுத்தின நடிகர், நடிகைகளின் திறமைகளைப் பற்றிப் பேசுவார். `தண்ணீர் தண்ணீர்’ பத்திப் பேசறப்ப சரிதாவின் நடிப்பைச் சொல்வார். அப்பாவின் டைரக்‌ஷன்ல அதிக படங்கள்ல நடிச்சவங்க அவங்கதான்னு நினைக்கிறேன். `அச்சமில்லை அச்சமில்லை’ படம்தான் அதிக உடலுழைப்பை வாங்கிய படம்னு குறிப்பிட்டிருக்கார். ராஜேஷ், சரிதா நடிச்சிருப்பாங்க. குற்றாலத்துல மலை உச்சிக்குப் போய் அங்க இருக்கிற அருவியில ஷூட்டிங் நடத்தின அனுபவத்தையெல்லாம் பகிர்ந்திருக்கார். அந்த நினைவுகள்லாம் அவருக்கு கடைசி வரை மனசுல பதிஞ்சிருந்தது.

அவருடைய சினிமா அனுபவங்கள்ல இருந்து நான் கத்துக்கிட்டது, வெற்றி தோல்விகளை சமமா எடுத்துக்கணும்கிறதைத்தான். ஒரு படம் கொஞ்சம் சரியாப் போகலைன்னா ரெண்டு நாள் உட்கார்ந்து யோசிப்பார். மூணாவது நாள் அந்த யோசனையில இருந்து மீண்டு, அடுத்த படத்துக்கு நகர்ந்துடுவார். படம் ஹிட்டானாலும் அதேதான். சொல்லப்போனா, படம் ஹிட்டாச்சுன்னா ஒருநாள் முன்னாடியே அடுத்த படம் பத்தின பேச்சைத் தொடங்கிடுவார்.

சினிமாவைத்தாண்டி தோட்டம் பராமரிக்கிறது ரொம்ப பிடிக்கும். வீட்டுச் செடிகொடிகளை அவ்வளவு அழகா கட் பண்ணிவிடுவார். தம்பி குடும்பம், தங்கை குடும்பம்னு உறவுகள் எல்லார் மீதும் அக்கறையா இருப்பார். அவங்க வீடுகள்ல நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளையும் முன்னாடி நின்னு நடத்தி வைப்பார். ஆலோசனை சொல்வார். இதையெல்லாம் விருப்பப்பட்டுச் செய்வார்.

ரஜினியும், கமலும் அப்பாவுக்கு ரெண்டு கண்கள். இதை நான் சொல்லலை. அப்பாவே சொன்னதுதான். இந்தப் பிறந்த நாளுக்குமே அவங்க ரெண்டு பேருமே அப்பாவை நினைவுகூர்ந்து பேசியிருந்தாங்களே! ரஜினி சாரைப் பொறுத்தவரை அப்பா, அம்மா, அண்ணன்னு தன்னுடைய மூணு குடும்ப உறவுகளுக்கு அடுத்த இடத்துல அப்பாவை வெச்சிருக்கார். இந்த நான்கு பேர்தான் தன் வாழ்க்கையில தெய்வங்கள்னு குறிப்பிடறார். கமல் சாருக்கும் அப்பாவுக்குமான நட்புமே அப்பா பிள்ளை உறவுதான்'' என்றவரிடம் ரஜினியின் `மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி குறித்து கேட்டேன்.

கே.பாலசந்தர், புஷ்பா கந்தசாமி
கே.பாலசந்தர், புஷ்பா கந்தசாமி

``அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, நம்முடைய பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகிட்ட அந்த சீரிஸ்ல ரஜினியும் வந்தா நல்லாயிருக்கும்னு டிஸ்கவரி சேனல் தரப்புல இருந்து எங்ககிட்ட கேட்டாங்க. ஒரு சர்வதேச நிகழ்ச்சி அது. ரஜினி சாரும் டெலிவிஷன்ல இதுவரைக்கும் இப்படி ஒரு நிகழ்சில வந்தது கிடையாது. அப்பாதான் ரஜினியை சினிமாவுல அறிமுகப்படுத்தினார். அவரோட 100-வது படமான `ராகவேந்திரா’வை நாங்கதான் தயாரிச்சோம். இப்படி ரஜினி சார் வாழ்க்கையில முக்கியமான விஷயங்கள்ல நாங்க இருந்திருக்கோம்கிறதால, இந்த முயற்சியும் நம்மளோடதாவே இருக்கட்டுமேன்னு நினைச்சுக் கேட்டோம். உடனே சம்மதிச்சுட்டார்.

அதுக்கான ஷூட்டிங் பந்திப்பூர் காடுகள்ல நடந்தப்ப ரஜினி சாரைக் கூட்டிட்டுப் போய் பத்திரமா கூட்டிட்டு வர்றது எங்க பொறுப்பா இருந்தது. அந்த ஷோவை நடத்தற பியர் கிரில்ஸ் ரஜினி சாருடைய சிம்ப்ளிசிட்டியைப் பார்த்து ரொம்பவே வியந்து போனார். மறக்க முடியாத நாள்கள் அது’’ என்றார் புஷ்பா கந்தசாமி.

அடுத்த கட்டுரைக்கு