Published:Updated:

``நான் பேசியதில் தவறில்லை... பெண்கள் எல்லை மீறக்கூடாது!'' - பாக்யராஜின் விளக்கம்?!

பாக்யராஜ்
பாக்யராஜ்

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி பாக்யராஜ் பேசிய பேச்சுதான் சர்ச்சைக்குக் காரணம். இந்தப் பேச்சைக் கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் தயாராகிவருகின்றன. அப்படி என்ன பேசினார் பாக்யராஜ்.

கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இந்தப் பேச்சைக் கண்டித்து மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் தயாராகிவருகின்றன. அப்படி என்ன பேசினார் பாக்யராஜ்?!

பாக்யராஜ்
பாக்யராஜ்

`கருத்துகளை பதிவு செய்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், ``போன்கள் வந்தவுடனேயே பெண்களிடம் கட்டுப்பாடு போய்விட்டது. கட்டுப்பாடு இல்லாததால்தான் போனிலேயே குசுகுசுவென பெண்கள் பேசுக்கொண்டிருக்கிறார்கள். `பசங்க சிம்மைதான் மாத்துறாங்க... ஆனா, பெண்கள் 2, 3 போனையே மாத்துறாங்க' என சினிமாவில் வசனம் வைக்கும் அளவுக்கு இன்று பிரச்னை இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று முன்பு ஒரு பட்டிமன்றத்தில் சொல்லியிருந்தேன்.

அதையேதான் இப்போதும் சொல்கிறேன். பெண்கள் நீங்கள் இடம்கொடுப்பதால்தான் தவறு நடக்கிறது. வெறுமனே பசங்களை மட்டும் தப்பு சொல்லக்கூடாது. வள்ளுவர் கற்பைப் பற்றி யாருக்கு எழுதினார்? பெண்களுக்குத்தான் எழுதினார். ஆம்பள தப்புப்பண்ணா போறபோக்குல பண்ணிட்டு வந்துடுவான். ஆனால் பெண்கள் தப்பு பண்ணால் அது பெரிய விஷயமாகிடும். ஆண் சின்னவீடு வெச்சிட்டான்னா அந்த வீட்டுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் பண்ணிடுவான். பெரிய வீட்டை டிஸ்டர்ப் பண்ணமாட்டான்.

பாக்யராஜ்
பாக்யராஜ்

ஆனால், கள்ளக்காதலால் பெண்கள் கொலை செய்யும் அளவுக்குப் போகிறார்கள். அதுக்குத்தான் லேடிஸ் கன்ட்ரோல்ல இருக்கணும். அவங்களை லிமிட்ல வெச்சிருக்கணும். இந்த டெலிபோன்ல தப்பு நடக்க வாய்ப்பியிருக்கு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளில் பெண்கள் மீதும் தவறு உள்ளது. பெண்ணுடைய வீக்னஸை பசங்க பயன்படுத்திக்கிட்டாங்க'' என்றார்.

இந்தப் பேச்சுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் அவரிடம் பேசினோம்.

``பாலியல் அத்து மீறல்கள் நடைபெறும் போது, அதில் ஆண், பெண் என இருவர் மீதுமே தவறு இருக்கிறது. அதில் பெண்கள் கூடுதல் கவனமாக இருந்தால் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்ற ரீதியில்தான் நான் பேசினேன். உதாரணமாக ஒரு திரைப்படமோ அல்லது சீரியலோ அதில் வரும் சீரியஸான, மனதை பாதிக்கும் சூழலில் ஒரு காட்சி அமைக்கும் போது அதைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக கதாசிரியரை திட்ட மாட்டார்கள். திரையில் வரும் கதாபாத்திரங்களின் மீதுதான் தங்களது கோபத்தைக் காட்டுவார்கள். அதுபோலத்தான் நமது கலாசாரத்தில் பெண்களை தெய்வமாக நினைக்கிறோம். ஆனால், இது போன்ற தவறுகள் நடக்கும் போது, பெண்கள் கூடுதல் கவனமாக இருந்திருந்தால் பிரச்னையைத் தவிர்க்க முடியும் என்ற எண்ணம் வருகிறது. சுயக்கட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் தேவை. அப்போதுதான் கள்ளக்காதல் போன்ற சமாசாரங்களைத் தவிர்க்க முடியும்.

பாக்யராஜ்
பாக்யராஜ்

எங்கள் காலத்தில் இருந்தது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது இருக்கும் பெண்களுக்கு இல்லை. அவர்களுக்கு எல்லா விதமான சுதந்திரங்களும் தொழில் நுட்ப வளர்ச்சி மூலம் கிடைக்கிறது. தன் மனைவியைத்தவிர மற்ற பெண்களைப் பார்த்து பேசும் போது பெண்களின் வயதிற்கேற்ப தங்கையாகவோ, அம்மாவாகவோ, அக்காவாகவோ நினைத்து, அவர்கள் கண்களைப் பார்த்து பேசுவதுதான் ஆம்பிளைத்தனம். அதேபோல பெண்களும் அவர்கள் தவறு செய்ய நினைக்கும் போது 'ஆம்பள தானே' என்று அனுமதிக்கக் கூடாது. ஆண்களிடம் எல்லை மீறக்கூடாது. அப்படி அவர்கள் அனுமதிக்கும் போதுதான் அவர்கள் மீதான மரியாதை குறைகிறது.

ஆணாதிக்கம், பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் குடிப்பதும், புகைப்பிடிப்பதும் என தங்களது ஒழுக்கத்திலிருந்து தவறும்போது பயமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அவர்கள் எல்லை மீறிப்போகிறார்களோ என்று தோன்றுகிறது. ஏனெனில், பெண்கள் தவறு செய்யும்போதும், அதை அனுமதிக்கும்போதும் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது.

பாக்யராஜ்
பாக்யராஜ்

எனவே, தவறு நடக்க பெண்களும்தான் காரணம் என்ற ரீதியில் தான் சொன்னேனே தவிர பெண்கள் மட்டும்தான் எனச் சொல்லவில்லை. நான் பேசியதில் தவறு இல்லை. நான் சொன்ன கருத்தை சரியாகப் புரிந்துகொள்ளாததுதான் இத்தனை எதிர்ப்புகளுக்கும் காரணம். இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் உண்மையை தைரியமாக முன்வைத்தேன் என தொலைபேசி மூலம் எனக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்" என்றார் பாக்யராஜ்!

பாலசந்தர் `தைரியம்'... பாக்யராஜ் `கேரக்டர்'... பாரதிராஜா `அழுத்தம்'! #VikatanVintage
அடுத்த கட்டுரைக்கு