Published:Updated:

காதல் மன்னன் #VikatanReview

காதல் மன்னன்
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் மன்னன்

படம் பாத்துட்டு, `அஜித் மாதிரி மாப்ளை வேணும்'னு அடம் பிடிச்சவங்க பல பேரு..!

ன்றைய தேதியில்‌ ஒட்டு மொத்தத்‌ தமிழ்த்‌ திரையுலகமும்‌ காதல்‌ எனும்‌ காவியத்தின்‌ பல்வேறு அத்தியாயங்களை உரக்கப்‌ படித்துக்கொண்டிருக்க, கல்யாணத்துக்‌கும்‌ காதலுக்கும்‌ இடையே சிக்கிச்‌ சுழல்கிற சுவையான, போகப்‌ போக 'லப்‌ டப்‌'பை எகிறவைக்கிற படம்‌ தந்திருக்கிறார்‌ புதுமூக டைரக்டர்‌ சரண்‌. மற்றபடி தலைப்புக்கும்‌ கதைக்‌கும்‌ எந்தத்‌ தொடர்பும்‌ இல்லை!

'காதல்‌ என்றாலே ஏதோ பாவ காரியம்‌' என்று அப்பாவால்‌ போதிக்கப்பட்ட மானு, கரணுடன்‌ நடந்துவிட்ட தன்‌ நிச்சயதார்த்தத்தையும்‌, சிடுசிடு அப்பாவின்‌ கண்டிப்பையும்‌ மீறி எப்படி அணுஅணுவாகக் காதலில்‌ சிக்கித்‌ தவிக்கிறார் என்பது ரசிக்கும்படியாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

காதல் மன்னன்
காதல் மன்னன்

மேற்படி. சீரியஸ்‌ கதையைச் சொல்ல இயக்குநர் அவ்வப்போது சற்று தமாஷான காட்சியமைப்புகளுக்குள் போய்ச் சறுக்குவதுதான் கொஞ்சம் நெருடுகிறது!

இளமைத் துள்ளலுடன் அதிரடி ஹீரோவாக அஜீத் இந்தப் படத்தில் அட்டகாசமாகவே வர, அவருக்குத் துணையாக கதையை படுஸ்பீடில்‌ நகர்த்தியிருப்பவர்‌ இரண்டாம்‌ ஹீரோ அந்தஸ்து பெற்றுள்ள விவேக்!‌

கவர்ச்சியான வில்லன்‌ கரண்‌, ‘லோ பட்ஜெட் பிரகாஷ்ராஜ்’ போல மாறாத நடிப்பு. நல்லகாலமாக எலெக்ட்ரிக்‌ பட்டாசுகள்‌ மாதிரியான ‘வில்ல வசனங்கள்’ அவரைக்‌ கைதாக்கி விடுகின்றன.

பட யூனிட்டில்‌ ‘வொர்க்‌ ஷாப்‌’ மெக்கானிக் யாராவது இருப்பார்களோ என்று சந்தேகம் ஏற்படும்‌ அளவுக்கு, 'கார்‌ புகை' அப்பா, கார்‌ ரேஸ்‌ வில்லன்‌, 'டூ வீலர்‌ மெக்கானிக்‌' ஹீரோ, கார் பாம்‌ க்ளைமாக்ஸ்‌ என்று அயிட்டங்கள்‌ நிறைய!

சற்றே முன்னாள்‌ இந்தி நடிகை மீனாகுமாரி, சற்றே மாலாசின்ஹா சாயலில்‌ மானு, தமிழுக்குப்‌ புது வரவு. தொடை, இடை கவர்ச்சி காட்டாமல் கண்களில்‌ பாவங்களிலே நம்மை மயக்குகிறார்‌!

கடைசிக்‌ கட்டங்களில்‌ அஜீத்‌ மீது முழுசாக காதல்‌ வயப்பட்ட. பின்பும்‌, 'என்‌ கல்யாணத்துக்கு நீங்க கட்டாயம்‌ வரணும்‌... இருந்து சாப்பிட்டுட்டு போகணும்‌' என்றெல்லாம்‌ மானு கேட்டுக்கொள்வது காதலுக்கு அவமரியாதை! அதேபோல படம்‌ பார்ப்பவர்களுக்கு 'ஆண்டவா! அஜீத்‌-மானு எப்படியாவது ஒன்று சேர்ந்துவிடணுமே' என்ற துடிப்பும்‌, தவிப்பும்‌ 'ஜெயலலிதா அந்த லெட்டரை அனுப்பணுமே' என்கிற அளவுக்குக்‌ கூட ஏற்படுவதில்லை!

காதல் மன்னன்
காதல் மன்னன்

படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்களில் நம்பர்‌ ஒன்‌ 'ராங்க்‌' எடுப்பவர்‌ புது இசையமைப்பாளர்‌ பரத்வாஜ், ஸ்பெஷலாக ‘உன்னைப்‌ பார்த்த பின்புதான்‌' மெட்டுக்கு இவருக்கும்‌, அதில்‌ உயிரையே தந்திருக்கும் எஸ்‌.பி.பி-க்கும்‌ பல்‌ ஃப்ளையிங்‌ கிஸ்கள்‌! முன்பாதி படம் முழுக்க புத்திசாலித்தனமான பின்னணி இசையில் சுவையான பாடல்களைக் கலந்து இவர் தந்திருப்பது படத்தின் வேகத்தைக் கூட்டும் ஆக்ஸிலேட்டராகப் பயன்பட்டிருக்கிறது. கீப் இட் அப்!

காதல் மன்னன்
காதல் மன்னன்

படம் பார்க்க வந்திருக்கிற இளைஞர்களை எரிச்சல் படுத்துவதற்காகவே எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘அந்தக் காலத்துல’ டைப் வசனங்களோ? அவர் அந்தக் காலத்துப் பாட்டையும் இசையையும் தூக்கிப் பேசினாலும் ‘அதுக்கு என்ன இப்போ?’ என்றே கேட்கத் தோன்றுகிறது!

‘பந்தய’ விஷயத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் ‘கிறீச்சிடும்’ டெலிபோனில் ‘ஷிவா, ஷிவா, ஷிவா’என்றே மானுவை அஜீத் சொல்ல வைக்கும் நயமான ஐடியாவும் அதனால் ஏற்படும் பரபரப்பும் படத்தில் பளிச்!

ஆங்காங்கே காமெடியும், சீரியஸ்னெஸ்ஸும் ஏதோ பொரியலும், பாயசமும் கலந்தது போல நம் ரசிப்புக்கு இடையூறுகள் விளைவித்தாலும், கூடவே மினிமினியான ரசிப்பான விஷயங்களும், பார்த்து அலங்கரிக்கப்பட்ட லொகேஷன்களும் - குறிப்பாக புதிய கோணங்களில் தாஜ்மஹால் - பரவசப்படுத்துகின்றன!

- விகடன் விமர்சனக்குழு

(22.03.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)